PS 2 Nandhini: நந்தினி கதாபாத்திரத்துக்கு Spinoff படமா? மணிரத்னத்திடம் கோரிக்கை வைத்த பாரதிராஜா...வைரல் வீடியோ
”கல்கி என்ன காரணத்துக்காகவோ நந்தினியை பாதி வழியிலேயே விட்டுவிட்டார். அந்த வரலாற்றை, நந்தினியின் எஞ்சிய வாழ்க்கையை மணியால் படம்பிடிக்க முடியும்” - பாரதிராஜா
’பொன்னியின் செல்வன் 2’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன் தினம் (ஏப்.23) தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நிலையில் இந்த விழாவில் நந்தினி கதாபாத்திரம், மணிரத்னம் மீதான தன் காதல் உள்ளிட்டவை குறித்துப் பேசிய பாரதிராஜாவின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
இசை வெளியீட்டு விழா
கடந்த மார்ச். 29ஆம் தேதி ’பொன்னியின் செல்வன் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி, ஷோபிதா, பார்த்திபன், சரத் குமார், ரஹ்மான், விக்ரம் பிரபு, லால் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். மேலும் நடிகர்கள் கமல், சிம்பு, இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
என்னை முந்திய மணிரத்னம்
இன்னும் 3 நாள்களில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், நேற்று முன் தினம் இந்த இசை வெளியீட்டு விழா நிகழ்வு முதன்முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது, இந்நிலையில், இந்த விழாவில் இயக்குநர் பாரதிராஜா பேசிய வீடியோ தற்போது இணையத்திலும் பகிரப்பட்டு, வைரலாகி வருகிறது.
”எனக்கு மணிரத்னத்தை பார்க்கும்போதெல்லாம் கொஞ்சம் கோபம் வரும், ஏனென்றால் நான் தான் பிஸ்தா என நினைத்துக் கொண்டிருந்தேன். பின் என் பின்னால் ஒரு சத்தம் கேட்டது, அதனால் திரும்பிப் பார்த்தேன். நான் திரும்பிப் பார்த்த அந்த ஒரு நொடியில் என்னைப் பின்னே தள்ளிவிட்டு மணிரத்னம் முன்னே சென்றுவிட்டான்.
இந்திய திரைப்பட வரலாற்றில் எஸ்.எஸ்.வாசன், சாந்தாராம் என எவ்வளவோ பேர் இருந்திருக்கிறார்கள், ஆனால் நவீன கால சிந்தனையில் மணிரத்னம் தான் சிறந்தவர். சிறந்த ஒரே ஒரு நபர். இன்று கல்கி கிருஷ்ணமூர்த்தி இல்லையே என்று நான் வருத்தப்படுகிறேன். அவரது கதாபாத்திர உருவாக்கி அவற்றுக்கு உயிர் கொடுத்துள்ளார். சினிமா எடுத்துவிடலாம். எந்தக் கதையும் எடுக்கலாம். ஆனால் சரித்திரக் கதையை பிசகாமல் எடுப்பது என்பது கஷ்டம்.
காதல் இல்லாமல் கலைஞன் இல்லை
காதல் இல்லாமல் இரு கலைஞன் இருக்க முடியுமா என நான் சரத் குமாரிடம் கேட்டேன். காதல் ஒன்று தான் கலைஞனை வளர்க்கிறது என நான் எந்த மேடையிலும் சொல்வேன். நானும் ரொமாண்டிக் தான். மணிரத்னம் ரொமாண்டிக் என்பதை வெளியே சொல்வதில்லை. அமுக்குணி. ஆனால் கமல் நான் ரொமாண்டிக் தான் என சொல்லிவிடுவார்.
பெண் கதாபாத்திரங்களை அருமையாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார், குந்தவை, நந்தினி, பூங்குழலி என அனைவரையும் காதலிக்கலாம்.
’நந்தினியை பாதியிலேயே விட்ட கல்கி’
எனக்கு மணிரத்னத்திடம் ஒரே ஒரு வேண்டுகோள் உள்ளது. கல்கி என்ன காரணத்துக்காகவோ நந்தினியை பாதி வழியிலேயே விட்டுவிட்டார். புத்தகத்தில் நந்தினியை இன்னொரு ஒரு சந்தர்ப்பத்தில் எங்காவது ஒரு இடத்தில் நாம் சந்திப்போம் என கல்கி எழுதியிருப்பார். அந்த வரலாற்றை, நந்தினியின் எஞ்சிய வாழ்க்கையை மணியால் படம்பிடிக்க முடியும்.
இந்தியாவை தமிழ்நாட்டின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த ஒரே இயக்குநர் மணிரத்னம். நானும் விடமாட்டேன், கடவுளிடம் போராடி மணி செய்வதைஎல்லாம் பார்த்துவிட்டு தான் செல்வேன். காதலிப்பவர்கள் நீண்ட ஆயுளோடு இருப்பார்கள், நான் காதலை காதலிக்கிறேன், மணிரத்னத்தை காதலிக்கிறேன். பொன்ன்னியின் செல்வன் 2 படத்தைக் காதலிக்கிறேன்” எனப் பேசியுள்ளார்.
இந்நிலையில் பாரதிராஜா பேசிய இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.