பராசக்தி படத்தைத் தொடர்ந்து மீண்டும் இணையும் சிவகார்த்திகேயன் சுதா கொங்காரா!
பராசக்தி படத்தைத் தொடர்ந்து சுதா கொங்காரா இயக்கத்தில் மற்றொரு படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி திரைப்படம் வரும் ஜனவரி 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.இப்படத்தைத் தொடர்ந்து சுதா கொங்காரா இயக்கும் மற்றொரு படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனநாயகன் படத்தை தயாரித்துள்ள கேவிஎன் ப்ரோடக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது .
துரோகி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் சுதா கொங்காரா. விஷ்ணு விஷால் , ஶ்ரீகாந்த் ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாக பாராட்டுக்களைப் பெற்றாலும் இப்படம் கமர்சியல் வெற்றிபெறவில்லை. 2016 ஆம் ஆண்டு மாதவன் நடிப்பில் வெளியான இறுதி சுற்று திரைப்படம் சுதா கொங்காராவுக்கு பெரியளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்தது. தமிழ் மட்டுமில்லாமல் இந்தியிலும் இப்படம் பெரிய வெற்றிபெற்றது. இதனைத் தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் இரண்டு தேசிய விருதுகளை வென்று தமிழ் சினிமாவில் தனித்துவமான ஒரு இயக்குனராக சுதா கொங்காராவை அடையாளம் காட்டியது.
பராசக்தி
சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். பீரியட் டிராமாவாக உருவாகி வரும் இப்படத்தை டான் பிக்ச்சர்ஸ் சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார். அதர்வா , ரவி மோகன் , ஶ்ரீலீலா ஆகியோர் படத்தில் முக்கிய கதாபாத்திங்களில் நடித்துள்ளார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். பராசக்தி படத்தின் இரு பாடல்கள் இதுவரை வெளியாகியுள்ளன. வரும் ஜனவரி மாதம் 14 ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது . இப்படம் புறநாநூறு என்கிற தலைப்பில் சூர்யா நடிக்க இருந்து பின் சிவகார்த்திகேயனுக்கு கைமாறியது குறிப்பிடத் தக்கது.
மீண்டும் இணையும் கூட்டணி
சிவகார்த்திகேயனின் கரியரில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் படம் பராசக்தி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் பணியாற்றிய அனுபவம் பிடித்துப்போகவே அவருடன் மற்றொரு படத்தில் இணைய வேண்டும் என்று சுதா கொங்காரா விரும்பியதாகவும் அவர் சொன்ன கதை சிவகார்த்திகேயனுக்கு பிடித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பராசக்தி படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபு , டான் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி ஆகிய இயக்குநர்களின் படங்களில் நடிக்க இருக்கிறார். இதன்பின் மற்ற பராசகதி போல் மல்டி ஸ்டார்கள் இல்லாமல் சிவகார்த்திகேயனை வைத்து சோலோவாக ஒரு படத்தை சுதா கொங்காரா இயக்கவிருப்பதாகவும் , விஜயின் ஜனநாயகன் படத்தை தயாரித்துள்ள கேவிஎன் ப்ரோடக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது





















