Ponniyin Selvan: தியேட்டரில் வந்தியத்தேவன், குந்தவை... PS1 கதாபாத்திரங்கள் கெட் அப்பில் வந்த ரசிகர்கள்!
பொன்னியின் செல்வன் திரைப்படத்தைக் காண வந்தியத்தேவன், குந்தவை, ஆழ்வார்க்கடியான் உள்ளிட்ட கதாபாத்திரங்கள் போல் வேடமிட்டு ரசிகர்கள் வருகை தந்தது அங்கிருந்தோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், திரையரங்குக்கு பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்கள் போல் வேடமணிந்து ரசிகர்கள் படம் பார்க்க வந்தது கவனமீர்த்துள்ளது.
எழுத்தாளர் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை மையமாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள பிரம்மாண்ட திரைப்படம் பொன்னியின் செல்வன் செப்டெம்பர் 30ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
படம் வெளியாகி இன்று 10ஆவது நாள் நடைபெறும் நிலையில், பாக்ஸ் ஆஃபிஸில் இதுவரை சாதித்த தமிழ் படங்களின் ரெக்கார்டுகளை பொன்னியின் செல்வன் தவிடுபொடியாக்கி வருகிறது.
View this post on Instagram
தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 150 கோடி வசூலை படம் கடந்துள்ள நிலையில், தெலுங்கு, இந்தி, கன்னடா, மலையாளம், வெளிநாடுகள் என அனைத்து வட்டாரங்களிலும் படம் நல்ல வசூலைக் குவித்து வருகிறது.
கிட்டத்தட்ட 300 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரிக் குவித்துள்ள பொன்னியின் செல்வன் படம், பிரிட்டன் நாடுகளில் இதுவரை தமிழ் சினிமாக்கள் குவித்திராத வசூலை ஈட்டியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், முன்னதாக கும்பகோணத்தில் உள்ள திரையரங்கம் ஒன்றில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தைக் காண இக்கதையின் முக்கியக் கதாபாத்திரங்களான, வந்தியத்தேவன், குந்தவை, நந்தினி, ஆதித்த கரிகாலன், அருண்மொழிவர்மன், ஆழ்வார்க்கடியான் ஆகிய கதாபாத்திரங்கள் போல் வேடமிட்டு ரசிகர்கள் வருகை தந்தது அங்கிருந்தோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இன்றைய கும்பகோணம் பகுதிகளில் தான் இந்நாவலின் முக்கியக் கதாபாத்திரங்களில் ஒருவரும், ராஜராஜ சோழனின் அக்காவுமான குந்தவைப் பிராட்டி வசித்துவந்த பழையாறை நகரமும், அவரது அரண்மைனையும் அமைந்திருந்தது என்பது கூடுதல் தகவல்.
இந்நிலையில், படத்துக்கு வேடமிட்டு வந்த ரசிகர்களின் புகைப்படங்கள் முன்னதாக நெட்டிசன்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.