Padai Thalaivan: சொன்னபடியே விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் படத்தில் ராகவா லாரன்ஸ்: படை தலைவன் அப்டேட்!
எந்த யோசனைக்கும் இடம் தராமல் நான் நடித்து தருகிறேன். எவ்வளவு நிமிடம் நான் வருகிறேன் என்பது முக்கியம் அல்ல. தம்பி சண்முக பாண்டியன் படத்தில் நான் இருப்பது மகிழ்ச்சி என்றார் ராகவா லாரன்ஸ்.
மறைந்த தே.மு.தி.க. தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் இரண்டாவது மகன் சண்முக பாண்டியன் நடித்து வரும் படை தலைவன் திரைப்படம் அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
படைத் தலைவன்:
தமிழ் சினிமாவில் சகாப்தம், மதுரை வீரன் ஆகிய திரைப்படங்களின் வரிசையில் தற்போது சண்முக பாண்டியன் படை வீரன் படத்தில் நடித்து வருகிறார். வால்டர் மற்றும் ரேக்ளா படங்களை இயக்கிய யு.அன்பு இப்படத்தினை இயக்குகிறார். இளையராஜா இப்படத்துக்கு இசையமைக்கிறார். கஸ்தூரி ராஜா, முனீஸ்காந்த், யாமினி சந்தர் ஆகியோர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
விஜயகாந்தின் திடீர் மறைவை அடுத்து இப்படத்தின் படப்பிடிப்பில் தொய்வு ஏற்பட்ட நிலையில், சில வாரங்களுக்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்பில் சண்முகபாண்டியன் கலந்துகொள்ளத் தொடங்கினார். இந்நிலையில், படை தலைவன் படம் பற்றிய சுவாரஸ்ய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
இப்படத்தின் இயக்குநர் அன்பு தெரிவித்துள்ளதாவது,
5 நிமிடக்காட்சி
“விஜயகாந்தின் மறைவுக்குப் பிறகு, ராகவா லாரன்ஸ் மாஸ்டர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் சண்முகபாண்டியன் நடிக்கும் படை தலைவன் படத்தில், சிறப்புத் தோற்றத்தில் நான் நடிக்க ரெடியாக உள்ளேன் என்று தெரிவித்து இருந்தார்.
இந்த வீடியோ பார்த்து இயக்குனராகிய நான் மாஸ்டரை எப்படியாவது இந்தப் படத்தில் கொண்டு வர வேண்டும் என்று விரும்பினேன். படத்தில் முக்கியமான இடத்தில் 5 நிமிடக் காட்சிக்கு மட்டுமே இடம் இருந்தது. இதை மிகுந்த தயக்கத்துடன் ராகவா லாரன்ஸ் மாஸ்டர் அவர்களிடம் கூறினேன். ஆனால் அவர் எந்த யோசனைக்கும் இடம் தராமல், “நான் நடித்து தருகிறேன். எவ்வளவு நிமிடம் நான் வருகிறேன் என்பது முக்கியம் அல்ல. தம்பி சண்முக பாண்டியன் படத்தில் நான் இருப்பது மகிழ்ச்சி” என்றார்.
சம்பளம் வாங்காமல் நடித்த ராகவா லாரன்ஸ்
இதைக் கேட்டதும் இயக்குனராக எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. கேப்டன் அவர்கள் மேல் வைத்த மரியாதைக்கும் அவர் சொன்ன வார்த்தையை காப்பாற்றும் வகையிலும் எந்த நிபந்தனையும் இன்றி உடனே ராகவா லாரன்ஸ் மாஸ்டர் அவர்கள் ஒத்துக் கொண்டது அவரின் பெருந்தன்மையை காட்டுகிறது.
மேலும் தயாரிப்பாளர், மாஸ்டர் சம்பளம் பற்றி பேசியபோது எந்த சம்பளமும் எனக்கு வேண்டாம், 4 ஏழ்மை நிலையில் இருக்கும் குடும்பங்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்தால் போதும் என்றார். ராகவா லாரன்ஸ் மாஸ்டரின் இந்த அணுகுமுறை படைத் தலைவனுக்கு மேலும் வலுசேர்த்தது போல இருந்தது. இந்த மகிழ்வான செய்தியை, ஊடகங்களுக்கு தெரியப்படுத்துவதில், படக் குழுவினர் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
ராகவா லாரன்ஸ் தான் அறிவித்தபடியே சண்முகபாண்டியனின் படத்தில் நடிக்க இருக்கும் தகவல் வெளியாகி விஜயகாந்த் மற்றும் ராகவா லாரன்ஸ் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.