இண்டீ மியுசிக் என்றால் என்ன ? சாய் அப்யங்கர் - ஹிப்ஹாப் தமிழா இடையில் என்ன வித்தியாசம் ?
இண்டீ மியூசிக் என்றால் என்ன? ஹிப்ஹாப் தமிழா எப்படி சுயாதீன கலைஞரானார்? சாய் அப்யங்கரை சுயாதீன இசை கலைஞர் என அழைக்கலாமா?

ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்துள்ள மீசையை முறுக்கு 2 திரைப்படம் சுயாதீன இசை தொடர்பான விவாதத்தை தொடங்கி வைத்துள்ளது. பிரபல மியுசிக் லேபிள்களின் வழியாக சாய் அப்யங்கர் முதல் பல இளம் இசையமைப்பாளர்கள் இன்று சுயாதீன இசை கலைஞர்களாக அடையாளப்படுத்தப் படுகிறார்கள். ஆனால் உண்மையில் சுயாதீன இசை என்றால் என்ன ? யாரை சுயாதீன இசைக்கலைஞர்கள் என்று இந்த இசை நிறுவனங்கள் அடையாளப்படுத்துபவர்கள் உண்மையில் சுயாதீன இசைகலைஞர்கள் தானா ?
இண்டீ மியூசிக் என்றால் என்ன?
உலகம் முழுவதும் வெகுஜன சினிமா , வெகுஜன இசை என்பது பெரும்பாலும் ஸ்டுடியோக்களால் கட்டுப்படுத்தப் படுகின்றன. எந்த மாதிரியான படம் வர வேண்டும் . எந்த மாதிரியான பாடல் உருவாக வேண்டும் என்பதை இந்த ஸ்டுடியோக்கள் அன்றைய டிரெண்டிற்கு ஏற்றபடி நிபந்தனைகளை உருவாக்குகிறார்கள். தங்களது படைப்புகளை வெளியிட படைப்பாளிகள் முதலீட்டை சார்ந்திருக்கிறார்கள். தங்களது படத்தையும் பாடலையும் உருவாக்கும் செலவு அதனை விளம்பரப்படுத்தும் செலவுகளுக்காக இந்த ஸ்டுடியோக்களை நாடியிருக்கும் சூழல் தான் இன்று உள்ளது. இந்த நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு தங்களுடைய படைப்பு சுதந்திரத்தையும் சில நேரங்களில் தியாகம் செய்ய தயாராக இருப்பவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைப்பதற்கான சாத்தியங்கள் அதிகம்.
இந்த டிரெண்டிற்குள் வர மறுக்கும் கலைஞர்களுக்கும் தங்களது படைப்பு சுதந்திரத்தை விட்டுத்தர மறுக்கும் கலைஞர்களுக்கு வாய்ப்புகள் அவ்வளவு சுலபமாக கிடைப்பதில்லை. அப்படி காம்பிரமைஸ் செய்துகொள்ள விரும்பாதவர்கள் தங்களுக்கான நிதியை தாங்களே திரட்டி எந்த ஸ்டுடியோ அல்லது நிறுவனத்தின் ஆதரவு இல்லாமல் தங்களது படைப்பை தாங்களே வெளியிடுவதை தான் சுயாதீன கலைஎன்கிறோம்
இண்டீ ’ என்பது ‘Independent’ என்பதன் சுருக்கம். ஒரு பெரிய இசை நிறுவனம் அல்லது திரைப்படத் தயாரிப்பு அமைப்பின் கட்டுப்பாட்டுக்கு வெளியே, இசைக்கலைஞர்கள் தங்களுடைய சொந்த முயற்சியில் பாடல்களை உருவாக்கி வெளியிடுவது பொதுவாக இண்டீ மியூசிக் என்று அழைக்கப்படுகிறது. இதன் மற்றொரு முக்கிய அம்சம், திரைப்படத்தின் கதையையோ காட்சியையையோ சார்ந்து பாடல் உருவாக்கப்பட வேண்டிய அவசியம் இல்லாததுதான்.
இசையமைப்பாளர் அல்லது பாடகர் தங்களுக்குப் பிடித்த இசை, வரிகள், குரல் மற்றும் தயாரிப்பு முறையைத் தேர்வு செய்து பாடலை உருவாக்கலாம். இதனால் இண்டீ இசையில் ஒரே மாதிரியான வடிவம் என்று எதுவும் கிடையாது. பாப், ராக், ஹிப்-ஹாப், எலக்ட்ரானிக், ஃபோக் என பல்வேறு இசை வகைகள் இதில் இடம்பெறலாம்.
ஹிப்ஹாப் தமிழா சுயாதீன இசை கலைஞரா ?
அந்த வகையில் ஹிப்ஹாப் தமிழா நிச்சயம் சுயாதீன இசை கலைஞர்கள் என்று அடையாளப்படுத்த தகுதியானவர். காரணம். எந்த இசை நிறுவனத்தின் முதலீடும் இல்லாமல் சினிமா பின்புலமோ இல்லாமல் பாடல்களை உருவாக்கி தனக்கென ஒரு அடையாளத்தையும் ரசிகர் வட்டத்தையும் உருவாக்கியவர். அவரது முதல் பாடல் க்ளப்புல மப்புல பாடல் 2011 ஆம் ஆண்டு ரேடியோவில் ஒலிபரப்பானது.
சாய் அப்யங்கர் சுயாதீன இசை கலைஞரா ?
ஆனால் இன்று சாய் அப்யங்கர் சுயாதீன இசை கலைஞர் என்று பரவலாக அடையாளப்படுத்துகிறார். அவரை அப்படி அடையாளப்படுத்துவது சரியா என்றால் இல்லை என்பது தான் பதில். சாய் அப்யங்கரின் முதல் பாடலான கட்சி சேர பிரபல மியுசிக் லேபிளான திங்க் மியுசிக் தயாரித்து வெளியிட்டது. இதுதவிர சாய் அப்யங்கரின் பெற்றோர்கள் திப்பு மற்றும் ஹரினி ஏற்கனவே திரைத்துறையில் பிரபலமான பின்னணி பாடகர்களாக அறியப்படுபவர்கள். இங்கு சாய் அப்யங்கரின் திறமை குறித்து எந்த சந்தேகமும் இல்லை. ஒரு பாடலை லட்சக்கணக்கானவர்களை ரிபீட் மோடில் கேட்கவைக்கக் கூடிய திறமை சாய் அப்யங்கரிடம் இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் சாய் அப்யங்கருக்கு கிடைத்த அதே முதலீடு எந்த வித பின்புலமும் இல்லாத ஒரு இசை கலைஞருக்கு கிடைத்திருக்குமா என்று கேட்டால் நிச்சயம் இல்லைதான். அதே நேரம் கார்பரேட் நிறுவங்களின் கட்டுப்பாட்டில் இல்லாமல் கலைஞர்களின் படைப்பு சுதந்திரத்தை முன்னிறுத்தும் இயக்கமாக சுயாதீன கலை இயக்கம் உருவாகியபோது திங் மியுசிக் போன்ற பிரபல நிறுவனத்தின் முதலீட்டில் உருவான பாடல் மற்றும் கலைஞரை எப்படி இண்டீ என்கிற வகைமைக்குள் கொண்டு வர முடியும் ?
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















