கர்நாடகாவில் தக் லைஃப் ஒத்திவைப்பு...கமலால் கமலுக்கு எத்தனை கோடி நஷ்டம் தெரியுமா ?
கமலின் தக் லைஃப் படம் கர்நாடக மாநிலத்தில் வெளியாகாத காரணத்தில் பட தயாரிப்பு நிறுவனத்திற்கு எத்தனை கோடி நஷ்டம் தெரியுமா ?

கர்நாடகாவில் தக் லைஃப் ரிலீஸ் ஒத்திவைப்பு
மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படம் வரும் ஜுன் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் மட்டும் படத்தின் ரிலீஸ் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழில் இருந்து கன்னட மொழி பிறந்தது என கமல் கூறியது கர்நாடகா மொழி மற்றும் கலாச்சார அமைப்புகளிடம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கமல் பொது மன்னிப்பு கேட்டால் மட்டுமே தக் லைஃப் படத்தை வெளியிட முடியும் என கன்னட திரைப்படம் மற்றும் வனிக சபை உறுதியாக உள்ளது.
கடைசிவரை மன்னிப்பு கேட்காத கமல்
தான் பேசிய கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டதற்கு தான் மன்னிப்பு கேட்க முடியாது என கமல் திட்டவட்டமாக கூறிவிட்டார். இதனைத் தொடர்ந்து கர்நாடகாவில் தக் லைஃப் படத்தை வெளியிடவும் படம் வெளியாகும் நாளன்று திரையரங்கில் பாதுகாப்பு வழங்கும்படியும் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் கமல் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் சார்பாக மனு தாக்கல் செய்திருந்தார். இந்த விசாரணையின் முடிவில் கன்னட திரைப்பட சபையுடன் கமல் சமரச பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்கு வருவது வரை கர்நாடகாவில் தக் லைஃப் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 10 ஆம் தேதிக்கு இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது
கமலால் எவ்வளவு நஷ்டம்
தமிழ் படங்களுக்கு கன்னட ரசிகர்களிடம் எப்போதும் பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. தற்போது தக் லைஃப் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டதாக் தயாரிப்பாளர்களுக்கு கடும் நஷ்டம் ஏற்பட இருப்பதாக சினிமா ஆய்வாளர்கள் கணித்துள்ளார்கள். தயாரிப்பாளர் தனஞ்சயன் தெரிவித்துள்ள தகவலின் படி கர்நாடகாவில் தக் லைஃப் படம் வெளியாகத காரணத்தினால் படக்குழுவுக்கு ரூ 35 முதல் 40 கோடி வரை நஷ்டம் ஏற்படும் என்றும் தயாரிப்பாளர்களுக்கு ரூ 12 முதல் 15 கோடி வரை ஷேரில் நஷ்டம் ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.
சுமார் ரூ 300 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் தக் லைஃப் படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனமும் மணிரத்னமின் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ளது.





















