RRR: ஆஸ்கர் அவார்டை குறிவைக்கும் ஆர்.ஆர்.ஆர்..! சர்வதேச அரங்கில் ப்ரமோஷனுக்கு எவ்வளவு செலவு தெரியுமா..?
ஆர்.ஆர்.ஆர் படத்துக்கான இத்தகைய பிரச்சாரங்கள் மற்றும் விளம்பரங்களுக்காக ஒரு பெரும் பங்கு தொகையை ராஜமௌலியே செலவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்.ஆர். ஆர் படத்தை சர்வதேச அரங்கில் விளம்பரப்படுத்தவும், கோல்டன் குளோப் மற்றும் ஆஸ்கர் விருது விழாக்களுக்கான பிரச்சாரங்களுக்காகவும் இயக்குநர் ராஜமௌலி ஒரு பெரும் தொகையை செலவழித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்கர் பட்டியலில் ஆர்.ஆர்.ஆர்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் தேதி தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியான ஆர்.ஆர்.ஆர் படம், இதுவரை சுமார் 1200 கோடி ரூபாய் வரை வசூலித்து மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளதுடன் சர்வதேச அரங்கிலும் கவனமீர்த்து வருகிறது.
ஜூனியர் என்.டி.ஆர். ராம் சரண், அலியா பட், ஷ்ரேயா சரண், ஒலிவியா மோரிஸ், அஜய் தேவ்கன் எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்துள்ள நிலையில், இப்படத்தின் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதுகளில் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான பிரிவில் பரிந்துரையாகி அசத்தியுள்ளது.
கோல்டன் க்ளோப் விருது:
எனினும் சிறந்த படம் உள்ளிட்ட பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளுக்கு இந்தியா சார்பில் அதிகாரப்பூர்வமாக ஆர்.ஆர்.ஆர் படம் அனுப்பப்படாத நிலையில், இயக்குனர் எஸ்எஸ் ராஜமௌலி மற்றும் அவரது படக்குழுவினர் ஆஸ்கர் பந்தயத்தில் தாங்களாகவே பங்கேற்று பல பிரிவுகளில் தங்கள் படத்தை பரிந்துரைத்தனர்.
இதன் மூலம் இந்திய சினிமாத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு புது மாதிரியான எடுத்துக்காட்டாக மாறிய ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினர், கோல்டன் க்ளோப், ஹாலிவுட் க்ரிட்டிக் சாய்ஸ் விருதுகள் உள்ளிட்ட பல முக்கிய விருது விழாக்களில் போட்டியிட்டதுடன் விருதுகளையும் வென்று ஒட்டுமொத்த இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளனர். ஜேம்ஸ் காமரூன், ஸ்டீஃபன் ஹாக்கிங் என பல முக்கிய இயக்குனர்களின் பாராட்டுகளைப் பெற்ற ஆர்.ஆர்.ஆர் படம் கடந்த சில வாரங்களாக சமூக வலைதள சென்சேஷனாக மாறி கவனமீர்த்து வருகிறது.
83 கோடி ரூபாய்:
இந்நிலையில், ஆர்.ஆர்.ஆர் படத்துக்கான இத்தகைய பிரச்சாரங்கள் மற்றும் விளம்பரங்களுக்காக ஒரு பெரும் பங்கு தொகையை ராஜமௌலியே செலவிட்டுள்ளதாகவும், மேலும், படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் இருந்து குறிப்பிட்ட தொகை எடுக்கப்பட்டு செலவிடப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து தனியார் பத்திரிகை ஒன்றில் வெளியான தகவல்களின்படி, ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினர் சர்வதேச அரங்கில் படத்தை விளம்பரப்படுத்த 83 கோடி ரூபாய் வரை செலவழித்துள்ளதாகவும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் ஜப்பான் மற்றும் ரஷ்ய பாக்ஸ் ஆபிஸ் வசூலில் இருந்து ஒரு பங்கும், ராஜமௌலியின் சொந்த செலவாக குறிப்பிட்டத் தொகையும் செலவழிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 95ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா வரும் மார்ச்.13ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், நாட்டு நாட்டு பாடல் நிச்சயம் ஆஸ்கர் வெல்லும் என நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர் இந்திய ரசிகர்கள்.