Watch Video : அது நான் இல்லை... தயவு செய்து ஏமாந்து போகாதீங்க! 'சிறகடிக்க ஆசை' ஹீரோவின் வீடியோ
Watch Video : தன்னுடைய பெயர் புகைப்படங்களை பயன்படுத்தி பொய்யான பேஸ்புக் ஐடி மூலம் தவறான செயல்கள் நடைபெற்று வருவதாகவும் அதில் சிக்கி கொள்ள வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார் சிறகடிக்க ஆசை வெற்றி வசந்த்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியல் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பிரபலமான சீரியல். திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த சீரியல் மூன்று மகன்கள் கொண்ட ஒரு குடும்பத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது.
இரண்டு மகன்கள் பணக்கார வீட்டுப் பெண்களை திருமணம் செய்துகொண்டதால் அவர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் மாமியார், ஏழை குடும்பத்தை சேர்ந்த இரண்டாவது மருமகளை மட்டும் எந்நேரமும் அவமானப்படுத்தி மட்டம் தட்டி வருகிறார்.
இரண்டாவது மகன் மீதும் பெரிய அளவுக்கு பாசமில்லாத அம்மா என்பதால் மகன் மருமகள் இருவரையுமே எப்படியாவது வீட்டை விட்டு அனுப்பி விட வேண்டும் என பிளான் போடுகிறார். இப்படியாக மிகவும் சுவாரசியமாக நகரும் இந்த சீரியல் கடந்த வாரம் சன் டிவி சீரியல்களை எல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு டிஆர்பி தர வரிசையில் முன்னணி இடத்தை பிடித்தது.
இந்த சீரியலில் இரண்டாவது மகனாக முத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் வெற்றி வசந்த் டிக் டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் பிரபலமானவர்.
அதன் மூலம் தான் அவருக்கு இந்த சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட வெற்றி வசந்த் மிகவும் எதார்த்தமான நடிப்பால் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார். இந்த சீரியல் பார்க்கும் அனைத்து ரசிகர்களின் சப்போர்ட்டும் முத்துவுக்கு தான். அந்த அளவுக்கு ரசிகர்களின் அன்பை பெற்றுள்ளார்.
நடிகர் வெற்றி வசந்த் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதன் மூலம் மக்களை எச்சரித்து கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். "அனைவரும் என் மீது காட்டும் பாசத்துக்கு மிக்க நன்றி. உங்களுக்கு எப்படி எங்களின் முகம் பார்த்தால் சந்தோஷமாக இருக்குமோ அதை போல உங்களின் கமெண்ட்களை பார்க்கும் போது எனக்கு அத்தனை உற்சாகமாக இருக்கிறது.
பேஸ்புக்கில் முன்னாடி நான் ஒரு அக்கவுண்ட் வைத்து இருந்தேன். ஆனா அதை நான் பல நாட்களுக்கு முன்னாலேயே தேவையான போட்டோக்களை எடுத்துக் கொண்டு டிஆக்டிவேட் செய்துவிட்டேன். ஆனால் தற்போது என்னுடைய இன்ஸ்டாகிராமுக்கு ஒருவர் மெஸேஜ் மூலம் என்னுடைய பேஸ்புக் அக்கவுண்டில் இருந்து தப்பு தப்பா மெசேஜ் வருகிறது என கூறியிருந்தார்.
View this post on Instagram
என்னுடைய புகைப்படங்களை பயன்படுத்தி பொய்யான ஒரு ஐடி மூலம் தவறான செய்திகளை செய்து வருகிறார்கள். பணம் கேட்பது, மெஸேஜ் அனுப்புவது, பெண்களுக்கு தப்பு தப்பாக மெசேஜ் அனுப்புவது என செய்து வருகிறார்கள். அது நான் இல்லை. இந்த தகவலை எதற்காக நான் சொல்கிறேன் என்றால் பலரும் அது நான் என நினைத்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள். இதை உங்களுக்கு தெரிவித்து எச்சரிக்க வேண்டும் என பல நாட்களாக நினைத்து கொண்டு இருந்தேன். இப்போது தான் என்னால் போட முடிந்தது. சோசியல் மீடியா மூலம் நான் பெருசாக யாரிடமும் தொடர்பில் இருப்பது கிடையாது. அதனால் தயவு செய்து இது போன்ற தவறான நபர்களிடம் ஏமாந்து போய் விடாதீர்கள். உங்களின் பர்சனல் போட்டோக்களை அனுப்பி மாட்டிக் கொள்ள வேண்டாம். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு தயவு செய்து இந்த செய்தியை பகிரவும். யாரும் இதன் மூலம் பாதித்து விடக் கூடாது என்ற அக்கறையில் தான் இதை சொல்கிறேன். இதை ஒரு கோரிக்கையாக கேட்கிறேன். நன்றி" என பேசி இருந்தார் வெற்றி வசந்த்.