James Vasanthan : ஐயகோ.. பாடலில் பிழையைக் கண்டு பொங்கி எழுந்த ஜேம்ஸ் வசந்தன்....
வார்த்தையை தவறாக உச்சரித்ததற்காக பாடகர் கார்த்திக்கை விமர்சித்துள்ளார் சுப்ரமணியபுரம் படத்தின் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்
பாடகர் கார்த்திக் குரலில் வெளியான கனியன் பூங்குன்றனாரின் யாதும் ஊரே யாவரும் கேளிர் பாடலை விமர்சித்துள்ளார் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன். பாடலில் அவர் கண்டறிந்த பிழையே இதற்கு காரணம். அப்படி என்ன பிழை செய்தார் பாடகர் கார்த்திக்?
கணியன் பூங்குன்றனார் பாடல்
கணியன் பூங்குன்றனார் எழுதிய புறநாநுற்றூப் பாடலான யாதும் ஊரே யாவரும் கேளிர் பாடல் கடந்த 2019-ஆம் ஆண்டு ஆல்பமாக வெளியிடப்பட்டது. வெளிநாட்டு இசைக்கலைஞர்கள் சிம்ஃபனி அமைக்க ராஜன் சோமசுந்தரம் இசையமைத்து பிரபல பாடகர் கார்த்திக், பாம்பே ஜெயஸ்ரீ, தர்டீன் பீட்ஸ், ராஜன் சோமசுந்தரம் இந்தப் பாடலைப் பாடினார்கள். யாதும் ஊரே என்று தொடங்கும் அந்தப் பாடல் இதோ.
’ யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே , வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே மினுவின்
இன்னா தென்றலும் இலமே மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே”
பாடலில் பிழை கண்டு பொங்கி எழுந்த ஜேம்ஸ் வசந்தன்
சுப்ரமணியபுரம், ஈசன், விழா போன்ற படங்களுக்கு இசையமைத்தவர் ஜேம்ஸ் வசந்தன். சுப்ரமணியபுரம் படத்திற்கு இவர் கொடுத்த அத்தனைப் பாடல்களும் இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன. அண்மையில் இந்தப் பாடலைக் கேட்ட ஜேம்ஸ் வசந்தன் பாடலில் ஒரு மிகப்பெரிய பிழையைச் சுட்டிக்காட்டி இந்தப் பாடலைப் பாடிய பாடகர் கார்த்திக் மற்றும் இசைமைப்பாளரை விமர்சித்துள்ளார். தனது ஃபேஸ்புக் பக்கத்திலவர் இப்படி பதிவிட்டுள்ளார்.
”தற்செயலாக இந்தக் காணொலி பார்த்தேன். நம்ம முப்பாட்டன் கணியன் பூங்குன்றனார் பாடல் என்கிற ஆர்வம். பிரம்மாண்ட symphony இசைக்குழு. பெரிய பாடகர்கள் என்றவுடன் கூடுதல் ஆர்வம். முதல் வரியைக் கேட்டவுடன் பரவசம். இரண்டாவது வரியைக் கேட்டவுடன் அதிர்ச்சி. "யாவரும் கேளீர்" என்று பாடுகிறார் கார்த்திக். பாதி அவர் தவறு. மீதி இசையமைப்பாளர் தவறு. பாட்டின் அடிப்படைத் தத்துவத்தையே விளங்கிக்கொள்ளாமல் எப்படி இந்தப் பாடலை இசையமைக்க முடியும்? பாடமுடியும்?இவ்வளவு தான் தமிழரின் மொழியுணர்வு, மொழியறிவு.
கேளிர் - உறவினர், சுற்றத்தார் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்கிற அற்புத உலகத் தத்துவத்தையே சிதைத்துவிட்ட பிறகு எதற்கு இந்தப் படைப்பு!
ஐயகோ!”