Ram Charan in Virat Kohli Biopic: 'விராட்கோலியின் பயோபிக் படத்தில் நடிக்க ஆசை' ஆர்.ஆர்.ஆர். நாயகன் ராம்சரண் விருப்பம்
ஆஸ்கர் விருது பெற்ற நடிகர் ராம் சரண் எதிர்காலத்தில் இந்தியா கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் வழக்கை வரலாற்று திரைப்படத்தில் நடிக்க விருப்பப்படுவதாக தெரிவித்துள்ளார்.
உலக சினிமா கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிகவும் மதிப்புமிக்க விருதான 95வது ஆஸ்கர் அகாடமி விருதுகள் மார்ச் 13ம் தேதி அமெரிக்கா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த ஆண்டு தென்னிந்திய சினிமா வரலாற்றில் ஒரு முக்கியமான ஆண்டாக அமைந்தது.
‘தி எலிஃபண்ட் விஸ்பர்ஸ்’ ஷார்ட் பிலிம் பிரிவிலும் எஸ்.எஸ்.ராஜமௌலியின் ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தின் 'நாட்டு நாட்டு...' பாடல் 'சிறந்த ஒரிஜினல் பாடல்' பிரிவிலும் ஆஸ்கர் விருதுகளை வென்றது. ஒரு பாடலுக்காக இந்தியா ஆஸ்கர் விருதை கைப்பற்றியுள்ளது. இதுவே முதல் முறை என்பதால் அனைத்து திசைகளில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. சோசியல் மீடியா முழுவதும் ரசிகர்களின் பாராட்டுக்கள் மட்டுமின்றி பிரபலங்களின் பாராட்டுகளும் ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினருக்கு குவிந்து வருகிறது. அந்த பாராட்டு மழையில் நனைபவர்களில் ஒருவர் தென்னிந்திய நடிகர் ராம் சரண். ஆஸ்கர் விருதுடன் இந்தியா திரும்பிய நடிகர் ராம் சரண் இந்தியா நாட்டில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சமீபத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துகளை பெற்றார்.
விராட் கோலியின் பயோபிக்கில் ராம் சரண் :
மேலும் நடிகர் ராம் சரண் 'இந்தியா டுடே கான்க்ளேவ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ராம்சரண் சில கேள்விகளுக்கு பதிலளித்தார். அந்த வகையில் நீங்கள் எதிர்காலத்தில் எந்த மாதிரியான கதாபத்திரங்களில் நடிக்க விரும்புகிறீர்கள் என கேட்கப்பட்டது. இந்த கேள்விக்கு சிறிது நேரம் யோசித்து பதிலளித்த ராம் சரண், "விளையாட்டு சம்பந்தமான கதாபத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். ஸ்போர்ட்ஸ் படங்களில் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை" என கூறினார். அப்போது நீங்கள் இந்தியா கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிப்பீர்களா என பரிந்துரைத்துள்ளார். இதற்கு பதிலளித்த ராம் சரண் "விராட் ஒரு உத்வேகமான ஆளுமை கொண்ட பிளேயர். எனக்கு அவரின் பயோபிக்கில் நடிக்க வாய்ப்பு அமைந்தால் நிச்சயமாக நடிப்பேன். அவரை போலவே தான் நான் தோற்றமளிக்கிறேன் அல்லவா?" என கூறியிருந்தார் நடிகர் ராம் சரண்.
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் :
தற்போது நடிகர் ராம் சரண் இயக்குனர் ஷங்கர் இயக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு 'சிஇஓ' என தலைப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் சமீபத்தில் வெளியாகின. ஆனால் அது குறித்த அதிகாரபூர்வமான தகவல் வெளியாகவில்லை. இப்படத்தில் ராம் சரண் ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். மேலும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஜெயராம் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.