Poovellam Kettuppar: சூர்யா, ஜோதிகா லவ்வுக்கு பிள்ளையார் சுழி போட்ட படம்.. ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ ரிலீசாகி 24 வருமாச்சு..!
தமிழ் சினிமாவின் வித்தியாசமான இயக்குநர்களில் ஒருவரான வசந்த் இயக்கிய பூவெல்லாம் கேட்டுப்பார் படம் வெளியாகி இன்றோடு 24 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
தமிழ் சினிமாவின் வித்தியாசமான இயக்குநர்களில் ஒருவரான வசந்த் இயக்கிய பூவெல்லாம் கேட்டுப்பார் படம் வெளியாகி இன்றோடு 24 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
சூர்யாவும் வசந்தும்
வசந்த் இயக்கிய நேருக்கு நேர் படத்தின் மூலமாகத்தான் நடிகர் சூர்யா திரைத்துறையில் அறிமுகமனார். இதனைத் தொடர்ந்து மீண்டும் இருவரும் இணைந்த படம் “பூவெல்லாம் கேட்டுப்பார்”. இந்த படம் நடிகை ஜோதிகாவுக்கு தனி ஹீரோயினாக முதல் படம். மேலும் இந்த படத்தில் நாசர், விஜயகுமார், அம்பிகா, வடிவேலு, கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
படத்தின் கதை
விஜயகுமார் மற்றும் நாசர் என்ற நண்பர்கள் இரட்டை இசையமைப்பாளராக படங்களில் பணியாற்றுகின்றனர். ஒரு பிரச்சினையில் விஜயகுமார் பிரிந்து தனியாக இசையமைக்க தொடங்குகிறார். இதனால் இருவரிடையே பகை ஏற்படுகிறது. இதற்கிடையில் விஜயகுமாரின் மகன் சூர்யாவுக்கும், நாசரின் மகள் ஜோதிகாவுக்கு காதல் ஏற்படுகிறது. இருவரும் தங்கள் அடையாளங்களை மறைத்து ஒருவர் வீட்டுக்குள் ஒருவர் சென்று பிரச்சினைக்கு தீர்வு கண்டு தங்கள் காதலில் ஜெயித்தார்களா என்பதே இப்படத்தின் கதையாகும்.
இப்படத்திற்கு முதலில் காதல் என்று பெயரிடப்பட்ட நிலையில் பின்னர் பூவெல்லாம் கேட்டுப்பார் என மாற்றப்பட்டது. இந்த படம் அதே ஆண்டில் வெளியான ஜோடி படத்தின் கதைக்களத்தை ஒத்திருந்தது பெரிய சர்ச்சையை கிளப்பியது.
யுவனின் ஆல்டைம் பேவரைட் ஆல்பம்
பூவெல்லாம் கேட்டுப்பார் படத்திற்கு இசையமைக்கும் போது யுவன் ஷங்கர் ராஜாவின் வயது 18 தான் என்பது நம்ப முடியாத தகவல். இந்த படத்தின் போது வசந்தின் மொபைலை வாங்கி அதில் யுவன் கேம் விளையாடிக் கொண்டு இருப்பாராம். ஆனால் மிகவும் முதிர்ச்சியான இசையை வழங்கியிருப்பார். சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே, பூவே பூவே, ஓ சென்யோரீடா, இரவா பகலா ஆகிய பாடல்கள் இன்றைக்கும் ரசிகர்களின் ஆல்டைம் பேவரைட் லிஸ்டில் உள்ளது.
காதலுக்கு பிள்ளையார் சுழி
தமிழ் சினிமாவில் இன்றளவும் கொண்டாடப்படக் கூடிய நட்சத்திர தம்பதியினர் காதலுக்கு ஒருவகையில் இந்த படம் தான் பிள்ளையார் சுழி போட்டது என கூறலாம். கிட்டதட்ட 8 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் காதலித்து பின்னர் 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Jailer Pre Booking: ‘நல்லாருக்கு உங்க நியாயம்’: தொடங்கியது ஜெயிலர் பட டிக்கெட் முன்பதிவு.. கொந்தளித்த ரசிகர்கள்..!