The Elephant Whisperers-க்கு ஆஸ்கர் விருது .. ரகு, பொம்மியை வளர்த்தது எப்படி..? - பெள்ளி பேட்டி
யானை பராமரிப்பாளர்களாகப் பணியாற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பொம்மன், பெள்ளி தம்பதிகளின் வாழ்வியலையும், அவர்களுக்கும் யானைகளுக்கும் இருக்கும் உறவையும் உணர்வுப்பூர்வமாக ஆவணப்படம் பதிவு செய்திருந்தது.
ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த ஆவண குறும்படத்துக்கான விருதை இந்தியாவின் The Elephant Whisperers படம் வென்றுள்ளது. முன்னதாக இந்த பிரிவில் The Elephant Whisperers, Haulout, How Do You Measure a Year?, The Martha Mitchell Effect, Stranger at the Gate இந்த 5 படங்கள் போட்டியிட்ட நிலையில் ஆஸ்கர் விருது The Elephant Whisperers படத்துக்கு கிடைத்துள்ளது. இந்த படத்தை கார்த்திகி கோன்சால்வ்ஸ் இயக்கியிருந்தார். கடந்தாண்டு டிசம்பர் 8 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக குட்டி யானைகளின் பராமரிப்பு குறித்தும், அதை குடும்பத்தில் ஒருவராக பாவிக்கும் பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதி குறித்தும் இந்த குறும்படத்தின் காட்சிகள் இடம் பெற்றிருந்தது.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் யானை பராமரிப்பாளர்களாகப் பணியாற்றும் காட்டு நாயக்கர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பொம்மன், பெள்ளி தம்பதிகளின் வாழ்வியலையும், அவர்களுக்கும் யானைகளுக்கும் இருக்கும் உறவையும் மிகவும் உணர்வுப்பூர்வமாக இந்த ஆவணப்படம் பதிவு செய்திருந்தது. தாயை பிரிந்து, உடம்பில் பல காயங்களுடன் இருந்த ஒரு குட்டி யானைக்கு ரகு எனப் பெயரிட்டு பொம்மனும், அவருக்கு துணையாக வரும் பெள்ளியும் வளர்ந்தனர். யானையை பராமரித்து வந்த ஒரே கிராமத்தைச் சேர்ந்த பொம்மனும், பெள்ளியும் ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டார்கள். யானைகளை தங்களது குடும்பத்தில் ஒருவராக நினைத்து வளர்க்கும் இத்தம்பதியினரை `The Elephant Whisperers` ஆவணப்படம் பேசியிருந்தது. இந்தப்படம் ஆஸ்கர் விருது பெற்று இருப்பதற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
ஆஸ்கர் விருது பெற்றது தொடர்பாக பேட்டியளித்த பெள்ளி, ”ரகு தருமபுரியில் இருந்தும், பொம்மி சத்தியமங்கலத்தில் இருந்தும் வந்தது. ரகு யானை குட்டி வளர்க்க அழைத்தார்கள். அதற்கு வால் வெட்டப்பட்டு இருந்ததால், அதனை வளர்க்க முடியாது என முதலில் சொன்னேன். முடிந்தளவு பார்க்கலாம், எப்படியாவது சரி செய்து விடலாம் என வீட்டில் சொன்னார்கள். ரகுவை வளர்த்து பெரிதாக்கினோம். அப்போது 3 மாத குட்டியாக பொம்மி வந்தது. அதற்கு பால் கொடுத்து வளர்த்தோம். இதைப்பற்றிய ஆவணப்பட்டம் விருது பெற்று இருப்பது சந்தோஷம். முதுமலையில் இருப்பவர்களுக்கும், வனத்துறையினருக்கும் சந்தோஷம் அடைந்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்