Kushi 2: குஷி 2 வில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய்? ஓபனாக சொன்ன தயாரிப்பாளர்!
Kushi 2: குஷி-2 வில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் நடிக்க வேண்டும் அந்த படத்தை எஸ். ஜே. சூர்யா இயக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Kushi 2: குஷி-2 வில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் நடிக்க வேண்டும் அந்த படத்தை எஸ். ஜே. சூர்யா இயக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் கோரிக்கை விடுத்துள்ளார்.
குஷி -2 ரீ ரிலீஸ்:
ஏ.எம்.ரத்னம் தயாரித்து, எஸ்.ஜே.சூர்யா இயக்கிய படம் குஷி. தளபதி விஜய், ஜோதிகா நடிப்பில் 2000ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற இந்த படம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்கில் வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி வெளியாக உள்ளது. சக்தி ஃபிலிம் ஃபேக்டரியின் சக்திவேலன் விநியோகம் செய்கிறார். அதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் இன்று(செப்டம்பர் 22) நடைபெற்றது. இதில் பேசிய தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், “இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் குஷி படத்தை பார்த்து சந்தோஷப்படுவார்கள் என்று நம்புகிறேன். எடிட்டர் விஜயன் என்னிடம், வாலி படம் நன்றாக இருக்கிறது. அஜித் சார் சூர்யாவிற்கு பைக் வாங்கி கொடுத்திருக்கிறார் என்று கூறினார். நான் உடனே சூர்யாவை தேட ஆள் அனுப்பினேன். நாயகனாக யாரை வேண்டுமானாலும் தேர்வு செய்யுங்கள், எனக்கு இயக்குனர் தான் முக்கியம் என்று கூறினேன். அதன்பிறகு விஜய் சாருக்கு கதை கூறினோம். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மூன்று மொழிகளிலும் சூர்யா தான் இயக்கினார். ஜோதிகா, பூமிகாவைப் பார்த்தால் அவர்கள் தெரியமாட்டார்கள், சூர்யா தான் தெரிவார். பூமிகாவை தேர்வு செய்யலாம் என்று பேசிக் கொண்டிருக்கும் போது, அந்த பெண் மென்மையானவர்.
இந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடிப்பாரா? என்று கேட்டார்கள். அதற்கு நான், சூர்யா வேலை வாங்கிவிடுவார் என்று கூறினேன். இப்படத்திற்கு தேவா சார் இசை என்றால் நம்ப முடியாது. அப்போது அவருடன் மூன்று சகோதரர்களும் இணைந்திருந்தார்கள். இந்தப் படத்திற்கு டாப் ஆங்கிள் லவ் ஸ்டோரி என்று பெயர் வைத்திருக்கிறேன். ஏனென்றால், கல்கத்தாவில் பிறக்கும் ஒரு பையனும், இங்கு பிறக்கும் பெண்ணும் ஒன்று சேர்வார்கள் முதலிலேயே கூறிவிடுவார். அது எப்படி என்பதை சுவாரசியமாக கொடுத்திருக்கிறார். அந்த சமயத்தில் விஜய் டாப் ஹீரோ. இந்த படத்தில் சண்டைக் காட்சிகள் இல்லை, வையுங்கள் என்று விஜய் கூறினார். ஆனால், சூர்யா இது லவ் ஸ்டோரி, இதில் வைக்க முடியாது என்றார். அதன்பிறகு பேசி ஒரு காட்சி வைத்தோம். உதயம் திரையரங்கில் படத்தின் முன்னோட்டம் பார்த்தோம்.
குஷி 2 வில் விஜய் மகன்?
இந்தியன் படம் போல மாஸ் படமாக இல்லாமல், காதல் கதையாக இருக்கிறதே என்று பயந்தேன். ஆனால், முதல் காட்சிக்குப் பிறகு ரசிகர்கள் படத்தில் ஒன்றிவிட்டார்கள். சூர்யா படம் ஹிட் என்று அப்போதே கூறிவிட்டேன். வைரமுத்து சார் பார்த்து விட்டு, முதலில் தயாரிப்பாளருக்கு போன் செய்யுங்கள். ஈகோ என்ற மெலிதான வரியை வைத்துக் கொண்டு பெரிய பொருட்செலவில் படம் தயாரிக்க தைரியம் வேண்டும் என்று வைரமுத்து சார் கூறியதாக சூர்யா சொன்னார். இப்போது இருக்கும் ரசிகர்களுக்கு இப்படத்தின் திரையரங்கு அனுபவம் இருக்காது. ஆகையால், இப்படத்தை நன்றாக ரசிப்பார்கள் என்று உங்களைப் பார்க்கும் போதே தெரிகிறது. இந்த சந்தர்ப்பத்தில் பார்ட் 2 படங்கள் டிரெண்டாக இருக்கிறது. அதில் குஷி - 2 படம் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. இப்படத்தையும் சூர்யா சாரே இயக்க வேண்டும். விஜய் சார் நடித்தாலும் சரி அல்லது அவர் மகன் நடித்தாலும் சரி அல்லது வேறு யார் நடித்தாலும் சரி, சூர்யா இயக்குவார் என்று நினைக்கிறேன்" என்றார்.





















