Takkar Box Office Collection: இன்னும் கொஞ்சம் அதிகமா இருந்திருக்கணுமோ..? டக்கர் ஒரு வாரம் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்..
பத்து கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் டக்கர் படத்தின் முதல் வாரம் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனைப் பார்க்கலாம்
ஃபேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், கார்த்திக் ஜி க்ரிஷ் இயக்க நடிகர் சித்தார்த் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் 'டக்கர்’. நடிகை திவ்யான்ஷா இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். யோகிபாபு, விக்னேஷ் காந்த், அபிமன்யு சிங், ராம்தாஸ் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
டக்கர்
டக்கர் திரைப்படம் நீண்ட காலமாக எடுக்கப்பட்டு வந்த நிலையில், தமிழ் மற்றும் தெலுங்கில் இப்படம் ஜூன் 9-ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் முதல் பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், டக்கர் திரைப்படம் உலகம் முழுவதுமுள்ள திரையரங்குகளில் கடந்த 9-ஆம் தேதி வெளியானது.
கதைச்சுருக்கம்
பணக்காரனாக ஆகவேண்டும் என்று சென்னைக்கு கிளம்பி வருகிறார் குணசேகரன் ( சித்தார்த்) . ரெஸ்டாரெண்ட், பார், ஜிம் என்று ஒவ்வொரு இடமாக வேலை செய்து அங்கு தனது தன்மானத்தை விட்டுக்கொடுக்காமல் இருப்பதால் அவரால் அந்த வேலையில் நிலைத்து இருக்க முடிவதில்லை. எல்லா வேலைகளையும் விட்டு கடைசியாக பென்ஸ் கார் ஒன்றிற்கு டிரைவராக இருக்கிறார். சென்னையில் போதைப்பொருள், ஆள் கடத்தல், ரவுடியிஸம் ஆகிய அனைத்தும் கிடைக்கும் ஒரு இடம் காட்டப்படுகிறது. சந்தர்ப்ப சூழலால் இந்த ஏரியாவுக்கு வரும் சித்தார்த் அங்கிருந்த கார் ஒன்றை எடுத்துச் செல்கிறார். அந்த காரில் கடத்தப்பட்ட பணக்கார பெண்ணான ஹீரோயின் இருக்கிறார். இவர்களின் வாழ்க்கை எப்படி இணைகிறது? சித்தார்த் தன் லட்சியத்தை அடைந்தாரா? என்பதே இப்படத்தின் கதையாகும்.
கோலிவுட்டைக் காட்டிலும் தெலுங்கில் ஏற்கெனவே பிரபல நடிகராக சித்தார்த் வலம் வரும் நிலையில், இப்படம் அங்கு இன்னும் வசூலைக் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம்
இந்நிலையில், டக்கர் படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 2.43 கோடிகள் வசூலித்துள்ளதாக இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான பேஷன் ஸ்டுடியோஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
தொடர்ந்து இரண்டாவது நாளில் இந்தியாவில் மட்டுமே 85 லட்சமும் முன்றாவது நாளாக 85 லட்சமும் வசூல் செய்துவந்த டக்கர் திரைப்படம் நான்காவது நாள் 56 லட்சமும் ஐந்தாவது நாளில் 55 லட்சம் மட்டுமே வசூல் செய்துள்ளது. இன்று ஆறவது நாளின் இறுதியில் 55 லட்சம் வசூல் செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில் டக்கர் திரைப்படம் முதல் வாரத்தில் தோராயமாக ரூ. 4.21 கோடி வசூல் செய்துள்ளது.
தொடக்கத்தில் டக்கர் படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்து வந்த நிலையில் படம் சுமாரான விமர்சனங்களைப் பெறவே அடுத்தடுத்த நாட்களில் குறைவான வசூலை ஈட்டியதற்கான காரணமாக கூறப்படுகிறது. மேலும் டக்கர் படம் வெளியான அதே சமயத்தில் வெளியான போர் தொழில் திரைப்படம் திரையரங்குகளில் மிகப்பெரிய வெற்றியை நோக்கி நகர்ந்துகொண்டிருப்பதும் மற்றொரு காரணம் என கூறலாம்.