Santhanam: ''இதுக்கு பேர்தான் புலி வாலை பிடிக்கிறதா''.. சர்ச்சையில் சிக்கிய சந்தானம்.. கேள்விகளால் இறுக்கும் நெட்டிசன்ஸ்!
நடிகர் சந்தானம் சுற்றுலாவுக்காக வெளிநாடு சென்று இருக்கிறார். வெளிநாட்டில் இருந்து அவர் வெளியிட்ட வீடியோ ஒன்று வைரலாகி தற்போது பேசு பொருளாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சந்தானம். தொடக்கத்தில் காமெடி நடிகராக கலக்கி வந்த இவர், சில ஆண்டுகளாக கதாநாயகராக வலம் வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் 'ஏஜென்ட் கண்ணாயிரம்' என்ற திரைப்படம் வெளியானது. இந்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது;
தற்போது நடிகர் சந்தானம் சுற்றுலாவுக்காக வெளிநாடு சென்று இருக்கிறார். அங்கு இருந்து அவர் வெளியிட்ட வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி தற்போது பேசு பொருளாகியுள்ளது. சுற்றுலா சென்ற சந்தானம் அங்குள்ள மிருகக்காட்சி சாலையை பார்வையிட சென்றுள்ள போது அங்கு படுத்திருந்த புலியுடன் வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார்..
View this post on Instagram
அந்த வீடியோ பதிவில், நடிகர் சந்தானம் நீச்சல் குளம் ஓரமாக அமர்ந்திருக்கிறார். அவர் அருகில் பெரிய புலி ஒன்று படுத்திருக்கிறது. புலியின் மேல் கை வைத்து பின் அதன் வாலை கையில் பிடித்து பார்க்கிறார் சந்தானம். ஆனாலும் புலியிடம் எந்த அசைவும் இல்லை. புலி தூக்கத்தில் உள்ளதா? என சந்தானம் கேட்க, பூங்கா ஊழியர் புலியை மண்டையில் தட்டி எழுப்புகிறார். இருந்தும் புலி ஒருவித மயக்க நிலையிலே உள்ளது. புலியை சந்தானம் தடவிக் கொடுக்கிறார்.
அந்த வீடியோவை சந்தானம் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு, ‘’இதுக்கு பேர்தான் புலி வாலை பிடிக்கிறதா’’ என்ற வேடிக்கையான கேப்சனுடன் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சர்ச்சையாகி உள்ளது.
Idharku per than 🐅 valai pidikratha 😜#tigerlove #traveldiaries pic.twitter.com/1uW77pmPgz
— Santhanam (@iamsanthanam) December 25, 2022
உலகம் முழுவதும் மிருகக்காட்சி சாலைகளுக்கு எதிராக பல புகார்களும், விமர்சனங்களும் எழுந்து வரும் நிலையில், சந்தானத்தின் இந்த வீடியோ தற்போது பேசு பொருளாகியுள்ளது. பணம் சம்பாதிப்பதற்காக மிருகங்கள் மிருக காட்சி சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டு கொடுமைப்படுத்தபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
சிங்கம், புலி போன்ற கொடிய மிருகங்களை மிருகக் காட்சி சாலைகளில் அடைத்து வைத்து, அவைகளுக்கு புகையிலை மற்றும் போதைப் பொருட்களை கொடுத்து மிருக காட்சி சாலை உரிமையாளர்கள் பணம் சம்பாதிப்பதாக கூறப்படுகிறது.
பிரபலங்களை ஈர்க்கும் வகையில் இந்த செயலை அவர்கள் நடைமுறைப்படுத்தி வருவதாகவும் கூறுகின்றனர். பிரபலங்கள், முக்கிய புள்ளிகள் போன்றோர் இந்த மிருகங்கள் அருகில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டு தங்களை தானே விளம்பரப்படுத்திக் கொள்ள, இதனை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சந்தானம் பதிவிட்டுள்ள வீடியோவுக்கு இணையத்தில் எதிர்ப்புகள் எழுந்து வருகிறது. வீடியோ பதிவின் கீழ், விலங்குகளை கொடுமைப்படுத்தும் இத்தகைய மிருகக்காட்சி சாலைகளுக்கு சந்தானம் ஆதரவு கொடுக்கிறாரா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும் இது போன்ற வீடியோக்களை பகிர்வதையாவது நிறுத்தலாம் என்றும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.