Spider Man Box Office Record: இந்தியாவில் அதிகம் வசூலித்த அனிமேஷன் படம்... இமாலய சாதனை படைத்த ‘ஸ்பைடர் மேன்: அக்ராஸ் த ஸ்பைடர் வெர்ஸ்’!
ஸ்பைடர் மேன் அக்ராஸ் தஸ்பைடர் வெர்ஸ் திரைப்படம் 53.2 கோடிகளை வசூலித்து இந்தியாவில் இதுவரை அதிகம் வசூலித்த அனிமேஷன் திரைப்படம் எனும் இமாலய சாதனையைப் படைத்துள்ளது.
இந்தியாவில் இதுவரை வெளியான அனிமேஷன் திரைப்படங்களிலேயே அதிகம் வசூலித்த படம் எனும் சாதனையை 'ஸ்பைடர் மேன்: அக்ராஸ் த ஸ்பைடர்வெர்ஸ்' (Spider-Man Across the Spider-Verse) திரைப்படம் படைத்துள்ளது.
ஹல்க், அயர்ன் மேன், தோர், கேப்டன் மார்வெல் என பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட சூப்பர் ஹீரோக்கள் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸில் இருந்தாலும் ஸ்பைடர் மேன் கதாபாத்திரம் மார்வெல் ரசிகர்களுக்கு என்றுமே ஸ்பெஷல் தான்.
மார்வெல் உலகின் முதல் சூப்பர் ஹீரோவான ஸ்பைடர் மேனைக் கொண்டு வெவ்வேறு காலக்கட்டத்தில் பல நடிகர்கள் நடித்த ஸ்பைடர்மேன் திரைப்படங்கள் வெளிவந்திருந்தாலும், காமிக்ஸூக்கு மிக நெருக்கமான படமாக அமைந்தது ‘ஸ்பைடர் மேன்: இன் டு த ஸ்பைடர்வெர்ஸ்’ திரைப்படம். கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான இப்படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
ஸ்பைடர் மேன் திரைப்படங்களில் வழக்கமாக மையக்கதாப்பாத்திரமாக வரும் பீட்டர் பார்க்கருக்கு பதிலாக, இப்படத்தில் ‘மைல்ஸ் மொரேல்ஸ்’ எனும் கறுப்பின சிறுவனை மையப்படுத்தி படம் அமைந்திருந்தது கவனமீர்த்து.
வசூல் ரீதியாக வரலாறு படைத்த இப்படம், கறுப்பினத்தவரை மையப்படுத்தி வந்த முதல் ஸ்பைடர் மேன் படமாக அமைந்த நிலையில் பாராட்டுகளையும் குவித்தது.
இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜூன் 1ஆம் தேதி இந்தியாவில் வெளியானது. இந்தியாவில் வெளியானது முதலே இப்படம் வசூலில் மாஸ் காண்பித்து வந்த நிலையில், முதல் மூன்று நாள்களிலேயே 14 கோடிகள் வரை வசூலித்து பாக்ஸ் ஆஃபிஸில் சாதனை படைத்தது.
இந்நிலையில், ஸ்பைடர் மேன் அக்ராஸ் தஸ்பைடர் வெர்ஸ் திரைப்படம் 53.2 கோடிகளை வசூலித்து இந்தியாவில் இதுவரை அதிகம் வசூலித்த அனிமேஷன் திரைப்படம் எனும் இமாலய சாதனையைப் படைத்துள்ளது. இத்தகவலை சோனி நிறுவனம் மகிழ்ச்சியுடன் தங்களது இணையப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர்-வெர்ஸ் இப்போது இந்தியாவில் அதிகம் வசூல் செய்த ஆல்டைம் அனிமேஷன் திரைப்படமாக உருவெடுத்துள்ளது. "ஸ்பைடி ரசிகர்களே... நீங்கள் செலுத்திய அளப்பரிய அன்பிற்கு நன்றி! நீங்கள்தான் எங்களுக்கு ஹீரோக்கள்! பிரபஞ்சம் முழுவதிலுமிருந்து வந்த உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி” என சோனி பிச்சர்ஸ் நிறுவனம் பதிவிட்டுள்ளது.
View this post on Instagram
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, மராத்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 10 மொழிகளில் இந்தியாவில் இப்படம் வெளியான நிலையில், இந்த ஆண்டு இந்தியாவில் பெரும் ஓப்பனிங் அமைந்த ஹாலிவுட் படங்களின் வரிசையிலும் இப்படம் இடம்பெற்றது.
2018ஆம் ஆண்டு இப்படத்தின் முதல் பாகமான ஸ்பைடர் மேன் இண்டு த ஸ்பைடர்வெர்ஸ் (Spiderman Into the Spider Verse) திரைப்படம் 9.15 கோடிகளை வசூலித்தது. இந்நிலையில் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் மார்வெல் ரசிகர் பட்டாளத்தின் எழுச்சி காரணமாக இப்படம் இந்திய பாக்ஸ் ஆஃபிஸில் கலக்கி வசூல் சாதனை புரிந்துள்ளது.