(Source: ECI/ABP News/ABP Majha)
Rajini On Maamannan: சமத்துவத்தை கொண்டாட வைக்கும் மாமன்னன்: நேரில் அழைத்து பாராட்டிய ரஜினி; பதிலுக்கு மாரி போட்ட ட்வீட்!
சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான படைப்பு. அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.
மாமன்னன் படம் பார்த்துவிட்டு இயக்குநர் மாரிசெல்வராஜை நடிகர் ரஜினிகாந்த் நேரில் அழைத்து பாரட்டு தெரிவித்தார்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே கடந்த ஜூன் 29 ஆம் தேதி மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘மாமன்னன்’ படம் தியேட்டரில் வெளியானது. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால், சுனில் என பலரும் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றுள்ளது. இந்த படம் உதயநிதியின் கடைசிப்படம் என்பதால் ஒட்டுமொத்த திரையுலகமும், ரசிகர்களும் பெரிய எதிர்ப்பார்ப்புடன் தியேட்டருக்கு படையெடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் “சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான படைப்பு. அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். மிகச் சிறப்பாக நடித்திருக்கும் வடிவேலு, உதயநிதி, பகத் பாசில் ஆகியோருக்கு எனது வாழ்த்துகள்” எனத் தெரிவித்தார்.
என் முதல் இரண்டு படங்களான பரியேறும் பெருமாளையும் கர்ணனையும் பார்த்து பாராட்டியதை போல என் மூன்றாவது படமான மாமன்னனையும் விருப்பத்தோடு பார்த்து பேரன்போடும் பெரும் ப்ரியத்தோடும் நேரில் அழைத்து மனதார பாராட்டிய நமது சூப்பர்ஸடார் @rajinikanth சார் அவர்களுக்கு என் இதயத்திலிருந்து… pic.twitter.com/O2eocTMJwq
— Mari Selvaraj (@mari_selvaraj) July 4, 2023
இதைத்தொடர்ந்து இயக்குநர் மாரிசெல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், “என் முதல் இரண்டு படங்களான பரியேறும் பெருமாளையும் கர்ணனையும் பார்த்து பாராட்டியதை போல என் மூன்றாவது படமான மாமன்னனையும் விருப்பத்தோடு பார்த்து பேரன்போடும் பெரும் ப்ரியத்தோடும் நேரில் அழைத்து மனதார பாராட்டிய நமது சூப்பர்ஸடார் ரஜினிகாந்த் சார் அவர்களுக்கு என் இதயத்திலிருந்து நிரம்பி வழியும் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் அமைச்சரும் நடிகருமான உதயநிதிக்கும் வாழ்த்துகள் தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளித்து நடிகர் உதயநிதி ட்வீட் செய்துள்ளார். அதில், “சமத்துவம் போற்றும் #மாமன்னன் திரைப்படத்தைப் பார்த்து அன்போடு வாழ்த்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் அவர்களுக்கு #மாமன்னன் திரைப்படக்குழு சார்பில் அன்பும், நன்றியும்.” எனத் தெரிவித்துள்ளார்.