Rashmika Mandanna: நடிகை ரஷ்மிகாவை ஆபாசமாக சித்தரித்து வீடியோ: கடும் கண்டனத்தை பதிவு செய்த அமிதாப்!
Rashmika Mandanna : வெளியான ராஷ்மிகா மந்தனாவின் டீப்ஃபேக் வீடியோவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் நடிகர் அமிதாப் பச்சன்
தென்னிந்திய சினிமாவின் கனவு கன்னியாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் பாலிவுட்டிலும் அறிமுகமாகி ஒரு பான் இந்திய நடிகையாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 'கீதா கோவிந்தம்' படம் மூலம் இளைய தலைமுறையினரின் ஃபேவரட் நடிகையான ராஷ்மிகா, 'சுல்தான்' திரைப்படத்தில் நடிகர் கார்த்தி ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
பான் இந்திய நடிகை :
இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான 'வாரிசு' படத்தில் இளைய தளபதி விஜய் ஜோடியாக இணைந்த ராஷ்மிகா தற்போது தனுஷ் நடிக்கும் டி51 படத்தில் இணைந்துள்ளார். மேலும் புஷ்பா 2 படத்திலும் பிஸியாக நடித்து வருகிறார். தென்னிந்திய லெவெலில் கொண்டாடப்பட்டு வந்த ராஷ்மிகா மந்தனா பாலிவுட் பக்கம் என்ட்ரி கொடுத்து நடிகர் அமிதாப்பச்சன் மகளாக 'குட் பை' படத்திலும் 'அனிமல்' படத்தில் ரன்பீர் கபூர் ஜோடியாகவும் நடித்து பட்டையை கிளப்பினார்.
பிரபலங்கள் கண்டனம் :
ஒரு முன்னணி நடிகையாக முன்னேறி வரும் ராஷ்மிகா மந்தனாவின் வளர்ச்சி பொறுக்காமல் அவரை அசிங்கப்படுத்தும் வகையில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. டீப்ஃபேக் மூலம் வேறு ஒரு நடிகையின் வீடியோவில் ரஷ்மிகாவின் முகத்தை பொருத்தி சமூக வலைத்தளங்களில் வீடியோவை வெளியிட்டுள்ளனர். ரஷ்மிகாவின் இந்த முகம் சுளிக்க வைக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. திரை பிரபலங்கள் பலரும் இந்த வீடியோவுக்கு கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.
அமிதாப் பச்சன் பதிவு :
அந்த வகையில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனும் தனது கண்டனத்தை எக்ஸ் தள பக்கம் மூலம் தெரிவித்துள்ளார். சாரா படேல் என்ற வேறு ஒரு நடிகை வெளியிட்ட வீடியோவில் ரஷ்மிகாவின் முகத்தை இணைத்து வீடியோவை வெளியிட்டுள்ளனர் என்று தனது பதிவில் சுட்டி காட்டியுள்ளார்.
சோசியல் மீடியா பயனாளர்கள் இந்த வீடியோவிற்கு எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். "பொருத்தமற்ற வீடியோக்களை உருவாக்க டீப்ஃபேக் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது மிகவும் வேதனைக்குரியது. அது மட்டுமின்றி அது தனிமனித உரிமையை மீறும் ஒரு செயலாகும்" இது போன்ற செயல்கள் மீது நிச்சயம் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இந்த வீடியோக்களை உருவாக்குபவர்களையும் விநியோகிப்பவர்களையும் சட்டப்படி கண்டிக்க வேண்டும். டிஜிட்டல் ஆள்மாறாட்டம் மற்றும் புகைப்படங்களை தவறாக பயன்படுத்துதல் போன்றவையும் சைபர் கிரைம் சட்டத்தின் கீழ் அடங்கும். பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.அதற்கு சட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்" என சோசியல் மீடியா பயனாளர் ஒருவரின் ட்வீட் கிளிப்பை பகிர்ந்து "ஆம் இது சட்டத்திற்கு வலுவான வழக்கு" என தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார் நடிகர் அமிதாப் பச்சன்.
விகாஸ் பெஹல் இயக்கத்தில் வெளியான 'குட் பை' படத்தில் அமிதாப் பச்சன் - ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்திருந்தனர். இப்படத்தில் நீனா குப்தா, எல்லி அவ்ராம், பவயில் குலாட்டி, சாஹில் மேத்தா, சுனில் குரோவர் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.