"வெற்றி என்பது அடுத்தவர்கள் சொல்வது அல்ல. நாம் உணர்வது" - ’பருந்தாகுது ஊர்க்குருவி’ மேடையில் மாரி செல்வராஜ்
இந்த நிகழ்ச்சியில் இயக்குநர்கள் மாரி செல்வராஜ், பிரம்மா, முத்துக்குமார், கார்த்திக் சீனிவாசன், விருமாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
லைட்ஸ் ஆன் மீடியா - நிஷாந்த் ருஷோ தயாரித்து இயக்குநர் தனபாலன் கோவிந்தராஜ் இயக்கும் படம் பருந்தாகுது ஊர்க்குருவி.
விவேக் பிரசன்னா, காயத்ரி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பருந்தாகுது ஊர்க்குருவி’. ஜிமிக்கி கம்மல் பாடலால் புகழ்பெற்ற மலையாள இசையமைப்பாளர் ரஞ்சித் உன்னீ இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை, சாலிகிராமம் பிரசாத் லேப்பில் நடைபெற்றது . இந்த நிகழ்ச்சியில் இயக்குநர்கள் மாரி செல்வராஜ், பிரம்மா, முத்துக்குமார், கார்த்திக் சீனிவாசன், விருமாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சி மேடையில் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், “இந்தக் கதை ரொம்ப எமோஷனலாக இருந்தது. நான் சட்டக்கல்லூரியில் படித்தது ஆபிசில் யாருக்கும் தெரியாது. தனபாலுக்கு மட்டும் தான் தெரியும். நான் ஆபீஸ் பாயாக இருக்கும் போது நான் கவனித்த சில விஷயங்களை பற்றியும் பேசினார். எனக்கு முன்பே தமிழ் சினிமாவை புரிந்து கொண்டவர்.
ஒரு உதவி இயக்குனராக நான் இவர்களிடம் இருந்து தான் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். நான் 15 ஆண்டு காலம் கழித்து வந்ததே தாமதம் என்று நினைத்தேன். அண்ணன் நிச்சயமாக ஜெயிப்பார். வெற்றி என்பது அடுத்தவர்கள் சொல்வது அல்ல. நாம் உணர்வது தான்” எனப் பேசினார்.
தொடர்ந்து நிகழ்ச்சி மேடையில் பேசிய அயலி இயக்குநர் முத்துக்குமார், ”மாரி செல்வராஜ் இருக்கும் போது நான் எப்படிப் பேசுவது? ஒவ்வொரு புதுப்புது முயற்சிகள் பலருக்கு அடுத்த வாய்ப்பை வாங்கி தரும். ரசிகர்களுக்கு புதிய கதையை கொடுக்கும் என்றும், இந்தப் பாதையும் ராஜ பாதையாக வாழ்த்துக்கள்” என்று கூறினார்.
அதன் பின்ன பேசிய இயக்குநர் கணேஷ் பாபு, ( டாடா இயக்குநர்) “எல்லாரும் ஒன்றாக இருப்பதை பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ரொம்ப நெர்வஸாக இருக்கிறது. நான் இயக்குநராக ராம் சார் முக்கிய காரணம். உங்கள் வெற்றி, நம்மை போல் புதிய படம் எடுக்கும் இயக்குநர்களுக்கான வெற்றி தான். நானும் இதே லேப்பில் தான் எனது பயணத்தை துவங்கினேன்” என்று பாராட்டி பேசினார்.
அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி மேடையில் பேசிய இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி,, “இந்த டைட்டிலே கொஞ்சம் வித்தியாசமானது. அந்தப் பருந்து எதுவென்றால் மதுரை ஊர்க்குருவி தனபால். இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” எனப் பேசினார்.
மேலும் படிக்க: Nora Fatehi: தவறான எண்ணத்தில் தொட நினைத்த சக நடிகர்: ஓங்கி அறைந்த பிரபல நடிகை - நேர்காணலில் வெளியான பரபரப்பு தகவல்