Suhasini Manirathnam : என் மகன் மற்ற குழந்தைகளைப்போல் இல்லை.. மனம் திறந்த சுஹாசினி!
Suhasini Manirathnam : நடிகை சுஹாசினி மணிரத்னம் தன்னுடைய மகன் நந்தன், எப்படி சி.பி.எம் கட்சியின் உறுப்பினராக சேர்ந்தார் என்பது குறித்து கேரளாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசி இருந்தார்.

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான ஒரு நடிகையும் இயக்குநருமான சுஹாசினி மணிரத்னம் சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற மாநில திரைப்பட அகாடமி ஏற்பாடு செய்த சர்வதேச திரைப்பட விழாவை துவங்கி வைத்தார். இந்த விழாவில் பேசிய சுஹாசினி தனது மகன் நந்தன் குறித்தும் அவரின் அரசியல் ஈடுபாடு குறித்தும் சில தகவல்களை பகிர்ந்து இருந்தார்.
ஹேப்பினஸ் பிலிம் ஃபெஸ்டிவலில் கலந்து கொண்ட சுஹாசினி தன்னுடைய மகன் எப்படி சி.பி.எம் கட்சியின் உறுப்பினராக மாறினார் என்பது பற்றி பேசி இருந்தார். "நந்தன் மற்ற குழந்தைகளைப்போல இல்லை. பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்ததும், இந்திய நாடாளுமன்றத்தின் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாவதை பார்ப்பான். நான் எப்படிப்பட்ட ஒரு குழந்தையை பெற்று எடுத்து இருக்கிறேன் என ஆச்சரியத்துடன் பார்ப்பேன்.
தன்னுடைய 12-வது வயதிலேயே 'தாஸ் கேப்பிடல்' புத்தகத்தை வாசிக்க துவங்கிவிட்டான். ஒரு நாள் புத்தகத்தை கையில் எடுத்துக்கொண்டு நேராக சி.பி.எம் அலுவலகத்திற்குச் அவனாகவே சென்றுவிட்டான். தன்னிடம் கார் இருப்பது கட்சிக்காரர்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காக காரை வேறு ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு நடந்து சென்றுள்ளான்.
முதலில் கட்சிக்காரர்கள் அவனிடம் நீ சாப்பிட்டியா என்று தான் கேட்டுள்ளனர். அதுதான் கம்யூனிஸ்ட் கட்சியின் தனிச்சிறப்பு. நீ யார் எங்கிருந்து வருகிறாய் என்று கூட கேட்கவில்லை. சாப்பிட்ட பிறகு கட்சியின் செயலாளரை சந்தித்து பேசியுள்ளான். தந்தையை பற்றி விசாரிக்கையில் மணிரத்தனத்தின் இயற்பெயரான கோபால ரத்னம் சுப்ரமணியன் என்று கூறியுள்ளான். என் பெயரை கூறிய பிறகு, மணிரத்னம் - சுஹாசினியின் மகன் என்பதை அடையாளம் கண்டுகொண்டு பின்னர் சி.பி.எம் கட்சியின் உறுப்பினரானான் என சுஹாசினி தனது நெகிழ்ச்சியை பகிர்ந்து இருந்தார்.
சினிமா குறித்து சுஹாசினி பேசுகையில் "படம் எடுப்பது எளிதானது. ஆனால் அதை ஒரு நல்ல படமாக எடுப்பது என்பது சவாலானது. சமூகத்தை பிரதிபலிக்கும் கண்ணாடியாக சினிமா செயல்படுகிறது. இதுபோன்ற திரைப்பட விழாக்கள் மூலம் கலைஞர்கள், விமர்சகர்களை கொண்டாடும் ஒரு தளமாக விளங்குகின்றன.
கடைசியாக தெலுங்கில் வெளியான 'மிஸ்டர் ப்ரெக்னென்ட்' படத்தில் சுஹாசினி நடித்திருந்தார். மேலும் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியான 'புத்தம் புது காலை' படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதே போல் மலையாளத்தில் 'பூக்காலம்' படத்திலும் தோன்றி இந்திருந்தார்.
சுஹாசினி - மணிரத்னம் இருவரும் திரைத்துறையில் மிகப்பெரிய படைப்பாளிகளாக இருந்தாலும் அவர்களின் வாரிசு அரசியலில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருப்பது குறித்து ரசிகர்கள் பேசிவருகின்றனர்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

