ஒல்லிக்குச்சி உடம்புக்காரியா இருக்க ஆசையா? இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க
ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி என்ற பாடல்வரிகள் பிடிக்காத பெண்கள் இருக்க முடியாது. ஏனெனில் பெண்களில் பலருக்கும் ஒல்லிக்குச்சி உடம்பாகத் தான் இருக்க வேண்டும் என்று ஆசை.
ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி என்ற பாடல்வரிகள் பிடிக்காத பெண்கள் இருக்க முடியாது. ஏனெனில் பெண்களில் பலருக்கும் ஒல்லிக்குச்சி உடம்பாகத் தான் இருக்க வேண்டும் என்று ஆசை. அதற்காக சில இளம் பெண்கள் பட்டினி கிடந்து உடலை வாட்டி வதைத்து நோயாளி தோற்றத்து வருவதுண்டு.
ஆனால் அப்படியெல்லாம் நோயாளி ஆகிவிடாமல் உண்மையிலேயே ஆரோக்கியமாக உடல் எடையைக் குறைத்து ஸ்லிம் ப்யூட்டியாக இருக்க ஆலோசனை சொல்கிறார் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் பூஜா மகிஜா. அதற்கு அவர் சொல்வது மூன்று மந்திரங்கள் மட்டுமே. வாருங்கள் அவற்றை விரிவாகப் பார்ப்போம்
பைசா கோபுரம் போல் இருக்கட்டும்:
பூஜா தான் இத்தாலியில் உள்ள பைசா கோபுரத்தின் அருகே எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்து முதல் மந்திரத்தைக் கூறியுள்ளார். பைசா கோபுரத்தின் தோற்றம் பார்த்தால் அடி பாகம் மிகவும் அகலமாகவும் மேலே செல்லச் செல்ல அளவில் குறுகியும் கட்டப்பட்டிருக்கும். அதுபோலத்தான் சூரிய உதயம் தொடங்கி அஸ்தமனத்தின் போது நம் உணவின் அளவு தேய வேண்டும் எனக் கூறுகிறார் பூஜா. இரவில் எளிதாக செரிமானமாகும் வகையில் குறைந்த அளவில் உணவு உண்ண வேண்டும் எனக் கூறுகிறார்.
தண்ணீர் எப்படிக் குடிக்க வேண்டும் தெரியுமா?
உணவு எப்படி முக்கியமோ அதேபோல் தான் தண்ணீர் அருந்துவதும் முக்கியம் எனக் கூறுகிறார் பூஜா. உணவு அருந்திய பின்னர் உடனே தண்ணீரோ இல்லை வேறேதும் பானமோ அருந்தக் கூடாதாம். உணவுக்கு 45 நிமிடங்களுக்கு முன்னரே தண்ணீர் அருந்திவிட வேண்டும். உணவு அருந்தியவுடனேயே நிறைய தண்ணீர் குடித்தால் அது நமது ஜீரணத்தில் பாதிப்பை ஏற்படுத்துமாம்.
இதுதாங்க முக்கியமான மூன்றாவது மந்திரம்:
உணவு உண்பதில் இதுதாங்க மூன்றாவது முக்கியமான மந்திரம் என மூடி மறைக்காமல் பூஜா கூறுவது உணவில் எதை முன்னால் சாப்பிட வேண்டும் என்ற ஆர்டர். அட இப்படி ஒண்ணு இருக்கா என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால் இருக்கு. முதலில் சமைக்காத காய்கறிகள், பின்னர் சமைத்த புரத உணவுகள், அதன் பின்னர் கொழுப்பு நிறைந்த உணவு அதன் பின்னர் கார்போஹைட்ரேட்ஸ் நிறைந்த உணவு கூடவே கொஞ்சம் லெக்யூம்ஸ் மற்றும் லென்டில்ஸ். இந்த வரிசையில் உணவை உண்டால் ஆரோக்கியமும் சேரும் ஸ்லிம் ப்யூட்டியாவாகவும் இருக்கலாம் எனக் கூறுகிறார் பூஜா.
உணவே மருந்து:
உணவே மருந்து. திருமூலர் திருமந்திரம் நமக்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே அருளப்பட்டுள்ளது. காலை உணவை அரசனைப் போலவும், இரவு உணவை ஆண்டியைப் போலவும் உண்ணும்படி நமக்கு அறிவுரைகள் இருக்கின்றன. உண்ட பின்னர் குளிக்கக் கூடாது. உண்ட மயக்கத்தில் உறங்கக் கூடாது என்ற பண்புகளை நம் வீட்டுப் பெரியவர்கள் சிறு வயதிலிருந்தே சொல்லிக் கொடுத்திருப்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் எந்த ஒரு அறிவுரையாக இருந்தாலும் அனுபவஸ்தர்கள் சொல்வதை விட நிபுணர்கள் சொல்வதையே இளம் தலைமுறை நம்புகிறது. அதனாலேயே எல்லாவற்றிற்கும் நிபுணர்கள் வந்துவிட்டனர். நீங்கள் பாட்டி சொல்வதை கேட்பீர்களோ அல்லது பூஜா சொல்வதை கேட்பீர்களோ அது உங்கள் சாய்ஸ். ஆனால் பசியறிந்து உண்ணுங்கள். பகுத்தறிந்து உண்ணுங்கள்.