Sharwanand Wedding Pic: மால டம் டம்...மத்தளம் டம் டம்... நீண்டநாள் காதலியை கரம்பிடித்த சர்வானந்த்.. வெளியான முதல் ஃபோட்டோ!
ராம்சரண் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்தத் திருமணத்தில் கலந்துகொண்ட புகைப்படமும் வெளியாகியுள்ளது.

நடிகர் சர்வானந்தின் திருமண புகைப்படங்கள் முதன்முறையாக இணையத்தில் வெளியாகி லைக்ஸ் அள்ளி வருகிறது.
நண்பனை வாழ்த்த வந்த ராம்சரண்
ஜெய்ப்பூரில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் சூழ சர்வானந்தின் திருமணம் கோலாகலமான நடைபெற்ற நிலையில், ஹல்தி விழாவில் மஞ்சள், சந்தனம் பூசி குடும்பத்தார் மகிழும் வீடியோ நேற்று இணையத்தில் வெளியாகி லைக்ஸ் அள்ளியது.
இந்நிலையில், சர்வானந்தின் திருமண புகைப்படங்கள் முதன்முறையாக இன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
நடிகர் ராம்சரண் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்தத் திருமணத்தில் கலந்துகொண்ட புகைப்படமும் வெளியாகியுள்ளது. மேலும் காதலித்து வருவதாகக் கூறப்படும் சித்தார்த் - அதிதி ராவ் ஜோடி திருமணத்தில் கலந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.
கோலிவுட், டோலிவுட் பிரபலம்
டோலிவுட், கோலிவுட் என சினிமா வட்டாரத்தில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் சர்வானந்த். ‘எங்கேயும் எப்போதும்’ ‘ஜேகே எனும் நண்பனின் கதை’, ‘காதல்னா சும்மா இல்லை’ ஆகிய தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர்.
குறிப்பாக கமலினி முகர்ஜியுடன் இவர் இணைந்து ஆடிய ‘என்னமோ செய்தாய் நீ’, எங்கேயும் எப்போது படத்தில் இடம்பெற்ற ‘உன் பேரே தெரியாது...’ ஆகிய பாடல்கள் அன்றைய காலக்கட்டத்தில் பெரும் ஹிட் அடித்தன.
ஆனால், ‘மணவாடு’ காரரான சர்வானந்த் தன் சொந்த மொழியான தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி வந்தார். சங்கராந்தி, கம்யம், ரன் ராஜா ரன் என பல ஹிட் படங்களை தெலுங்கில் கொடுத்துள்ள சர்வானந்த இறுதியாக ‘96’ படத்தின் தெலுங்கு பதிப்பான ஜானு படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களையும் ஈர்த்தார். தமிழில் அண்மையில் சர்வானந்த நடிப்பில் ‘கணம்’ திரைப்படம் வெளியாகி கவனமீர்த்தது.
நீண்ட நாள் காதலியுடன் திருமணம்
நடிப்பு தாண்டி, வணிக குடும்ப பின்புலத்தைக் கொண்ட சர்வானந்த் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனியின் உறவுக்காரர் ஆவார்.
இச்சூழலில் 38 வயது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வந்த நடிகர் சர்வானந்த், நீண்ட நாள்களாக காதலில் இருந்து வருவதாக செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் தன் நீண்ட நாள் காதலியான ரக்ஷிதா எனும் பெண்ணை தான் மணப்பதாக அதிகாரப்பூர்வமாக தன் ட்விட்டர் பக்கத்தில் சர்வானந்த் அறிவித்தார்.
திருமண விழாவில் ராம்சரண்
ஆந்திராவைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏவும் அமைச்சருமான போஜல கோபால கிருஷ்ணா ரெட்டியின் பேத்தியான ரக்ஷிதாவுடன் திருமண ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த வாரம் சர்வானந்த் கார் விபத்தில் சிக்கியது.
இந்நிலையில், தனக்கு லேசான காயங்களே ஏற்பட்டதாகவும், தான் நலமுடன் இருப்பதாகவும் சர்வானந்த் தெரிவித்தார். இதனையடுத்து நேற்று முன் தினம், சர்வானந்தின் திருமண நிகழ்வுகள் தொடங்கி நடைபெற்று வந்தன.
இந்நிலையில் சர்வானந்துக்கும் ரக்ஷிதாவுக்கும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

