Rajinikanth: ‘தம்பி விஜய்தான் உச்சத்தில் இருக்கிறார்’.. ரஜினி ரசிகர்களுக்கு கண்டனம் தெரிவித்து சீமான் அறிக்கை!
ரஜினியை முன்னாள் சூப்பர் ஸ்டார் என்று கூறிய பத்திரிகையாளரை ரஜினி ரசிகர்கள் மிரட்டிய சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
திரைத்துறை பத்திரிகையாளர் பிஸ்மி, ’’விஜய் தான் ரியல் சூப்பர் ஸ்டார்; ரஜினி முன்னாள் சூப்பர் ஸ்டார். தில் ராஜு சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை மக்கள் விஜயை அந்த இடத்தில் வைத்துவிட்டார்கள்’’ என்று கூறியிருந்தார்.
அவரது இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இந்த வீடியோ ரஜினி ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது; இதனையடுத்து வெகுண்டெழுந்த ரஜினி ரசிகர்கள் சிலர், பிஸ்மியின் அலுவலகத்திற்குச் சென்று அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது. இது தொடர்பான வீடியோக்களும் வெளியாகி ட்ரெண்டானது. ஆனால் இரு தரப்பினருக்கும் இடையே எந்த பிரச்சினையும் இல்லை எனவும், வாக்குவாதம் சுமூகமாக முடிந்தது என கூறப்பட்ட நிலையில், அவர்கள் செல்பி எடுத்துக்கொண்ட போட்டோவும் வெளியானது.
#ரஜினிகாந்த் ரசிகர்களால் பத்திரிகையாளர் #ஜெபிஸ்மி தாக்கப்பட்டாரா? @jbismi_offl @rajinikanth @RIAZtheboss @valaipechuvoice @valaipechu #jbismi #ValaipechuBismi #Rajinikanth𓃵 #Rajini #Vijay #superstar #SuperStarVIJAY pic.twitter.com/Iqxi0xGoN1
— Valaipechu J Bismi (@jbismi_offl) January 2, 2023
இந்நிலையில் ரஜினியை முன்னாள் சூப்பர் ஸ்டார் என்று கூறிய பத்திரிகையாளரை ரஜினி ரசிகர்கள் மிரட்டிய சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
திரைத்துறையின் உச்ச நட்சத்திரம் குறித்துக் கருத்துத் தெரிவித்ததற்காக பத்திரிக்கையாளரை மிரட்ட முனைவதா?https://t.co/XiBxTDHIMK pic.twitter.com/UIqpAViRXd
— சீமான் (@SeemanOfficial) January 2, 2023
அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, தமிழ்த்திரைத்துறையில் உச்ச நட்சத்திரம் (சூப்பர் ஸ்டார்) எனும் உயரிய இடம் எவருக்கும் நிரந்தரமானதல்ல; ஒவ்வொரு காலகட்டத்திலும்,அந்தந்த தலைமுறைக்கேற்ப மாறக்கூடியது. திரைப்படங்களுக்கு இருக்கின்ற வரவேற்பு, மக்கள் அளிக்கும் பெருவாரியான ஆதரவு ஆகியவற்றைப் பொறுத்து அந்த இடம் மாறிக்கொண்டே வந்திருக்கிறது.
தமிழ்த்திரைப்படங்கள் வெளியான தொடக்கக் காலத்தில் தியாகராஜ பாகவதர் தமிழத்திரையுலகின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தார். அதன்பிறகு, ஐயா எம்.ஜி.ஆர் அவர்கள் உச்ச நட்சத்திரமாக இருந்தார். எம்.ஜி.ஆர் அவர்கள் முதல்வராக அரசியலில் கோலோச்சிய காலத்திலேயே ரஜினிகாந்த் திரைத்திரையில் உச்ச நட்சத்திரமாகக் கொண்டாடப்பட்டார்.
அதன்பின், தற்போதைய தலைமுறையினர் பெருமளவு விரும்பத்தக்கவராக தம்பி விஜய் உச்சத்தில் இருக்கிறார்; இந்த எதார்த்தச் சூழலை விளக்கி, அதுகுறித்த தனது கருத்துகளை ஊடகத்தில் தெரிவித்ததற்காக திரை விமர்சகரும், பத்திரிகையாளருமான சகோதரர் பிஸ்மி அவர்களது அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து அச்சுறுத்த முனைந்த ரஜினிகாந்தின் ரசிகர்களின் செயல் நாகரீகமானதன்று.
ரஜினிகாந்த் ரசிகர்கள் என்றால் அனுபவமும், முதிர்ச்சியும், பக்குவமும், தெளிவும் பெற்றவர்கள் என்று நான் முழுமையாக நம்புகிறேன். ஆனால் அப்படியானவர்களில் சிலரே, மாற்றுக்கருத்துத் தெரிவித்ததற்காக பத்திரிகையாளர் ஒருவரது இருப்பிடத்திற்கே சென்று, ஒருமையில் பேசி மிரட்டுவது வருந்தத்தக்கதாகவும், கவலையளிப்பதாகவும் இருக்கின்றது. இதுபோன்ற செயல்கள் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.
ரஜினிகாந்தே இதனை விரும்பமாட்டார்கள்; இத்தகைய செயல்களானது ரஜினிகாந்தின் பெயருக்கும், புகழுக்கும் களங்கத்தையே ஏற்படுத்தும். ஆகவே அவரது ரசிகர்கள் இனியும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடவேண்டாமென்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.