Pariyerum Perumal: பரியேறும் பெருமாள் படம் இந்தியில் ரீ-மேக்? இயக்குநர்-ஹீரோ இவர்கள்தானா? சோகத்தில் ரசிகர்கள்!
Pariyerum Perumal: மாரி செல்வராஜ் இயக்கத்தில் தமிழில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தை இந்தியில் கரண் ஜோஹர் ரீ-மேக் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சாதிய ஒடுக்குமுறைகளை மைய்யமாக வைத்து 2018ஆம் ஆண்டு வெளியான படம், பரியேறும் பெருமாள். கதிர், கயல் ஆனந்தி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் இப்படம் வெளியாகியிருந்தது. இந்த படம் இந்தியில் ரீ-மேக் ஆகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பரியேறும் பெருமாள் இந்தி ரீ-மேக்?
கடந்த சில வருடங்களாக தமிழில் வெற்றி பெற்ற கவனம் ஈர்த்த படங்களை பாலிவுட் திரையுலகம் ரீ-மேக் செய்து வருகிறது. வீரம் படத்தை கிசி கா பாய் கிசி கி ஜான் என்ற பெயரிலும், கைதி படத்தை போலா என்ற பெயரிலும் ரீ-மேக் செய்து வெளியிட்டிருந்தனர். இந்த வரிசையில், இப்போது பரியேறும் பெருமாள் படமும் இணையவுள்ளது.
பிரபல இந்தி இயக்குநர் கரண் ஜோஹர், பரியேறும் பெருமாள் படத்தை இந்தியில் ரீ-மேக் செய்வார் என பேச்சு அடிபடுகிறது. இப்படத்தின் நாயகனாக கெஹ்ரயான் படத்தில் நடித்த சித்தாந்த் சதுர்வேதி நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சித்தாந்துடன் சேர்ந்து ட்ரிப்டி டிமிட்ரியும் நடிக்கவுள்ளார் என ரசிகர்கள் தகவல்களை பரப்பி வருகின்றனர். கரண் ஜோஹர் பரியேறும் பெருமாள் படத்தை ரீ-மேக் செய்வது குறித்த தகவல் வெகுநாட்களாக பகிரப்பட்டு வருகிறது. இந்த படத்திற்கு தடக்-2 எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால், கரண் ஜோஹர் அதனை மறுத்துவிட்டார்.
காதல் படமாக உருவாக உள்ளதா?
தமிழில், சாதியையும் சாதியவாதிகள் செய்யும் அட்டூழியங்களையும் அவர்களால் ஏற்படும் அடக்குமுறைகளையும் அழகாக காண்பித்திருப்பர். இதை காண்பிப்பதற்கு பாலிவுட்டில் எந்த அளவிற்கு சாத்தியக்கூறுகள் உள்ளது என்பது தெரியவில்லை. சில தகவல்களின் படி, இந்தியில் ரீ-மேக் ஆகவுள்ள பரியேறும் பெருமாள் படம் காதலை மைய்யமாக வைத்து எடுக்கப்படும் என கூறப்படுகிறது.
கரண் ஜோஹருக்கு பரியேறும் பெருமாள் படத்தின் கதை மிகவும் பிடித்திருந்ததாகவும் சில செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும், இப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை என்றும் இருவேறு கலாச்சாரத்தை சேர்ந்தவர்கள் காதல் கொள்வது போல திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்னும் சில மாதங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என எதிர்பார்க்ப்படுகிறது.
ரசிகர்கள் சோகம்:
தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்ற படங்கள் இப்படி அடிக்கடி இந்தியில் ரீ-மேக் ஆவது சினிமா ரசிகர்களை எரிச்சல் அடைய செய்துள்ளது. உதாரணத்திற்கு, சமீபத்தில் வெளியான போலா திரைப்படம், கைதியின் இந்தி ரீ-மேக் எனக் கூறப்பட்டது. ஆனால், முழுக்க முழுக்க பாலிவுட்டிற்கு தேவையான மசாலா அம்சங்களை சொறுகி இப்படம் எடுக்கப்பட்டதாக ரசிகர்கள் தரப்பிலிருந்து கூறப்பட்டது.
இதையடுத்து சில நாட்களுக்கு முன்னர் வெளியான கிசி கா பாய் கிசி கி ஜான் திரைப்படம், அஜித் குமார் நடிப்பில் வெளியான வீரம் படத்தின் ரீ-மேக் என பேசப்பட்டது. ஆனால், வேட்டியை வைத்து வித்தியாசமான டான்ஸ் ஆடி படக்குழுவே சர்ச்சையில் சிக்கியது. இதனால், நல்ல தமிழ் படங்களை இந்தியில் ரீ-மேக் செய்கிறேன் என்ற பெயரில் அப்படத்தை கொலை செய்யாமல் இருந்தால் போதும் என ரசிகர்கள் ஆற்றாமையில் புலம்பி வருகின்றனர். இன்னும் சிலர், ‘இன்னும் என்னென்ன செய்ய காத்திருக்கிறார்களோ..’ என பாலிவுட் திரையுலகை பார்த்து அஞ்சி வருகின்றனர்.