Sex Education Series: வெளியானது ‘செக்ஸ் எஜூகேஷன்’ கடைசி சீசன்.. சோகம், மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வரும் ரசிகர்கள்!
Sex Education Seson 4: நெட்ஃப்ளிக்ஸின் வெளியாகி பிரபலமான செக்ஸ் எஜுகேஷன் இணைய தொடரின் கடைசி சீசன் வெளியாகியுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியான இணைய தொடர் ‘செக்ஸ் எஜுகேஷன்’ (Sex Education). மூன்று சீசன்கள் வெளியாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்த இந்தத் தொடரின் நான்காவது சீசன் இன்று நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி உள்ளது.
செக்ஸ் எஜுகேஷன்
கடந்த 2019ஆம் ஆண்டு நெட்ஃப்ளிக்ஸில் வெளியான வெப் சீரிஸ் செக்ஸ் எஜுகேஷன். காமம் சார்ந்து மறைத்துவைக்கப்பட்ட, நாம் தயக்கப்படும் அனைத்து விஷயங்ளையும் உடைத்து நொறுக்கியது செக்ஸ் எஜுகேஷன்.
முதல் சீசன் வெளியாவதற்கு முன் இந்தத் தொடர் நிச்சயம் தோல்வி அடையும் என அனைவரும் எதிர்பார்த்து வந்து நிலையில் அந்த ஆண்டின் மிகப் பெரிய வெற்றி தொடராக மாறியது. அடுத்த அடுத்து என மொத்தம் மூன்று சீசன்கள் வெளியாகி நான்காவது சீசனுக்கான முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் தற்போது நான்காவது மற்றும் கடைசி சீசன் இன்று நள்ளிரவு 12 மணியளவில் செப்டம்பர் 21ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதுவே இந்தப் தொடரின் கடைசி சீசன் என்கிற சோகம் ரசிகர்கள் மனதில் ஒருபக்கம் இருந்தாலும் மறுபக்கம் இந்த சீசனில் என்ன அட்ராசிட்டி எல்லாம் செய்திருக்க போகிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இந்நிலையில், செக்ஸ் எஜூகேஷன் கடைசி சீசனை முதல் ஆளாக பார்த்த ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களை இணையத்தில் பகிர்ந்துவருகின்றனர்.
கதை
ஹை ஸ்கூல் படிக்கும் மாணவன் ஓட்டிஸ். அவனது தாய் ஒரு பாலியல் ஆலோசகராக இருப்பது தனது பள்ளியில் யாருக்கும் தெரிந்துவிடக்கூடாதென்று கவனமாக இருக்கிறான். ஓட்டிஸின் அம்மா காமத்தை மிக அழகான ஒன்றாக பார்ப்பவர், அதை பற்றி ஒரு ஆலோசகராக இருந்து பேசுவதில் எந்த தயக்கமும் காட்டாதவர்.
அதே நேரத்தில் அவரது மகனான ஓட்டிஸ் மிகவும் கூச்ச சுபாவம் நிறைந்தவன். தனது நண்பனான எரிக் தவிர அவனுக்கு பெரிதாக நண்பர்கள் கிடையாது. தனது பள்ளியில் இருக்கும் மேவ் என்கிறப் பெண்ணால் ஈர்க்கப்படுகிறான் ஓட்டிஸ். தனது பெற்றோரால் கைவிடப்பட்டவள் மேவ். அவளைப் பற்றிய பல்வேறு தவறான பேச்சுக்கள் அந்த பள்ளியில் பேசப்படுகின்றன.
பதின்வயதினர் நிறைந்த ஒரு பள்ளி சூழலில் காமம் சார்ந்த பிரச்சனைகளால் ஒவ்வொருவரும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை அறிகிறாள் மேவ். தனது அம்மாவைப் போல் ஓட்டிஸ் காமத்தைப் பற்றிய ஆலோசனைகளை வழங்கும் திறமையைக் கொண்டிருக்கிறான் என்பதைக் கண்டறிகிறாள் மேவ்.
இவர்கள் இருவரும் சேர்ந்து திருட்டுத்தனமாக மாணவர்களுக்கு காமம் சார்ந்து இருக்கும் குழப்பங்கள், தயக்கங்கள், தவறான புரிதல்கள், உறவுச் சிக்கல்கள் ஆகியவற்றை தீர்த்து வைக்க முடிவு செய்கிறார்கள். அதற்கு பணம் வசூல் செய்கிறார்கள். இவர்களின் இந்த முடிவு எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதே இந்தத் தொடரின் கதைக்களம்.
இதற்கிடையில் பல்வேறு கதாபாத்திரங்கள் பல்வேறு புதிய மாதிரியான சிக்கல்கள் என இளம் தலைமுறையினர் எதிர்கொள்ளும் மன அழுத்தங்களை அவர்களைப் பற்றிய முன்முடிவுகள் எதுவும் இல்லாமல் அவர்களின் பிரச்னைகளை முறையாகக் கையாள வேண்டிய அவசியத்தை பிரச்சாரமாக இல்லாமல் தொடர் நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகரமாக பேசியதே இந்தத் தொடரின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாக அமைந்தது.
மேலும் படிக்க : Annamalai: அண்ணா பற்றிய கருத்து சரி; மன்னிப்பு கேட்க முடியாது.. அண்ணாமலை ஆவேசம்..!