Oscar: தெய்வமகன் முதல் கூழாங்கல் வரை! தமிழில் இருந்து ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட படங்கள் இத்தனையா?
தமிழில் இருந்து இதுவரை ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட படங்கள் என்னென்ன? என்பதை கீழே விரிவாக காணலாம்.
திரையுலகினரின் மிகப்பெரிய கவுரவமாக கருதப்படுவது ஆஸ்கர் விருது. ஒவ்வொரு திரைப்பட கலைஞர்களும் தங்கள் வாழ்நாளின் உச்சபட்ச கௌரவமாக கருதுவது இந்த ஆஸ்கர் விருது ஆகும்.
அடுத்தாண்டு ஆஸ்கர் விருதுக்கு போட்டியிடுவதற்காக வெளிநாட்டு மொழிகளுக்கான திரைப்படங்களில் இந்தியில் லாபட்டா லேடீஸ் படம் தேர்வாகியுள்ளது. தமிழில் இருந்து மகாராஜா, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், வாழை, கொட்டுக்காளி, ஜமா, தங்கலான் ஆகிய படங்கள் இதற்கான போட்டியில் இருந்தது. ஆனால், இந்த படங்களுடன் மீதம் இருந்த 28 படங்களை வீழ்த்தி லாபட்டா லேடீஸ் ஆஸ்கர் போட்டிக்கு தேர்வாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் இதுவரை லட்சக்கணக்கான படங்கள் வெளியாகியுள்ள நிலையில், ஆஸ்கருக்கு இந்தியாவில் இருந்து தமிழில் இருந்தும் சில படங்கள் தேர்வாகி அனுப்பப்பட்டுள்ளது. அவற்றின் பட்டியலை கீழே காணலாம்.
தெய்வமகன் (1969):
தமிழில் இருந்து ஆஸ்கருக்கு முதன்முதலில் அனுப்பபட்ட திரைப்படம் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 3 கெட்டப்பில் நடித்த தெய்வமகன் ஆகும். அந்த காலத்தில் பிரபல இயக்குனராக திகழ்ந்த ஏ.சி. திருலோக்சந்தர் இயக்கத்தில் உருவாகிய இந்த படம் தமிழில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. 1969ம் ஆண்டு இந்த படம் ஆஸ்கருக்கு இந்தியாவில் இருந்து பரிந்துரைக்கப்பட்டது.
நாயகன் (1988):
உலக நாயகன் என்று மக்களால் கொண்டாடப்படும் கமல்ஹாசனின் திரை வாழ்வில் தவிர்க்க முடியாத திரைப்படம் நாயகன். பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிய இந்த படம் தமிழில் இருந்து ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்ப்பட்ட 2வது திரைப்படம். 1988ம் ஆண்டு பரிந்துரைக்கப்பட்ட இந்த படம் ஒரு இளைஞன் ரவுடியாக எவ்வாறு மாறுகிறான்? என்பதை மிகவும் தத்ரூபமாக காட்டிய திரைப்படமாக அமைந்திருக்கும். இளையராஜா இதற்கு இசையமைத்திருப்பார்.
தேவர்மகன் ( 1993)
கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் தேவர்மகன். தென்மாவட்டங்களில் 100 நாட்களை கடந்து ஓடிய இந்த படம் ஆஸ்கருக்கு இந்தியாவில் இருந்து பரிந்துரைக்கப்பட்டது. பரதன் இயக்கிய இந்த படத்தில் இரு குடும்ப மோதலால் ஒரு கிராமம் எந்தளவு பாதிக்கப்படுகிறது? என்பதை மிக யதார்த்தமாக காட்டியிருப்பார்கள். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருப்பார்.
குருதிப்புனல் ( 1996)
கமல்ஹாசன் – அர்ஜூன் இணைந்து நடித்து பி.சி.,ஸ்ரீராம் இயக்கிய இந்த படம் பாதுகாப்பு வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையேயான மோதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும். இந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் நடிகர் கமல்ஹாசனின் நடிப்பு இன்றளவும் ரசிகர்களுக்கு வியப்பு தரும் வகையில் அமைகிறது.
இந்தியன் ( 1997)
பிரம்மாண்ட இயக்குனர் என்று பெயர் பெற்ற ஷங்கர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் இந்தியன். ஊழலுக்கு எதிராக வர்மக்கலையுடன் போராடும் சுதந்திர போராட்ட வீரரின் கதையை மையமாக கொண்டு உருவாகிய இந்த படம் பிரமிப்பாக ரசிகர்கள் மத்தியில் பார்க்கப்பட்டது. ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்ற இந்த படம் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
ஜீன்ஸ் ( 1999):
ஷங்கரின் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படங்களில் மிகவும் முக்கியமான படம் ஜீன்ஸ். 1999ம் ஆண்டு பரிந்துரைக்கப்பட்ட இந்த படத்தில் நடிகர் பிரசாந்த் – ஐஸ்வர்யாராய் ஜோடியாக நடித்திருப்பார்கள். இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றில் உலகின் 7 அதிசயங்களுக்கும் சென்று பாடல் காட்சியை படமாக்கியிருப்பார்கள். அன்றைய காலத்தில் இந்த ஒரு பாடலே படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. மிகப்பெரிய வெற்றிப்படமாக இந்த படம் அமைந்தது.
ஹேராம் ( 2001):
பன்முக கலைஞன் கமல்ஹாசன் இயக்கி நடித்த திரைப்படங்களில் மிக மிக முக்கியமானது ஹேராம். சுதந்திர காலகட்டத்தில் நடக்கும் கதைக்களத்தில் இந்து – முஸ்லீம் மோதல், காந்திய கொள்கை என பலவற்றை அலசி பேசி படமாக எடுக்கப்பட்டது ஹேராம். இன்று இந்த படத்தை பார்த்தாலும் பிரமிப்பாக தெரியும் அளவிற்கு அதன் திரைக்கதை இருக்கும். 2001ம் ஆண்டு இந்தியாவில் இருந்து ஆஸ்கருக்கு இந்த படம் பரிந்துரைக்கப்பட்டது.
விசாரணை (2017):
இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக உருவெடுத்துள்ளபவர் வெற்றி மாறன். இவரது இயக்கத்தில் வெளியான விசாரணை படம் மிக மிக முக்கியமான படம் ஆகும். போலி என்கவுன்டரை மையமாக வைத்து உருவாகிய இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய படம் ஆகும். போலி கைது, போலீஸ் தாக்குதல், போலி என்கவுன்டர் என இந்த படம் பார்ப்பவர்களை கண்கலங்க வைக்கும்.
கூழாங்கல் ( 2022)
கொட்டுக்காளி படத்தை இயக்கிய பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் உருவாகிய குறும்படம் கூழாங்கல். பல சர்வதேச திரைப்பட விருது விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளை வென்ற இந்த படம் கடந்த 2022ம் ஆண்டு ஆஸ்கருக்காக பரிந்துரைக்கப்பட்ட படம் ஆகும்.
தமிழில் இருந்து இதுவரை 8 திரைப்படங்களும், 1 குறும்படமும் இதுவரை ஆஸ்கருக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.