Suriya Birthday: நடிகர் சூர்யா பிறந்தநாளில் சோகம்.. பேனர் வைக்க முயன்ற 2 இளைஞர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு..
நடிகர் சூர்யாவின் பிறந்தநாளுக்கு பேனர் வைக்க முயன்ற 2 இளைஞர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சூர்யாவின் பிறந்தநாளுக்கு பேனர் வைக்க முயன்ற 2 இளைஞர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சூர்யா பிறந்தநாள்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள சூர்யா இன்று தனது 48வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவரது ரசிகர்கள் இன்று பல்வேறு நலத்திட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிப்பது, அன்னதானம், இரத்ததானம், கல்வி உபகரணங்கள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். அதேபோல் ரசிகர்கள் போஸ்டர், பேனர், சூர்யா படத்தின் ரீ- ரிலீஸ் என அவரது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
அப்டேட் கொடுத்த கங்குவா டீம்
இதற்கிடையில் பிறந்தநாள் ஸ்பெஷல் ஆக நடிகர் சூர்யா 10க்கும் மேற்பட்ட தோற்றங்களில் நடிக்கும் கங்குவா படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ நள்ளிரவு 12.01 மணிக்கு வெளியானது. மிரட்டும் கிராபிக்ஸ் காட்சிகளுடன் வெளியான வீடியோ திரையுலகினரிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தில் திஷா பதானி ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்தராஜ், ரவி ராகவேந்திரா, கே.எஸ்.ரவிக்குமார், பி.எஸ்.அவினாஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ள இந்த படம் 2024 ஆம் ஆண்டு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கங்குவா படம் 3டி தொழில்நுட்பத்தில் 10 மொழிகளில் வெளியாகவுள்ளது.
ரசிகர்கள் உயிரிழப்பு
இப்படியான நிலையில் சூர்யாவின் பிறந்தநாளுக்கு பேனர் வைக்க முயன்ற வெங்கடேஷ் மற்றும் சாய் என்ற 2 இளைஞர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.உயிரிந்தவர்களுக்கு 19, 20 வயது தான் இருக்கும் என்றும், கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளனர். அவர்களின் எதிர்பாராத உயிரிழப்பு சக சூர்யா ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்திய நிலையில், இருவரின் உடல்களும் நரசராவ்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நேற்று நள்ளிரவு பேனர் வைக்க முயன்றபோது மேலே சென்ற உயர்மின்னழுத்த கம்பி உரசியதால் இருவரும் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.