Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
தேவா பட வாய்ப்புகள் இல்லாமல் துவண்டிருந்த தருணத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவருக்கு மிகப்பெரிய உதவி செய்தது பற்றி கீழே காணலாம்.

தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத இசை சாம்ராஜ்யத்தை நடத்தியவர் தேவா. 1990 காலம் முதல் இசை சாம்ராஜ்யத்தை நடத்திய தேவா தன்னுடைய 75வது வயதில் இன்று காலமானார்.
தேவாவை உச்சத்திற்கு கொண்டு சென்ற அண்ணாமலை:
ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், சரத்குமார், விஜய், அஜித், பிரசாந்த், தனுஷ், சிம்பு என தமிழ் சினிமாவில் கோலோச்சிய அனைத்து நட்சத்திரங்களுக்கும் இசையமைத்துள்ளார். எத்தனை பிரபலங்களுக்கு தேவா இசையமைத்தாலும் தேவாவை உச்சத்திற்கு கொண்டு சென்றதில் ரஜினிகாந்தின் திரைப்படங்கள் மிகவும் தவிர்க்க முடியாதது.
ராமராஜன், சரத்குமார் உள்ளிட்ட நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்த தேவாவிற்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது அண்ணாமலை. ரஜினிகாந்தையும் இந்த படம் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. ரஜினியின் அண்ணாமலை, அருணாச்சலம், பாட்ஷா ஆகிய படங்களுக்கும் தேவாவே இசையமைத்திருப்பார்.
அதீத அன்பு கொண்ட ரஜினி:
இந்த படங்களின் திரைக்கதைக்கு தேவாவின் இசை மேலும் உயிர் கொடுத்ததால் இந்த படங்கள் ப்ளாக்பஸ்டரானது. இதனால், தேவா மீது ரஜினிகாந்திற்கு எப்போதும் அலாதி பிரியம் உண்டு.
2002ம் ஆண்டே தேவா 300 படங்களுக்கு இசையமைத்தாலும் அதன்பின்னர் மெல்ல மெல்ல அவருக்கு பட வாய்ப்புகள் குறையத் தொடங்கியது. யுவன்ஷங்கர்ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ் என பல இசையமைப்பாளர்கள் தங்களது ஆதிக்கத்தைச் செலுத்தத் தொடங்க 2007க்கு பிறகு பெரியளவில் பட வாய்ப்புகள் தேவாவிற்கு கிடைக்கவில்லை.
நேரில் வந்த ரஜினி:
அதன்பின்பு, பட வாய்ப்புகள் வருடத்திற்கே ஒன்று, இரண்டு என்ற நிலை ஏற்படவும் பொதுமக்கள் கண்டுகளிக்கும் இசை நிகழ்ச்சிகளை மேற்கொண்டுள்ளார். ஆனால், அந்த நிகழ்ச்சிகளிலும் பெரியளவு ரசிகர்கள் முன்பதிவு இல்லாமல் நிகழ்ச்சிகள் ரத்தாகவும் கடுமையான மன வேதனையில் தேவா இருந்துள்ளார்.
தனது வேதனையை ஒரு முறை ரஜினிகாந்திடம் தேவா கூறி வருத்தப்பட்டுள்ளார். அப்போது, தேவாவிடம் அவரது இசை நிகழ்ச்சிக்கு தானே சிறப்பு விருந்தினராக வருவதாக கூறி நிகழ்ச்சியை விளம்பரப்படுத்த கூறினார். பிரபல தனியார் யூ டியூப் தொலைக்காட்சி ஒன்று தேவாவின் பிறந்தநாளை முன்னிட்டு நடத்திய இசை நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பங்கேற்றார்.
நிரம்பி வழிந்த ரசிகர்கள்:
ரஜினிகாந்தே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதால் திரை பிரபலங்கள் பெரும்பாலானாேர் பங்கேற்றனர். சூப்பர்ஸ்டார் முதல் பெரும்பாலான திரையுலகத்தினர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதால் அரங்கம் முழுவதும் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இந்த நிகழ்ச்சி சுமார் 2, 3 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை நேரு அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி மூலமாக 2 கே கிட்ஸ் வரை தேவா மீண்டும் சென்றடைந்தார். பின்னர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் சிறப்பு விருந்தினராக பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று தொடர்ந்து மீண்டும் பிசியாகவே இருந்தார். இதன்காரணமாகவே, தேவாவின் இறப்பைக் கேட்ட ரஜினிகாந்த் காலையிலே அவரது வீட்டிற்குச் சென்று தனது அஞ்சலியைச் செலுத்தினார். மேலும், தேவா மறைவு குறித்து அவர் தனியாக இரங்கல் வீடியோவும் வெளியிட்டுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















