சமஸ்கிருத ஸ்லோகத்தை காப்பியடித்தாரா? வைரல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அப்யங்கர்
கருப்பு படத்தின் சமஸ்கிருத ஸ்லோக சர்ச்சைக்கு பண்டித்துடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து முற்றுப்புள்ளி வைத்தார் சாய் அப்யங்கர்.

நடிகர் சூர்யா நடித்த 'கருப்பு' திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், படத்தின் பின்னணி இசை தொடர்பாக அண்மையில் சமூக வலைதளங்களில் ஒரு புதிய சர்ச்சை வெடித்தது. குறிப்பாக படத்தின் தொடக்கக் காட்சியில் இடம்பெற்றிருந்த சமஸ்கிருத ஸ்லோகம் குறித்த விவாதம் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சமஸ்கிருத ஸ்லோகத்தை காப்பியடித்தாரா சாய் அப்யங்கர்?
சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய ஒரு வீடியோவில், சமஸ்கிருத பண்டித் ஒருவர் மிக வேகமாக ஒரு ஸ்லோகத்தை உச்சரிப்பது இடம்பெற்றிருந்தது. அந்த வீடியோவில் இடம்பெற்ற அதே உச்சரிப்பு மற்றும் ஒலியமைப்பு, 'கருப்பு' திரைப்படத்தில் சூர்யாவின் அறிமுகக் காட்சியிலும் இடம்பெற்றிருப்பதாக நெட்டிசன்கள் சுட்டிக்காட்டினர். இதையடுத்து, இசையமைப்பாளர் சாய் அப்யங்கர், அந்த ஸ்லோகத்தை அனுமதி பெறாமல் பயன்படுத்தியதாக சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
கருப்பு track அடேய் மொசக்கர sai abhyankar pic.twitter.com/v9dpyVvFaP
— anushiya (@anushiyaxx) July 26, 2026
இந்த விவகாரம் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறிய நிலையில், சாய் அப்யங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சர்ச்சைக்குக் காரணமான அந்த சமஸ்கிருத பண்டித்துடன் தனது YOLO Studios அலுவலகத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். சட்டரீதியாக அனுமதியுடனே கருப்பு படத்தில் இந்த ஸ்லோகத்தை சாய் அப்யங்கர் பயன்படுத்தியுள்ளது இதன் மூலம் தெரியவந்துள்ளது.
அந்தப் பதிவில், சம்பந்தப்பட்ட பண்டித்தை நேரில் சந்தித்தது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்ததாகவும், அவருடன் இசை, ஆன்மிகம் மற்றும் பாரம்பரிய மந்திர உச்சரிப்புகள் குறித்து கலந்துரையாடியதாகவும் சாய் அப்யங்கர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவு வெளியானதைத் தொடர்ந்து, இருவருக்கும் இடையே நல்ல புரிதல் இருப்பது தெளிவாகியுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















