Pa Ranjith: “பெரிய படங்களை மட்டுமே குறி வைக்கிறதா அமேசான், நெட்ஃப்ளிக்ஸ்” - பா.ரஞ்சித் சொல்வது என்ன?
”ஓடிடியில் விற்றால் தான் நான் போட்ட பணம் ஓரளவு வரும், நெட்ஃப்ளிக்ஸ் ஆகட்டும் அமேசான் ஆகட்டும் ஒரு ஆண்டுக்கு 12 முதல் 20 படங்கள் வரை வாங்குகிறார்கள் என்றால் அவை அனைத்தும் பெரிய நடிகர்கள் படமாக தான் இருக்கும்”
![Pa Ranjith: “பெரிய படங்களை மட்டுமே குறி வைக்கிறதா அமேசான், நெட்ஃப்ளிக்ஸ்” - பா.ரஞ்சித் சொல்வது என்ன? pa ranjith complains ott platforms for prefering big star movies at bommai nayagi movie press meet Pa Ranjith: “பெரிய படங்களை மட்டுமே குறி வைக்கிறதா அமேசான், நெட்ஃப்ளிக்ஸ்” - பா.ரஞ்சித் சொல்வது என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/29/d0830ee61c0054cf53cdd72021c97cda1674989895668574_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் உள்ளிட்ட ஓடிடி தளங்களிலும் பெரிய நடிகர்களின் படங்களே வாங்கப்படுவதாக இயக்குனர் பா.ரஞ்சித் வருத்தம் தெரிவித்துள்ளார்.
யோகி பாபு நடிப்பில் இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்சன்ஸ், யாழி பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படம் 'பொம்மை நாயகி'. வரும் பிப்ரவரி 3ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இன்று படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது தயாரிப்பாளரும் இயக்குனருமான பா.ரஞ்சித் பேசியதாவது:
"இன்றைக்கு சின்ன படங்களை ஓடிடி தளங்களில் விற்க முடியாது. நெட்ஃப்ளிக்ஸ் ஆகட்டும் அமேசான் ஆகட்டும் ஒரு ஆண்டுக்கு 12 முதல் 20 படங்கள் வரை வாங்குகிறார்கள் என்றால் அவை அனைத்தும் பெரிய நடிகர்கள் படமாக தான் இருக்கும்.
இதனிடையே சிறிய படங்களைப் போய் பொருத்த அவர்களால் முடியவில்லை. இங்கே இருக்கும் ஹாட்ஸ்டார் மற்றும் பிற சேனல்களிலும் சிறிய பட்ஜெட் படங்களை வாங்குவதில், பார்ப்பதில் இங்கு வெளிப்படைத் தன்மை இல்லை.
நீலம் ப்ரொடக்ஷனுக்கு இங்கே ஒரு வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் எனக்கு சில செல்வாக்குகள் இருப்பதால் என்னால் எளிதாக அவர்களை அணுக முடிகிறது.
ஆனால் நிறைய இளம் தயாரிப்பாளர்கள் ஒரு படத்தை எடுத்துவிட்டு ஓடிடி தளங்களுக்கு விற்பதில் இங்கே பிரச்சினை உள்ளது. ஒரு படத்தை திரையரங்குக்கு கொண்டு போவதிலேயே இன்று பிரச்சினை உள்ளது. கிட்டத்தட்ட 70, 80 லட்சம் செலவு செய்தால் தான் குறைந்தபட்சம் அனைவருக்கும் தெரியும்படி ஒரு ரிலீஸ் செய்ய முடியும்.
இல்லையென்றால் நமக்கு திரையரங்குகள் கிடைக்காது. ஸ்க்ரீன்ஸ் கிடைக்காது. காலை 10 மணி ஷோ கொடுப்பார்கள். அல்லது மக்கள் படம் பார்க்காத தியேட்டர்கள் கொடுப்பார்கள். இப்படி நிறைய பிரச்சினைகள் உண்டு.
ஆனால் ஓடிடி தளங்களை நீங்கள் அணுகவே முடியாது. ஏனென்றால இவற்றை அணுக தமிழ் சூழலில் ஒரு அமைப்பே கிடையாது. பெரிய தயாரிப்பாளர்களாலும் சிறிய தயாரிப்பாளர்களுக்கு உதவ முடியவில்லை. ஏனென்றால் அவர்கள் படங்களை விற்பதே இங்கு பெரிய போராட்டமாக உள்ளது.
ஓடிடியில் விற்றால் தான் நான் போட்ட பணம் ஓரளவு வரும், ஆனால் அது ஒரு பெரிய ப்ராசஸ். அதற்கு ஒரு படத்தை முடித்து ஆறு மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.
ஓடிடி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் தான் முதல் ரிவ்யூவர்கள். படம் பார்த்துவிட்டு அவர்கள் வேண்டாம் என்று சொல்லிவிட்டு போனால் அது பல ஓடிடி நிறுவனங்களுக்கு பரவி விடும்.
முன்பெல்லாம் விநியோகதாரர்கள் இப்படி செய்யும்போது படத்தை ரிலீஸ் செய்து விட சிறு இடமாவது இருந்தது. என்னைப் பொருத்தவரை திரையரங்குகள் தான் ஜனநாயகப் பூர்வமான இடம் என்று நான் நினைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)