The Kerala Story: 'முட்டாளாக இருக்கிறார்கள்’ .. தி கேரளா ஸ்டோரி படம் பற்றி பேசிய கமலுக்கு இயக்குநர் பதிலடி..!
தி கேரளா ஸ்டோரி படம் பற்றி நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்த நிலையில், அப்படத்தின் இயக்குநர் சுதிப்தோ சென் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தி கேரளா ஸ்டோரி படம் பற்றி நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்த நிலையில், அப்படத்தின் இயக்குநர் சுதிப்தோ சென் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தி கேரளா ஸ்டோரி படம்
சுதிப்தோ சென் இயக்கத்தில் இந்தியில் எடுக்கப்பட்ட படம் “தி கேரளா ஸ்டோரி”. அதா ஷர்மா , பிரணவ் மிஷ்ரா , யோகிதா பிஹானி , சோனியா பாலானி, சித்தி இத்னானி மற்றும் தேவதர்ஷினி என பலரும் நடித்த இப்படத்தை விபுல் அம்ருத்லால் ஷா தயாரித்திருந்தார். இந்த படம் உண்மைக்கதை என்னும் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக ட்ரெய்லரில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அதில் கேரளாவைச் சேர்ந்த சுமார் 32 ஆயிரம் இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் லவ்ஜிகாத் என்னும் பெயரில் இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டது தொடர்பாகவும், அவர்கள் ISIS அமைப்பில் சேருவது போல காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இதனால் கடும் சர்ச்சைகள் வெடித்தது.
தியேட்டர் முன்பு போராட்டம் - நீதிமன்றத்தில் வழக்கு
பெரும்பாலானோர் தி கேரளா ஸ்டோரி படம் வெளியாக தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால் எதிர்ப்பை மீறி தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்ட நிலையில், இந்தி மொழியில் மட்டுமே இப்படம் இந்தியாவில் வெளியானது. தமிழ்நாட்டில் தியேட்டர்கள் முன்பு போராட்டம் நடைபெற்றது. மேற்கு வங்காளத்தில் படம் வெளியாகவில்லை. பாஜக ஆளும் மாநிலங்களில் தி கேரளா ஸ்டோரி படத்துக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டு மோதல் போக்கு உருவானது. இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தை தயாரிப்பு நிறுவனம் நாடியது. இதில் படம் ரிலீசாவதில் எந்த தடையும் இருக்ககூடாது என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
கமல்ஹாசன் கருத்து
இந்த நிலையில் அபுதாபியில் சர்வதேச இந்திய திரைப்பட விருதுகள் 2023 வழங்கும் விழா கடந்த மே 26,27 ஆகிய நாட்களில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கமல்ஹாசனுக்கு இந்திய சினிமாவின் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், தி கேரளா ஸ்டோரி படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ‘உண்மைக் கதை’ என டைட்டிலின் கீழ் சின்னதாக எழுதினால் மட்டும் போதாது. அது உண்மையாக இருக்க வேண்டும். தி கேரளா ஸ்டோரி உண்மையான படம் அல்ல என காட்டமாக விமர்சித்தார்.
இயக்குநர் சுதிப்தோ சென் பதிலடி
இந்நிலையில் தி கேரளா ஸ்டோரி படத்தின் இயக்குநர் சுதிப்தோ சென் கமல் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வண்ணம் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள அவர், ”படம் பற்றி இதற்கு முன்பு வந்த கருத்துகளுக்கு நான் எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை. பதிலாக விளக்கமளிக்கவே முயற்சி செய்தேன். காரணம் முதலில் பிரச்சாரப் படம் என்று அழைத்தவர்கள், தி கேரளா ஸ்டோரி பார்த்தப்பிறகு நன்றாக உள்ளதாக சொன்னார்கள்.
மேற்கு வங்கம் மற்றும் தமிழகத்திலும் படம் வெளியாகவில்லை. இவர்கள் படத்தை பார்க்காமலேயே இது பிரச்சார படம் என நினைக்கிறார்கள். நம் நாட்டில் அனைவருமே ஒரே மாதிரியான முட்டாள்களாக உள்ளனர். படம் பார்த்துவிட்டு கருத்து சொல்லாமல், அதை பிரசார படம் என்று ஒருவர் சொல்கிறார்” என சுதிப்தோ சென் கூறியுள்ளார்.