Nitish veera death ''நிதிஷ் இறப்புனால என்னோட தன்னம்பிக்கை போயிருச்சு!" - லிங்கேஷ்
Nitish veera death : முன்னாடில சிலர் தேவைக்காக போன் பண்ணுவாங்க. ஆனா, இப்போ அன்புக்கு போன் பண்ணுறாங்க. 'மச்சான், பார்த்து பத்திரமா இரு' ன்னு சொல்லிட்டு போறாங்க. அன்பு ஒன்றுதான் நிரந்தரம். எல்லாரும் பார்த்து பத்திரமா இருங்க என்றார் லிங்கேஷ்
'புதுப்பேட்டை' காலா' 'அசுரன்' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகர் நிதிஷ் வீரா. கொரோனா தொற்று காரணமாக நிதிஷ் இன்று மரணமடைந்தார். நிதிஷ் குறித்து நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் 'கபாலி' 'பரியேறும் பெருமாள்' முதலிய படங்களில் நடித்த நடிகர் லிங்கேஷ்.
என்னோட முதல் படத்துல நடிச்சப்போ நிதிஷ் வந்திருந்தார். முக்கியமான கேரக்டர்ல நடிச்சார். இவருடைய நடிப்பை பார்த்து ரசிச்சு கை தட்டினேன். நடிப்போட வேகம், தாகமெல்லாம் இவருடைய நடிப்பில் இருந்தது. 'செமயா நடிக்குறீங்க ப்ரதர்'னு சொன்னேன். 'கூத்துப்பட்டறையில் இருந்து வந்திருக்கேன்னு' சொன்னார். இவருடைய நடிப்பை கூத்துப்பட்டறையில் பார்த்திருக்கேன்.
நல்ல நண்பர்களா பேசிக்கிட்டோம். ரொம்ப பாசிட்டிவான நபர். இவரை பார்த்தா சினிமால நம்ம இருக்கணும்னு தோணும். எப்போதும் சினிமா பற்றி பேசிக்கிட்டே இருப்பார். எல்லோர் மாதிரியும் நடித்து காட்டுவார். ஒரு மணி நேரம் என்கிட்ட பேசுனா என்ன மாதிரியே இமிட்டேட் பண்ணி காட்டுவார். இவரைப் பார்க்க ஷாக்கா இருக்கும். வெறித்தனமான ஆர்டிஸ்ட் நிதிஷ் என வியந்தார்.
மேலும் பேசிய லிங்கேஷ் “இவருடைய இறப்பு செய்தி பார்த்துட்டு ரொம்ப கஷ்டமாயிருச்சு. எனக்குள்ள இருந்த தன்னம்பிக்கையே போயிருச்சு. ஏன்னா, இவரைப் பார்த்துதான் சினிமால இன்ஸ்பிரேஷன் ஆகியிருக்கேன். நிதிஷ்லாம் பார்க்குறப்போ நம்ம எதுவுமே இன்னும் சினிமால பண்ணல. என்னமா வெறித்தனமா நடிக்குறாங்க, பேசுறாங்கனு இருக்கும். பேச்சும், மூச்சு எல்லாமே சினிமா மட்டுமே இருக்கும். ரொம்ப அர்ப்பணிப்புடன் சினிமால இருக்குறவர் நிதிஷ்” என்றார்.
ஒரு வருஷத்துக்கு முன்னாடி ரஞ்சித் சார் நிகழ்வில் பார்த்து பேசுனேன். கட்டி புடிச்சிட்டு, 'எப்படி மச்சி' இருக்கனு பேசிக்கிட்டு இருந்தோம். ஒரு மாதிரியான திமிருத்தனமான சிரிப்பு நிதிஷ்கிட்ட இருக்கும். உடம்பு முழுக்க தான் நடிகன் என்னும் திமிருடன் இருப்பார். நிதிஷ் கூட சேர்ந்து நடிக்கணும்னு ஆசை இருந்தது. சமீபத்தில் இறந்த விவேக், கே.வி.ஆனந்த சார் கூட எல்லாம் ஒன்னா வேலை பார்க்கணும்னு நினைச்சிட்டு இருந்தேன். இதெல்லாம் இப்போ உடைஞ்சிருச்சு. இவங்களும் இல்லமா என்ன பண்ண போறோம்ங்குற பயத்தை ஏற்படுத்திருச்சு. கொஞ்சம் விரக்தியா இருக்கேன். நிதிஷ் இறப்பு கண் கலங்க வெச்சிருச்சு.
சினிமா பார்க்குறப்போ பெருசா இருக்குற மாதிரி தெரியும். ஆனா, ரொம்ப சின்ன வட்டம். ரொம்ப க்ளோஸா சிலர்கிட்ட இல்லாம இருந்தாலும் அவங்க ஒரு நாள் இல்லனு தெரிய வர்றப்போ ரொம்ப வருத்தமா இருக்கு. ஏன்னா, நான் பார்த்த போராட்டத்தை இவங்களும் பார்த்துட்டு வந்திருப்பாங்க. இல்ல, நான் அவங்களோட வலியை கடந்து வந்திருப்பேன். ரொம்ப கஷ்டப்பட்டு சினிமாக்குள்ள வந்திருப்பானே, எதையும் சேர்த்து வைக்கமா போயிட்டானேனு வருத்தமா இருக்கு. முக்கியமா, நிதிஷ் இறப்பு பிறகு இவருடைய குடும்பம் என்ன ஆக போகுதுங்குற எண்ணம் ரொம்ப மனசை பாரமாக்குது. குழந்தைகள் என்ன ஆகப் போறாங்கனு வருத்தமா இருக்கு. ஆறுதலுக்கு என்ன பண்ணுவாங்கனு வருத்தமா இருக்கு. உடம்பு சரியில்லாம போனாகூட சீக்கிரம் சரியாகி வந்திருவாங்கனு இருப்போம். ஆனா, மரணத்தை எப்படி ஏத்துக்க. எவனோ எங்கேயோ கொடுக்குற நோய்க்கு தண்டனையெல்லாம் நம்ம பிள்ளை குட்டிக்கு கிடைக்குறப்போ வலியை தாண்டு வேதனை மனசுகுள்ள இருக்கு.
முன்னாடில சிலர் தேவைக்காக போன் பண்ணுவாங்க. ஆனா, இப்போ அன்புக்கு போன் பண்ணுறாங்க. 'மச்சான், பார்த்து பத்திரமா இரு' ன்னு சொல்லிட்டு போறாங்க. அன்பு ஒன்றுதான் நிரந்தரம். எல்லாரும் பார்த்து பத்திரமா இருங்கனு'' முடித்தார் நடிகர் லிங்கேஷ்.