Mamannan: தேவர்மகன் விமர்சன விவகாரம்; 'என்னால் நடிக்க முடியாது..' இயக்குனர் மாரி செல்வராஜ்..!
தேவர் மகன் படம் குறித்து பேசியதற்கு விளக்கம் அளித்துள்ள இயக்குனர் மாரி செல்வராஜ், 'உணர்வுகள் உண்மையானவை என்பதால் என்னால் நடிக்க முடியாது' என தெரிவித்துள்ளார்.
மாமன்னன்’ ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், கமல் முன்னிலையிலேயே தேவர் மகன் படத்தை விமர்சனம் செய்தார். ‘மாமன்னன்’ உருவாவதற்கு ‘தேவர் மகன்’தான் காரணம் என்றும் படத்தை பார்த்தபோது தனக்கு ஏற்பட்ட வலி, அதிர்வுகளை கடக்க முடியாமல் தவித்ததாகவும் கூறினார். ‘தேவர் மகன்’ படம் சரியா? தவறா? என்று சொல்லத் தெரியாமல் பெரிய வலியை கொடுத்ததாகவும் தெரிவித்தார்.
தேவர்மகனும், மாமன்னனும்:
தேவர் மகனில் நடித்த இசக்கி கதாபாத்திரம்தான் மாமன்னன் என மாரி செல்வராஜ் குறிப்பிட்டார். மாரி செல்வராஜ் பேசியது இணையத்தில் வைரலாகிய நிலையில், அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் எழுந்துள்ளன.
இந்நிலையில், ‘மாமன்னன்’ திரைப்படம் வெளியான பிறகு தனக்கும், நடிகர் கமல்ஹாசனுக்கும் இடையேயான உரையாடல் முழுமையடையும் என இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். ‘தேவர்மகன்’ திரைப்படம் தொடர்பாக அவர் பேசிய விவகாரம் விவாதத்துக்குள்ளான நிலையில் நேர்காணல் ஒன்றில் அவர், இவ்வாறு கூறியுள்ளார்.
என்னால் நடிக்க முடியாது:
பேட்டியில் அவர் கூறியதாவது: “நான் அப்படி பேசியிருக்க வேண்டாம் என பலர் என்னிடம் சொன்னார்கள். தேவர்மகன் படத்தை விமர்சித்து கடிதம் எழுதவில்லை என சொல்லவில்லை. என் உணர்வுகள் உண்மையானவை, ஆகையால் நான் நடிக்க முடியாது. ‘மாமன்னன் திரைப்படம் நம்முடைய அரசியல்’ என கமல் சொன்னார். ஏக்கத்தின் அடிப்படையில் வந்த வார்த்தைகளை தான் மேடையில் பேசினேன்" என்று கூறியுள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'மாமன்னன்'. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க வடிவேலு, ஃபகத் பாசில், ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வருகிற 29ஆம் வெளியாகவுள்ள நிலையில் உதயநிதி நடிப்பில் கடைசி படமாக வெளியாகவுள்ளது.
இதற்கிடையே மாமன்னன் படத்தை வெளியிட தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராமசரவணன் என்பவர் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று நீதிபதி குமரேஷ்பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது உதயநிதி ஸ்டாலின் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் கேட்டு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து இருவரும் வருகிற 28ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இவ்வழக்கு விசாரணையை 28-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
மேலும் படிக்க