Priya Bhavani Shankar: 'காசு தானா தேடி வராது..' நச்சுனு அட்வைஸ் பண்ண பிரியாபவானி சங்கர்..!
தன் தொழிலுக்காகவே தன் சருமத்தைப் பேணிவருவதாகவும், சாதாரண மக்கள், கேலிகளுக்கு பயந்து உங்கள் நிறத்தை மாற்றிக் கொள்ள தேவையில்லை, கவலை இல்லாமல் மகிழ்வாக வாழுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளர், தொலைக்காட்சி தொகுப்பாளினி என தன் பயணத்தைத் தொடங்கிய நடிகை பிரியா பவானி சங்கர், தான் இயக்குநர் கௌதம் மேனனை பேட்டி காணும் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோவைப் பகிர்ந்து பிரியா பவானி சங்கர் தெரிவித்திருப்பதாவது:
“இது மிகவும் நாஸ்டாலஜிக்காகாக உள்ளது, இந்த வீடியோவை தோண்டி எடுத்தவர்களுக்கு நன்றி. நான் மிகவும் சுவாரஸ்யமான பயணத்தை மேற்கொண்டுள்ளேன் என்பதை என்னால் பார்க்க முடிகிறது. மேலும் சில விஷயங்களை நான் இங்கே கூற விரும்புகிறேன். பெண்களே, ஆண்களே... மக்கள் உங்களை கேலி, கிண்டல் செய்வார்கள். உங்கள் தோற்றம் மற்றும் உடலுக்காக உங்களைத் தாழ்த்துவார்கள். நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள், என்னவாக இருக்கப் போகிறீர்கள் என்பதை அவர்கள் வரையறுக்க எப்போதும் அனுமதிக்காதீர்கள்.
அழகுக்கு வரையறை இல்லை:
அழகுக்கு எந்த வரையறையும் இல்லை. ஒரு சாதாரண கல்லூரிப் பெண்ணால் பெற முடியாத தோல் பராமரிப்பு பொருள்கள், வாழ்க்கை முறை போன்றவற்றில் நடிகர், நடிகைகள் அவ்வளவு அதிகமாக செலவழிக்கிறார்கள். எனவே உங்கள் சருமம் கருத்தாலோ, உங்களுக்கு சிறந்த சருமம் இல்லை என்றாலோ அல்லது நீங்கள் சிறந்த உடல் வளைவுகளைக் கொண்டு இல்லாவிட்டாலோ பரவாயில்லை.
இன்ஸ்டாகிராம் படங்களை பார்த்து மயங்கி விடாதீர்கள். இன்று எனக்கு மேக் அப் செய்து ஆடை தேர்வு செய்து அலங்கரிப்பதற்காகவே 10 பேர் கொண்ட குழு உள்ளது. இது நிச்சயமாக ஒரு குறிக்கோள் அல்ல. எனக்கு இது ஒரு தொழில். வேலைக்காகவே இதை செய்கிறேன். எனவே இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் வீடியோவில் இருக்கும் என்னைப்போல உங்கள் வாழ்க்கையை முழுமையாக வாழுங்கள்.
கலர் மாற வேண்டும் என்ற கட்டாயமில்லை:
காசு வந்தா காக்கா கூட கலர் ஆயிடும்னு சில பேர் சொல்லுவாங்க. காசு தானா தேடி வீட்டுக்கு வராது. நீங்கள் உலகத்துடன் போராடி நீங்கள் விரும்புவதைப் பெற வேண்டும். நீங்கள் அந்த காசைப் பெறும்போது, அதை நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்களே தீர்மானிக்க வேண்டும். கலர் மாறவேண்டும் என்பது கட்டாயம் இல்லை” என பிரியா பவானி சங்கர் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
மேலும் தன் காதலர் ராஜவேலைக் குறிப்பிட்டு தன் காதலைப் பகிர்ந்துள்ள பிரியா பவானி சங்கர், “அன்றும், இன்றும் என்னை ஒரே மாதிரியாக தான் பார்த்துள்ளீர்கள். எனவே நீங்களும் அப்படிப்பட்ட நபரைக் கண்டால், அந்த நபரை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்” எனவும் தெரிவித்துள்ளார்.
பிரியா பவானி சங்கரின் இந்தப் பதிவு இன்ஸ்டாவில் லைக்ஸ்களைப் பெற்று கவனமீர்த்து வருகிறது.