அப்படியே வராதீங்க... சொதப்பும் தெலுங்கு படைப்புகள்! - சிவகார்த்திகேயன், விஜய் வரிசையில் சிக்கிய தனுஷ்?
தமிழ் சினிமாவில் தெலுங்கு இயக்குநர்கள் வருகை ஒருபுறமிருந்தாலும், அவர்கள் முன்னணி நடிகர்களை வைத்து இயக்கும் படங்கள் ரசிகர்களை கவர தவறுவதாக கருத்து எழுந்துள்ளது.
தமிழ் சினிமாவில் தெலுங்கு இயக்குநர்கள் வருகை ஒருபுறமிருந்தாலும், அவர்கள் முன்னணி நடிகர்களை வைத்து இயக்கும் படங்கள் ரசிகர்களை கவர தவறுவதாக கருத்து எழுந்துள்ளது.
தமிழ் சினிமாவில் பிற மொழி இயக்குநர்களின் வருகை என்பது பல காலமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக மலையாள இயக்குநர்கள் நேரடியாக தமிழில் படம் இயக்கி ரசிகர்களை கவர்ந்தனர். அமுத்தமாக கதைகள் தாண்டி தமிழ் சினிமாவுக்கு ஏற்ற மாதிரியான காட்சி அமைப்புகள் இருந்ததாலேயே அத்தகைய படங்கள் வெற்றி பெற்றது என சொல்லலாம். அந்த வகையில் சமீபகாலமாக தெலுங்கு இயக்குநர்களின் வருகை தமிழ் சினிமாவில் அதிகரித்து வருகிறது.
ஆனால் தெலுங்கு சினிமாவின் மேக்கிங் ஸ்டைல் என்பது தமிழ் சினிமாவை ஒப்பிடும் போது முற்றிலும் வேறாக உள்ளது. அங்கு லாஜிக் இல்லாத ஆக்ஷன் காட்சிகள் இங்கு இணையத்தில் ட்ரோல் செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. பிரபாஸ், பாலகிருஷ்ணா ஆகியோரின் படங்கள் இந்த ட்ரோலில் அதிகளவில் இடம் பெறும். ஆனாலும் தமிழில் நேரடியாக படம் இயக்க தெலுங்கு சினிமா இயக்குநர்கள் கோலிவுட்டுக்கு வர தொடங்கியுள்ளனர்.
அப்படி வருபவர்கள் தமிழ் சினிமாவின் கதைக்களத்தை புரிந்து கொள்ளாமல் அப்படியே தெலுங்கு மேக்கிங் ஸ்டைலை கையில் எடுப்பதால் தொடர்ந்து படங்கள் சொதப்புகிறது.
சிவா தொடங்கி தனுஷ் வரை...
இதில் முதலில் சிக்கியவர் சிவகார்த்திகேயன். கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியான பிரின்ஸ் படத்தை தெலுங்கு திரைப்பட இயக்குனரான அனுதீப் இயக்கியிருந்தார். ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளோடு வெளியான இப்படம் படுதோல்வியடைந்தது. தொடக்கம் முதலே எதிர்பார்க்க வைத்து இப்படம் ஏமாற்றியதால் சிவாவின் ரசிகர்கள் அதிருப்தியடைந்தனர்.
மேலும் பிரின்ஸ் பட நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படத்தை தயாரித்த நிறுவனத்துடன் இணைந்து நஷ்டத்தொகையில் 50 சதவிகிதமான ரூ.6 கோடியை விநியோகஸ்தருக்கு திருப்பி கொடுத்த சம்பவமும் நிகழ்ந்தது.
இதனைத் தொடர்ந்து விஜய்யின் வாரிசு படம் கடந்த பொங்கலுக்கு வெளியானது. பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சியின் கைவண்ணத்தில் உருவான இப்படம் பேமிலி ஆடியன்ஸை கவர்ந்தாலும், விஜய் ரசிகர்களை கடும் ஏமாற்றத்திற்குள்ளாக்கியது. படம் வசூலில் ரூ.300 கோடியை தொட்டாலும், விஜய் ரசிகர்களின் மனதை நிறைக்கவில்லை என்பதே உண்மை.
இந்த பட்டியலில் 3வதாக இணைந்துள்ளார் நடிகர் தனுஷ். தெலுங்கு திரைப்பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகியுள்ள வாத்தி திரைப்படம் ரசிகர்களை கவர தவறியுள்ளது. கதை பலமாக இருந்தாலும், திரைக்கதையில் நிகழும் சொதப்பல்கள் மொத்தமாக பின்னடைவை ஏற்படுத்தி விடுகிறது. நிச்சயம் தமிழ் சினிமா ரசிகர்கள் யாரும் எந்த மொழி இயக்குநர்களின் திறமையையும் குறைவாக மதிப்பிடுவது இல்லை. ஆனால் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்து விட்டு அதனை பொய்யாக்கும் போதே விமர்சனங்கள் எழுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.