Sharmili: திரையுலகில் காணாமல் போன ஜீவா பட நடிகை ஷர்மிலி: இப்போ என்ன செய்கிறார்?
Sharmili : நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற நடிகை ஷர்மிலி இப்போ என்ன செய்கிறார்.
சின்னத்திரையில் பிரபலமாக இருந்த நடிகர் நடிகைகள் பலரும் வெள்ளித்திரையில் வாய்ப்பு பெற்று இருந்தாலும் அதில் விரல் விட்டு எண்ண கூடிய அளவிலானவர்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்கள். அதிலும் குறிப்பாக தொகுப்பாளர்களாக இருந்து நடிகைகளாக மாறிய பலரின் நிலையும் என்ன ஆனது என்பது இதுவரையில் தெரியவில்லை. அப்படி காணாமல் போன பலரில் ஒருவர் நடிகை ஷர்மிலி. ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'காசுமேல' என்ற பிரபலமான நிகழ்ச்சியின் தொகுப்பாளராக ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார் ஷர்மிலி. அவரின் முழு பெயர் மரியா மார்கரெட் ஷர்மிலி.
பள்ளியில் படிக்கும் போதே ஏராளமான பட வாய்ப்புகள் ஷர்மிலியை தேடி வந்தாலும் படிப்பின் மீது கவனம் குறைந்துவிடும் என்பதால் வந்த வாய்ப்புகள் அனைத்தையும் நிராகரித்துள்ளார். படித்து முடித்த பிறகு ஜெயா டிவியின் தொகுப்பாளராக பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கவே கிடைத்த வாய்ப்பை மிக சிறப்பாக பயன்படுத்தி கொண்டார். தலையையும், கைகளையும் ஆட்டி ஆட்டி அவர் பேசுவது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அந்த நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார் ஷர்மிலி.
அதன் மூலம் மீண்டும் ஷர்மிலிக்கு பட வாய்ப்புகள் வர தொடங்கியது. 2002ம் ஆர்.பி. செளத்ரி தன்னுடைய மகன் ஜீவா ஹீரோவாக நடித்த 'ஆசை ஆசையாய்' படத்தின் ஹீரோயினாக நடிக்க ஷர்மிலிக்கு வாய்ப்பு கொடுத்தார். ஆனால் அப்படம் மிக பெரிய பிளாப் படமானது. அதை தொடர்ந்து நடிகர் ஷாம் ஜோடியாக 'அன்பே அன்பே' படத்தில் நடித்தார். அப்படமும் தோல்வியை தான் சந்தித்தது. திவான், பேசுவோமா என அடுத்தடுத்த படங்கள் தோல்வியை சந்தித்ததால் ராசியில்லாத நடிகை என முத்திரை குத்தப்பட்டார்.
பல கனவுகளுடன் பெரிய திரைக்கு வந்த ஷர்மிலிக்கு பட வாய்ப்புகள் தோல்வியில் முடிந்தது. மீண்டும் டிவி பக்கம் போகவும் மனமில்லாமல் கொஞ்ச காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். பின்னர் தன்னுடைய பெயரை மீனாட்சி என மாற்றி கொண்டு மலையாள திரைப்படம் பக்கம் ஒதுங்கினார். அங்காவது தனக்கு அங்கீகாரம் கிடைக்கும் என நம்பிக்கையில் சென்றார். இயக்குனர் வினயன் இயக்கத்தில் நடிகர் பிருத்விராஜ் நடித்த 'வெள்ளி நட்சத்திரம்' படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார். அப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.
தமிழ் சினிமாவில் பிளாப் நடிகை என முத்திரை குத்தப்பட்ட ஷர்மிலி மலையாள திரையுலகில் வெற்றியை கொடுத்து ராசியான நடிகையானார்.
அதற்கு பின்னரும் சரியான பட வாய்ப்புகள் அமையாததால் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனார் நடிகை ஷர்மிலி. அவரின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் சமீபத்தில் வெளியானது. ஆனால் தற்போது அவர் எங்கு இருக்கிறார்? என்ன செய்து கொண்டு இருக்கிறார் என எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.