Paruthiveeran: பருத்திவீரன் படத்தின் தயாரிப்பாளர் அமீரா? ஞானவேல் ராஜாவா? - தணிக்கை சான்றிதழால் புது குழப்பம்
பருத்திவீரன் படத்தின் தணிக்கை சான்றிதழ் அமீர் மற்றும் ஞானவேல் ராஜா ஆகிய இருவருக்குமான விவகாரத்தில் மேலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது
பருத்திவீரன்
இயக்குநர் அமீர் இயக்கத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியானத் திரைப்படம் பருத்திவீரன். நடிகர் கார்த்தி இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். கார்த்தியின் முதல் படமான பருத்தி வீரன் படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது மட்டும் இல்லாமல் திரைக்கதை மற்றும் கதைசொல்லலில் ஒரு கிளாசிக் அந்தஸ்தையும் பெற்றுள்ளது.
மேலும் இப்படத்தில் நடித்த நடிகை பிரியாமணி, கஞ்சா கருப்பு, செவ்வாழை ராசு உள்ளிட்டவர்களும் பரவலான அங்கீகாரம் பெற்றார்கள். பருத்திவீரன் படம் வெளியாகி 16 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் தற்போது இந்தப் படம் குறித்தான நீண்ட சர்ச்சை கிளம்பியுள்ளது.
அமீர் - ஞானவேல் ராஜா
சமீபத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேட்டி ஒன்றில் அமீர் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்தார். மேலும் பணம் தொடர்பாக அவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார். இதனைத் தொடர்ந்து இயக்குநர் அமீருக்கு சார்பாக ஆதரவுக் குரல்கள் பெருகத் தொடங்கின.
அமீர் குறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியவை அனைத்தும் திரிக்கப்பட்டவை என்றும் பலர் தெரிவித்துள்ளார். குறிப்பாக நடிகர் மற்றும் இயக்குநர்களான சசிகுமார் மற்றும் சமுத்திரகனி, பாடலாசிரியர் சினேகன் உள்ளிட்டவர்கள் பருத்திவீரன் படத்தின்போது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா படப்பிடிப்பின் பாதியில் கைவிட்டு விட்டதாகவும் தங்களது நண்பர்கள் பலரிடம் இருந்து பணம் கடன் வாங்கியே அமீர் இந்தப் படத்தை வெளியிட்டதாக தெரிவித்தனர்.
ஞானவேல்ராஜா மன்னிப்பு
இதனைத் தொடர்ந்து ஞானவேல் ராஜா தான் பேசியதற்காக வருத்தம் தெரிவித்தார். மேலும் ஞானவேல் ராஜா பொதுவாக அமீரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று இயக்குநர் சமுத்திரகனி தெரிவித்திருந்தார்.
தணிக்கை சான்றிதலால் குழப்பம்
Paruthiveeran:
— Blue Sattai Maran (@tamiltalkies) December 1, 2023
Name of the producer - Ameer. pic.twitter.com/jSpTFwKyHm
பருத்தி வீரன் திரைப்படத்தை தனது நண்பர்களின் உதவியுடன் அமீர் வெளியிட்டதாகவும் ஆனால் படத்தின் வெற்றிக்கான பெருமை அனைத்தையும் ஞானவேல்ராஜாவே எடுத்துக் கொண்டதாக பலர் கூறிவந்தனர். இதனைத் தொடர்ந்து தற்போது பருத்தி வீரன் படத்தில் தணிக்கை சான்றிதல் புதிய குழப்பம் ஒன்றை கிளப்பியுள்ளது. இந்த சான்றிதலில் படத்தின் தயாரிப்பாளர் என்கிற இடத்தில் இயக்குநர் அமீரின் பெயரும், தயாரிப்பு நிறுவனம் டீ ஒர்க் ப்ரோடக்ஷன் என்கிற பெயரும் இடம்பெற்றிருக்கிறது. இதனால் படத்தின் உண்மையான தயாரிப்பாளர் என்கிற குழப்பம் இன்னும் அதிகரித்துள்ளது,