Cooku with Comali | சன்னி லியோன் நடிக்கும் தமிழ்ப்படத்தில் எண்ட்ரி கொடுக்கும் 'குக் வித் கோமாளி' ஸ்டார்..!
விஜய் டிவியில் மரண ஹிட் அடித்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து புகழ்பெற்ற தர்ஷா குப்தா சன்னி லியோனுடன் இணைந்து நடிக்கிறார். அந்த திரைப்படத்திற்கு 'ஓஎம்ஜி' என்று பெயரிடப்பட்டுள்ளது.
'குக் வித் கோமாளி' சமையலையும், காமெடியையும், கலாய்த்தலையும், காதலையும் கொஞ்சம் உப்பு மிளகு போட்டு, பிரட்டி எடுத்து தந்த வெற்றிகரமான நிகழ்ச்சியாக கடந்த வருடம் விஜய் டிவியில் வந்திருந்தது. அதன் அடுத்த சீசன் எப்போது வருமென்று ரசிகர்கள் காத்து கிடக்கின்றனர். கிடைத்த தகவலின் படி பெரும்பாலும் நவம்பரில் அதற்கான ஷூட்டிங் துவங்கும் என்று தெரிகிறது. கடந்த சீசனில் பங்குபெற்ற கோமாளிகளும், குக்குகளும் அடுத்தடுத்து நிறைய படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளனர். குறிப்பாக புகழ், பாலா, ஷிவாங்கி போன்றோர் ஹை டிமேண்டில் சென்று கொண்டிருப்பதாக கோலிவுட் வட்டாரம் கிசுகிசுக்கிறது. அந்த லிஸ்ட்டில் புதிதாக இணைந்திருக்கும் நபர் தான் தர்ஷா குப்தா. இவர் தற்போது சன்னி லியோன் கதாநாயகியாக நடிக்கும் திரைப்படத்தில் நடிக்கிறார். அத்துடன் சேர்த்து அந்த படத்தின் டைட்டிலும் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
உலகெங்கும் பல ரசிகர்களை கொண்டவர் நடிகை சன்னி லியோன். 2011-ஆம் ஆண்டில் பிக் பாஸில் வந்ததை அடுத்து, ஹிந்தியில் 'ஜிஸம்' திரைப்படம் மூலம் அறிமுகமாகி பின் பல இந்தி திரைப்படங்களில் நடித்து, இந்தியாவிலும் அதிக ரசிகர்களை பெற்றார். அதன் பிறகு தன் கணவருடன் மும்பையிலேயே செட்டில் ஆன அவர் 21 மாத குழந்தையையும் தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர். அவர்களுக்கு சர்ரோகஸி முறையில் பிறந்த இரு ஆண் குழந்தைகளும் உள்ளனர்
பாலிவுட்டில் ப்ரபாலமான நடிகை சன்னி லியோன், இந்தியாவின் மற்ற மொழி ரசிகர்களுக்கும் அவ்வபோது வந்து ட்ரீட் வைத்து செல்வார். முன்பு ஜெய் நடிப்பில் வெளியான வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியதன் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து, வடிவுடையான் இயக்கத்தில் உருவாக இருந்த 'வீரமாதேவி' படத்தில் நடிக்க இருந்தார். இப்படத்தின் ஆரம்பக்கட்டப்பணிகள் தொடங்கப்பட்டு முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில், பல்வேறு காரணங்களால் இப்படம் தற்போது முடங்கியுள்ளது. இவ்விரு படங்கள் தவிர்த்து 'ஷீரோ' என்ற தமிழ்ப்படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். ஸ்ரீஜித் விஜயன் இயக்கத்தில் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படமாக இப்படம் உருவாகிவருகிறது.
இந்த நிலையில், சன்னி லியோன் நடிக்கும் மற்றொரு தமிழ்ப்படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஹாரர் காமெடியாக உருவாகவுள்ள இப்படத்திற்கு ஓ.எம்.ஜி (ஓ மை கோஸ்ட்) எனப் பெயரிட்டுள்ளனர். இப்படத்தை யுவன் இயக்க, வீரசக்தி தயாரிக்கிறார். நடிகர் யோகி பாபு, சதீஸ் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தில் தான் குக் வித் கோமாளி புகழ் தர்ஷா குப்தா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளார்.