The Banshees of Inisherin: சிந்திக்க வைத்த அழகான காவியம்... ஆஸ்கர் விருதுக்கு தகுதியானதா பேன்ஷீஸ் ஆஃப் இனிஷீரின்ஸ்?
The Banshees of Inisherin: ஆஸ்கர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பட்டியலில் முக்கிய இடம் பிடித்துள்ள, தி பேன்ஷீஸ் ஆஃப் இன்ஷீரின்ஸ் படம் குறித்த சிறிய அலசல்.
மார்ச் 13அன்று நடைபெறவுள்ள ஆஸ்கர் திரைப்பட திருவிழாவில் விருதுகள் வழங்கப்படவுள்ளது. இதில், தி பேன்ஷீஸ் ஆஃப் இன்ஷீரின்ஸ் என்ற ஐரிஷ்-ஆங்கில திரைப்படம் சிறந்த படம், சிறந்த இயக்கம், சிறந்த இசை உள்ளிட்ட 9 பிரிவில் ஆஸ்கர் விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அப்படி இந்த படத்தில் என்னதான உள்ளது? வாங்க பாப்போம்.
இதுதான் கதை!
அயர்லாந்தில் உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்த காலக்கட்டத்தை(1932) இந்த படத்திற்காக தேர்வு செய்துள்ளனர். அயர்லாந்தில், உள்ள ஒரு தனித்தீவில் தனது தங்கையுடன் வாழ்ந்து வருபவர், பாட்ரிக்(Colin Farrel) இவரது நெருங்கிய நண்பராக இருக்கும் கோல்ம்(Brendan Gleeson) திடீரென்று ஒருநாள் இவருடன் பேசுவதை நிறுத்தி விடுகிறார். பாடரிக், இயல்பாகவே நல்ல மனிதன் என்ற பெயருடன் வாழ்பவர். இதனால் தனது நண்பன் தன்னுடன் பேசாமலிருப்பதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போகிறது. மீண்டும் மீண்டும் கோல்மிடம் சென்று தன்னுடன் பேசுமாறு வற்புறுத்துகிறார். பேசாமல் இருப்பதற்கான காரணத்தையும் கேட்கிறார். இதற்கு பதிலளிக்கும் கோல்ம், தனக்கு இசையுலகில் சாதிக்க வேண்டும் என்ற கனவு இருப்பதாகவும், “இதற்கு என்னிடம் எத்தனை முறை பேச முயற்சிக்கிறாயோ அத்தனை முறை எனது கை விரல்களை வெட்டிக்கொள்வேன்” என்றும் கூறுகிறார்.
சில நாட்கள் நண்பருடன் பேசாமலிருக்கும் பாட்ரிக், ஒரு கட்டத்திற்கு மேல் அவரை மீண்டும் மீண்டும் போய் தொல்லை செய்கிறார். இதனால் தனது ஐந்து கை விரல்களையும் வெட்டி பாட்ரிக்கின் வீட்டு வாசலில் வீசுகிறார் கோல்ம். பாட்ரிக்கின் அன்பிற்குறிய கழுதை ஜெனி, அதில் ஒரு விரலை தெரியாமல் சாப்பிட்டு இறந்து விடுகிறது. இதனால் மனமுடைந்து போகும் பாட்ரிக், கோல்ம்மின் வீட்டிற்கு மறுநாள் 2 மணிக்கு தீ வைப்பதாக கோல்மிடமே கூறிவிட்டு சொன்னபடி தீயும் வைக்கிறார். அவர் தீ வைக்கும் போது, தனது நண்பர் கோல்ம் வீட்டிற்கள் இருப்பதை பார்த்து விட்டு அவரது நாயை மட்டும் தூக்கி செல்கிறார். மறுநாள், கோல்ம் உயிருடன் இருக்கிறார். கடைசியில் இருவரும் சமாதானமாக போவார்களா என என்னும் சமயத்தில் இந்த போர் இன்னும் தொடரும் என்பது போல கடைசியாக கூறிவிட்டு செல்கிறார், பாட்ரிக்.
படம் சொல்ல வருவதுதான் என்ன?
