SS Rajamouli: ‘நோ எண்ட்ரீ’.. ராஜமௌலிக்கு நோ சொன்ன பாகிஸ்தான்.. போட்டுடைத்த ஆனந்த் மஹிந்திரா
அடுத்த படம் தொடர்பாக இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலிக்கு தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா ஐடியா கொடுத்த நிலையில், முக்கியமான சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது.
அடுத்த படம் தொடர்பாக இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலிக்கு தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா ஐடியா கொடுத்த நிலையில், முக்கியமான சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது.
பிரமாண்ட இயக்குநர்
இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் என பெயரெடுத்த இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி, 2001 ஆம் ஆண்டு ஸ்டூடண்ட் நம்பர் 1 என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து சிம்ஹத்ரி, ஷை, சத்ரபதி, விக்ரமர்குடு, யமதொங்கா, மகதீரா, மரியாதை ராமண்ணா, ஈகா, பாகுபலி, பாகுபலி 2, ஆர்.ஆர்.ஆர். என பல படங்களை இயக்கி ரசிகர்களிடையே பிரபலமானார்.
குறிப்பாக மகதீரா படத்திற்கு பிறகு அவர் தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி என அனைத்து மொழி மக்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்றார். இந்த நிலையில், ராஜமௌலி கடைசியாக ஆர்.ஆர்.ஆர். என்ற படத்தை இயக்கியிருந்தார். ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., அஜய் தேவ்கன், ஆலியா பட், ஸ்ரேயா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்த இப்படத்திற்கு கீரவாணி இசையமைத்திருந்தார். இப்படம் வசூலில் மாபெரும் சாதனைப் படைத்த நிலையில் கடந்த மாதம் அமெரிக்காவில் நடந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் விருது வென்றது.
ஆஸ்கர் வென்ற ஆர்.ஆர்.ஆர்
இந்த படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. இதற்கான விருதை இசையமைப்பாளர் கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் பெற்றனர். இந்த மகிழ்ச்சியான தருணத்தை இந்தியாவே கொண்டாடியது. இதனைத் தொடர்ந்து ராஜமௌலி இயக்கும் அடுத்தடுத்த படங்கள் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த வகையில் அவர் அடுத்ததாக நடிகர் மகேஷ் பாபுவுடன் இணைய உள்ளதாக சொல்லப்படுகிறது. 3 பாகங்களாக உருவாக உள்ளதாக கூறப்படும் இப்படம் கடவுள் அனுமானின் வரலாற்றை தழுவி எடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜமௌலியின் ட்வீட்
இந்நிலையில் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, தனது ட்விட்டர் பக்கத்தில், புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அதில், “வரலாற்றை உயிர்ப்பிக்கும் மற்றும் நம் கற்பனையைத் தூண்டும் அற்புதமான எடுத்துக்காட்டுகள் இவை. அந்தப் பழங்கால நாகரிகத்தைப் பற்றிய உலகளாவிய விழிப்புணர்வை உருவாக்கும் அந்த சகாப்தத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு திரைப்படத்தைப் பரிசீலிக்க ராஜமவுளிக்கு சொல்லுங்கள்” என தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள ராஜமௌலி, “ஆமாம் சார்... தோலாவிராவில் மகதீரா படப்பிடிப்பின் போது, பழமையான ஒரு மரத்தைப் பார்த்தேன். அது புதைபடிவமாக மாறியது. அப்போது சிந்து சமவெளி நாகரீகத்தின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி பற்றிய ஒரு படத்தின் சிந்தனை தோன்றியது. சில வருடங்கள் கழித்து மீண்டும் பாகிஸ்தானுக்கு சென்றேன். மொஹஞ்சதாரோவுக்குச் செல்ல மிகவும் முயற்சி செய்தேன். துரதிர்ஷ்டவசமாக, அனுமதி மறுக்கப்பட்டது” என தெரிவித்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குநருக்கே பாகிஸ்தானில் அனுமதி மறுப்பா என சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளனர்.