PM Modi on Sarath Babu Death: “சரத்பாபு படைப்பாற்றல் மிக்கவர்..” பிரதமர் மோடி புகழஞ்சலி..!
PM Modi on Sarath Babu Death: பிரபல நடிகர் சரத்பாபு மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகர் சரத்பாபு மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,” சரத் பாபு சிறந்த படைப்பாற்றல் மிக்கவர். அவரது திரை வாழ்க்கையில் பல மொழிகளில் நடித்துள்ளார். பிரபலமான படைப்புகளுக்காக அவர் என்றும் நினைவுகூறப்படுவார். அவரது மறைவு வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி.” என்று பதிவிட்டுள்ளார்.
சரத்பாபு மரணம்:
71 வயதான அவர், ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி:
சரத்பாபு மறைவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,” திறமைமிகு நடிகர் சரத்பாபு மறைந்துவிட்டார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன். திரையுலகிற்கு சரத்பாபுவின் பங்களிப்பு மற்றும் அவரது திறமை என்றும் மறக்காது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆறுதல். ஓம் சாந்தி.” என்று தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க. மாநிலத் தலைவர்:
தமிழ்நாடு பா.ஜ.க. மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில். “தென்னிந்தியத் திரையுலகின் அத்தனை மொழிகளிலும், தன் பண்பட்ட நடிப்பினால் முத்திரை பதித்த மூத்த நடிகர் சரத்பாபு அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். அவரைப் பிரிந்து வாடும் அவர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி!” என்று குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதி
வருடங்கள் செல்லச் செல்ல, சினிமாவில் அவ்வப்போது குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த சரத் பாபு தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வந்தார். இறுதியாக தெலுங்கில் பவன் கல்யாண் உடன் வக்கீல் சாப் படத்தில் நடித்திருந்தார்.
தமிழில் கடைசியாக ’வசந்த முல்லை’ என்னும் படத்தில் சரத் பாபு நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், சரத் பாபுவுக்கு உடல்நிலை சரியில்லாததால் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த சில வாரங்களாகவே சரத் பாபு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தார். அவர் இறந்துவிட்டதாக மே 3ஆம் தேதி தகவல் வெளியான நிலையில், அந்தத் தகவலை சரத் பாபுவின் சகோதரி மறுத்தார். இதற்கிடையே தொடர் சிகிச்சை பெற்று வந்த சரத்பாபு, இன்று (மே 22) பிற்பகல் 1.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
சென்னையில் உடல் அடக்கம்?
அவரின் உடல் சென்னை, தி.நகரில் உள்ள சரத் பாபுவின் வீட்டுக்குக் கொண்டுவரப்படுவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதைத் தொடர்ந்து நாளை (மே 23ஆம் தேதி) அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.