சினிமா விமர்சகர்களே உங்கள் பாதம் தொட்டு.. இயக்குநர் ராமுக்காக பாலா உருக்கம்.. குவியும் பாராட்டு
தேசிய விருது வென்ற இயக்குநர் ஒருவர் பறந்து படத்தை பார்த்த பின்பு சினிமா விமர்சகர்களுக்கு அன்பு வேண்டுகோள் வைத்திருப்பது டிரெண்டாகி வருகிறது.

இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள பறந்து போ திரைப்படம் ஜூலை 4ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இத்தைத்தொடர்ந்து இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட இயக்குநர் ராம் பல சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், பறந்து போ படத்திற்காக தேசிய விருது வென்ற இயக்குநர் ஒருவர் சினிமா விமர்சகர்களிடம் வைத்திருக்கும் கோரிக்கை மனதை உருக வைத்திருக்கிறது.
இயக்குநர் ராமுடன் இணைந்த மிர்ச்சி சிவா
இயக்குநர் ராம் நிவின் பாலியை வைத்து ஏழு மலை ஏழு கடல் என்ற ஃபேண்டஸி படத்தினை இயக்கி முடித்திருந்த நிலையில், அடுத்தபடியாக நடிகர் மிர்ச்சி சிவாவை வைத்து இயக்கியது தான் ஆச்சர்யப்பட வைத்தது. மிர்ச்சி சிவா மிகவும் ஜாலியான நடிகர், அவரது படங்களும் அப்படித்தான் இருக்கும். ராமுடன் இணைந்தது எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இரண்டு ஜானர்களில் படங்களை இயக்கி முடித்துள்ள ராம், பறந்து போ படத்தின் வெற்றிக்காக காத்திருக்கிறார். தங்க மீன்கள் படத்தை போன்றே இப்படமும் ரசிகர்களின் ரசனையை வெல்லும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் ராம்.
இயக்குநர் பாலா வேண்டுகோள்
சென்னையில் நேற்று பறந்து போ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள் பலரும் கலந்துகொண்டனர். இவ்விழாவில் பங்கேற்ற இயக்குநர் பாலா, "பறந்து போ படத்தை பார்த்துவிட்டு தான் வருகிறேன். என்னை இப்படம் மிகவும் பாதிக்க வைத்துவிட்டது. இப்படம் முடிந்த பின்னர் ராம் என் அருகில் இருந்தாலும், மாரி செல்வராஜ் அங்கும் இங்குமாக இப்படத்தின் இயக்குநரை போல அலைந்து கொண்டிருந்தான். அப்போது அவனை அழைத்து இப்படத்தை எப்படியாவது ரிலீஸ் செய்துவிடுங்கள். கண்டிப்பாக என்னால் முடிந்ததை செய்கிறேன் எனக் கூறினேன்" என தெரிவித்தார்.
பாதம் தொட்டு கேட்கிறேன்
மேலும் பேசிய பாலா, இயக்குநர் ராமை அனைவரும் பாராட்டிவிட்டார்கள். நான் அவரை தனியாக அழைத்து பாராட்ட வேண்டும் என்ற அவசியம் ஏற்படாது என்று நினைக்கிறேன். முக்கியமாக இதை ஒரு வேண்டுகோளாக வைக்கிறேன். சினிமா விமர்சகர்களே உங்களது பாதம் தொட்டு வணங்கி கேட்டுக்காெள்கிறேன். பறந்து போ படத்தை அனைவரிடமும் கொண்டு போய் சேருங்கள். தமிழ்நாட்டிற்கு ராம் மாதிரியான இயக்குநர் வேண்டும். இதை தவிர என்ன சொல்வது என்று எனக்கு தெரியவில்லை என இயக்குநர் பாலா தெரிவித்திருந்தார். தற்போது அவரது பேச்சு சமூகவலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.
ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் பாராட்டு
இயக்குநர் பாலா மற்றும் முக்கிய பிரபலங்களும் இப்படத்தை பாராட்டி வருகின்றனர். அதேபோன்று ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தனது எக்ஸ் தளத்தில், இயக்குநர் ராமின் பறந்து போ மிகச்சிறந்த திரைப்படம். பார்வையாளர்கள் அனைவரும் மீண்டும் சினிமா மீது காதல் வயப்பட போகின்றனர் என பாராட்டி கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து பலரும் இயக்குநர் ராமை பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.





