அயர்லாந்தின் உள்நாட்டுப் போரின் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, அதனை பிரதிபலிக்கும் வகையில் இந்த படத்தில் இரண்டு கதாப்பாத்திரங்களை வைத்துள்ளனர். இது பாட்ரிக்-கோல்மிற்கு இடையில் நடக்கப்படும் சண்டையாக பார்க்கப்படுவதை விட, உள்நாட்டு போரில் நடக்கும் விஷயங்களின் உருவகமாகவே பார்க்கப்படுகிறது. நல்ல மனிதராக வளர்ந்து, அனைவருக்கும் நல்லதே நடக்க வேண்டும் என விரும்பும் பாட்ரிக், கடைசியில் தனக்கு நேர்ந்த துயரங்களினால், கசப்பான விஷயங்களை செய்யும் மனிதராக மாறிவிடுகிறார். இவர் மூலமாக, உள்நாட்டு போரில் வலுக்கட்டாயமாக சண்டைக்காக ஈடுபடுத்தப்படும் அப்பாவிகளின் நிலைமையாக பார்க்கப்படுகிறது.
மனதில் நின்ற காட்சிகள்:
காட்சி 1: பாட்ரிக்-கோல்மிற்கு இடையேயான சண்டையால் இருவரும் பேசாமல் இருப்பர். அப்போது ஒரு நாள், சந்தையில் வீணாக ஒரு காவல் அதிகாரியிடம் அடி வாங்கும் பாட்ரிக், தரையில் விழுந்து வலியால் துடிக்க, அவரை கைக்கொடுத்து எழுப்பும் கோல்ம் அவரை மாட்டு வண்டியில் ஏற்றி விட்டு ஒரு வார்த்தை பேசாமல் வண்டியை ஓட்டிக்கொண்டு வருவார். அப்போது தனது நிலைமையை பார்த்து நண்பன் உதவி செய்தான் என ஆனந்தம் கொள்ள முடியாமலும் இவ்வளவு அருகில் இருந்தும் நெருங்கிய நண்பன் தன்னிடம் பேசவில்லையே என்ற மனவலியிலும் கதறி அழுவார் பாட்ரிக். இந்த காட்சி, படம் பார்ப்பவர்களின் கண்களையும் கலங்க வைத்து விடுகிறது.
காட்சி 2: பாட்ரிக்கின் தங்கை ஷெபான் இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாப்பாத்திரம். தனது சகோதரன் முட்டாள் தனமாக எது செய்தாலும் அதை திருத்துவதும், அவருக்கு அறிவுரை கூறுவதையும் வேலையாக வைத்திருப்பார். இவர் மீது அன்பு கொள்ளும் இளைஞனாக வருபவன் டோமினிக். அப்பாவினால் அடித்து துன்புருத்தப்பட்டு மனநலம் குன்றிய நிலையில் இருக்கும் அவன், ஷெபானிடம் தனது விருப்பத்தை தெரிவிக்கும் காட்சி ஒன்று வரும். அப்பாேது ஷெபான், அவரது விருப்பத்திற்கு மறுப்பி தெரிவிப்பார். இதைக் கேட்டு சிரித்துக் கொண்டே நகரும் டோமினிக்கின் முகம், பார்வையாளர்களின் மனதில் அப்படியே நின்று விடுகிறது. இந்த காட்சியையும் டோமினிக்கின் முடிவையும் ஒப்பிட்டு பார்க்கையில், கல் இதயமும் கரைந்து விடும்.
இந்த படம் ஆஸ்கர் விருதிற்கு தகுதியுடையதா?
மார்டின் மெக்டொனாக் என்பவர் இயக்கிய படம்தான், தி பேன்ஷீஸ் ஆஃப் இனிஷிரின். கடந்த ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி வெளியாகிய இப்படத்தை 79ஆவது வின்ஸ் திரைப்பட விழாவில் திரையிட்டனர். அப்போது, படத்தை பார்த்தவர்கள் தொடர்ந்து 15 நிமிடத்திற்கு எழுந்து நின்று கைத்தட்டினார்களாம். நல்ல படத்திற்கு பெருமையே, அது பார்ப்பவர்களின் மனதை ஏற்படுத்தும் தாக்கம்தான். அப்படி பார்த்தால், காண்பவர்களை ஓரிரண்டு நாட்களுக்காவது யோசிக்க வைக்கும் வகையிலான படம்தான், தி பேன்ஷீஸ் ஆஃப் இனிஷிரின். இப்படம், சிறந்த படத்திற்கான விருது பட்டியலில் இடம் பெற்றுள்ளது அதற்கு ஏற்ற தகுதி என்றே கூற வேண்டும்.