Samantha Ruth Prabhu: தேவி அருள் வேண்டும்....சாகுந்தலம் படத்துக்காக ஹைதராபாத்தில் சிறப்பு பூஜை செய்த சமந்தா!
சாகுந்தலம் படத்தின் ப்ரொமோஷன் பணிகளை நான் தேவியின் ஆசிர்வாதத்துடன் தொடங்க விரும்புகிறேன் எனத் தெரிவித்து சமந்தா வீடியோ பகிர்ந்துள்ளார்.
சாகுந்தலம் படத்துக்காக ஹைதராபாத்தில் உள்ள பிரபல கோயிலில் பூஜை செய்து சமந்தா வீடியோ பகிர்ந்துள்ளார்.
மயோசிட்டிஸ் பாதிப்பு, தன் முன்னாள் கணவர் நாகசைதன்யாவுடனான மணமுறிவு உள்பட பல இன்னல்களை தன் தனிப்பட்ட வாழ்வில் சமந்தா எதிர்கொண்டு வரும் நிலையில் கடந்த சில மாதங்களாக சமந்தா ஆன்மீகப் பாதையிலும் தீவிர உடற்பயிற்சி மோடிலும் இறங்கி ஆர்வம் காண்பித்து வருகிறார்.
எனினும் இவற்றுக்கெல்லாம் மத்தியிலும் சோர்ந்து போய் அமர்ந்து விடாமல் நடிப்பில் தீவிர ஆர்வம் காண்பித்து தேர்ந்தெடுத்த படங்களில் நடித்து தன் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.
அந்த வகையில் சமந்தா தற்போது ஹைதராபாத், ஜூபிளி ஹில்ஸ் பகுதியில் உள்ள பெத்தம்மா தாளி கோயிலில் வழிபாடு நடத்தும் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
சமந்தா நடிப்பில் சாகுந்தலம் படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி திரைக்கு வரும் நிலையில், இதற்காக நடிகை சமந்தா. நடிகர் தேவ் மோகன் உள்படம் படக்குழுவினர் அனைவரும் முன்னதாக பெத்தம்மா கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் சாகுந்தலம் படத்தின் ப்ரொமோஷன் பணிகளை நான் தேவியின் ஆசிர்வாதத்துடன் தொடங்க விரும்புகிறேன், நீங்கள் அனைவரும் எனக்கு மிகுந்த ஆதரவாக உள்ளீர்கள்” என சமந்தா நெகிழ்ச்சியுடன் வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
சமந்தா, தேவ் மோகன், அதிதி பாலன் உள்ளிட்டோர் நடிப்பில் ‘காளிதாஸ்’ எழுதிய சாகுந்தலக் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. மகாபாரதக் கதையின் ஒரு பகுதியான சாகுந்தலா - துஷ்யந்தனின் காதல் கதையை மையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி முன்னதாக ஒத்திவைக்கப்பட்டது.
தெலுங்கு இயக்குனர் குணசேகரன் இயக்கும் இந்தப் படத்தில் கௌதமி, மோகன்பாபு,பிரகாஷ்ராஜ், மதுபாலா, கபீர் சிங் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மணி சர்மா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். மற்றொரு புறம் நடிகர் வருண் தவானுடன் சிட்டாடல் தொடர், நடிகர் அக்ஷய் குமாருடன் பெயரிடப்படாத படம் ஆகியவற்றின் மூலம் பாலிவுட்டில் சமந்தா காலடி எடுத்து வைக்கும் நிலையில், சமந்தா மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
மேலும் நடிகர் விக்கி கௌஷலுடன் ‘த இம்மார்ட்டல் அஸ்வத்தாமா’ எனும் படத்திலும் சமந்தா இணைந்து நடிக்கவுள்ளார். இந்தப் படம் 2024ஆம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பணி நிமித்தமாகவும் பாலிவுட்டில் கவனம் செலுத்தும் வகையிலும்சமந்தா மும்பையில் சொகுசு வீடு வாங்கியுள்ளதாக முன்னதாகத் தகவல்கள் வெளியாகின. அதேபோல் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் சமந்தா நடித்து வருகிறார் சமந்தா.