சூரரைப் போற்று இல்லனா அமரன் வந்திருக்காது...பராசக்தி பட இயக்குநர் அதிரடி
பையோபிக் படங்களின் மேல் மக்களுக்கு இருந்த ஒவ்வாமையை சூரரைப் போற்று திரைப்படம் உடைத்தது என சுதா கொங்காரா தெரிவித்துள்ளார்

சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி திரைப்படம் வரும் ஜனவரி 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக அளித்த பேட்டி ஒன்றில் தனது முதல் படம் தோல்வி குறித்தும் , அடுத்தடுத்த் படங்களில் எதிர்கொண்ட சவால்களை குறித்தும் சுதா கொங்காரா பகிர்ந்துகொண்டார். அப்போது பையோபிக் படங்களின் மேல் மக்களுக்கு இருந்த ஒவ்வாமையை சூரரைப் போற்று படம் போக்கியது என்றும் அவர் தெரிவித்தார்.
பராசக்தி
இயக்குநர் மணிரத்னமிடம் உதவி இயக்குநராக பணியாற்றி 2010 ஆம் ஆண்டு வெளியான துரொகி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் சுதா கொங்காரா. விமர்சன ரீதியாக கவனிக்கப்பட்டாலும் வசூல் ரீதியாக இப்படம் தோல்வியை தழுவியது. முதல் பட தோல்வியைத் தொடர்ந்து 6 வருடங்களுக்குப் பின் இறுதி சுற்று படத்தின் மூலம் கவனமீர்த்தார். தொடர்ந்து சுர்யாவுடன் சூரரைப் போற்று படம் மாபெரும் வெற்றிபெற்றது. தற்போது சிவகார்த்திகேயனின் 25 ஆவது படமாக உருவாகியிருக்கும் பராசக்தி படத்தை இயக்கியுள்ளார்.
தமிழ்நாட்டில் 1960 களில் இந்தி திணிப்பிற்கு எதிராக நடந்த மாணவர்கள் போராட்டத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. அதர்வா , ரவி மோகன் , ஶ்ரீலீலா , சேத்தன் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜிவி பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைத்துள்ளார். பராசக்தி படம் வெளியாக இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் தனது கடந்த கால பயணத்தை சுதா கொங்காரா பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டார்.
சினிமாவை கைவிட விரும்பினேன்
'துரோகி படத்திற்கு பின் நான் சினிமாவை விட்டு போக நினைத்தேன். மணிரத்னமிடம் பணியாற்றிய பிஜாய் நம்பியார் தனது படத்தில் என்னை உதவி இயக்குநராக பணியாற்ற அழைத்தார். அந்த படத்தில் பணியாற்றிய அனுபவம் என்னை மறுபடியும் சினிமாவிற்குள் இழுத்தது. அப்போதுதான் நான் மாதவனை சந்தித்தேன். அவரிடம் இறுதி சுற்று படத்தின் ஒன்லைனை சொன்னபோது உடனே அதை எழுத சொன்னார்.
டிக்கெட் வாங்க காசு இல்ல
தனக்கு கதை பிடித்திருந்தால் அதில் தான் நடிப்பதாகவும் சொன்னார். இறுதி சுற்று படத்தைப் பார்த்த என் சகோதரர்கள் படம் நன்றாக இருப்பதாகவும் ஆனால் இந்த படம் பி மற்றும் சி செண்டர் ரசிகர்களிடம் ஓடாது என்று சொன்னார்கள். அதே போல் படத்தின் தயாரிப்பாளரின் நண்பர் ஒருவர் இந்த படம் தமிழில் சுத்தமாக ஓடாது என்று சொன்னார். அப்போது என்னை நானே சந்தேகித்தேன். அப்போதான் காக்கா முட்டை படம் வெளியாகி இருந்தது. அந்த படத்திற்கு டிக்கெட் வாங்க கூட என்னிடம் பணம் இல்லை. அந்த படம் பார்த்தபோது தான் என் படத்தின் மீது எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது.
சூரரைப் போற்று இல்லனா அமரன் வந்திருக்காது
பொதுவாக என்னுடைய ஒவ்வொரு படம் வெளியாகும் போதும் அதைச் சுற்றி நிறைய கருத்து சொல்வார்கள். நான் ஏதோ மல்டிபிளக்ஸ் ரசிகர்களுக்கு மட்டுமே படமெடுப்பதாக பேசுவார்கள். இறுதி சுற்று படத்தின் டீசர் வரும்வரை அதை யாரும் கண்டுகொள்ளவில்லை. அதே போல் சூரரைப் போற்று படத்தையும் யாரும் கண்டுகொள்ளவில்லை. அந்த அம்மா ஏதோ பையோபிக் எடுக்குறாங்க என்று சொல்வார்கள். அந்த காலத்தில் பையோபிக் என்பது கெட்ட வார்த்தை மாதிரி இருந்தது. சூரரைப் போற்று படம் வெற்றிபெறாவிட்டால் இன்று அமரன் திரைப்படம் வந்திருக்காது. பையோபிக் மேல் மக்களுக்கு இருந்த ஒவ்வாமையை சூரரைப் போற்று நீக்கியது என்றுதான் சொல்ல வேண்டும்





















