Nanguneri Shocker : சாதி பெருமை உடை.. சாதி அடையாள கயிறு.. சாதியை ஒழிக்க ஒன்றிணைவோம்.. இயக்குநர் பா.ரஞ்சித் ஆவேசம்
நாங்குநேரி சம்பவம் குறித்து இயக்குநர் பா. ரஞ்சித், ‘சாதியை ஒழிக்க ஒன்றிணைவோம்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
திருநெல்வேலியை அடுத்த நாங்குநேரியில் பிளஸ் 2 மாணவர் மற்றும் அவரது தங்கையை சாதிவெறி காரணமாக அரிவாளால் வெட்டிய சம்பவம் கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாட்டையே உலுக்கி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பிளஸ் 2 மாணவர்கள் உள்பட 7 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக நேற்று முதல் ஆளாக இசைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாசம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆதங்கமாக ‘சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும்’ என்ற சட்டமேதை அம்பேத்கர் வரிகளை பதிவிட்டிருந்தார்.
தம்பி சின்னத்துரை விரைவில் குணமடைய வேண்டுகிறேன்🙏 சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும்
— G.V.Prakash Kumar (@gvprakash) August 11, 2023
இந்தநிலையில், தற்போது நாங்குநேரி சம்பவம் குறித்து இயக்குநர் பா. ரஞ்சித், ‘சாதியை ஒழிக்க ஒன்றிணைவோம்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில், “சாதி என்பது அழகிய சொல்! குடி பெருமை கொள்ளுவோம்! சாதி வாரி வேட்பாளர்களை களம் இறக்கி தேர்தல் வெற்றி பெருவது! சாதி எதிர்ப்பையும் சாதி ஆதரவையும் ஒன்றாக பார்ப்பது! நாங்கள் ஆண்ட பரம்பரை என பெருமை பேசுவது! சாதி பெருமை உடை! சாதி அடையாள கயிறு! சாதி மறுப்பு காதலுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம்! என தமிழ்நாட்டில் இருக்கும் தீவிர சாதி பற்றின் காரணமாக, பட்டியலின மக்கள் மீது வெறுப்பை வளர்த்தெடுத்ததின் விளைவாகவே “நாங்கு நேரியில் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சக மாணவன் மீது சாதி வன்மம் கொண்டு இத்தகைய கொடூர தாக்குதலை நிகழ்த்தி இருக்கிறார்கள்.
சாதி என்பது அழகிய சொல்! குடி பெருமை கொள்ளுவோம்! சாதி வாரி வேட்பாளர்களை களம் இறக்கி தேர்தல் வெற்றி பெருவது! சாதி எதிர்ப்பையும் சாதி ஆதரவையும் ஒன்றாக பார்ப்பது! நாங்கள் ஆண்ட பரம்பரை என பெருமை பேசுவது! சாதி பெருமை உடை! சாதி அடையாள கயிறு! சாதி மறுப்பு காதலுக்கு எதிரான வெறுப்பு…
— pa.ranjith (@beemji) August 11, 2023
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நமக்கு தெரிந்தவரை ஐந்துக்கும் மேற்பட்ட பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தமிழ்நாட்டில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் சாதி உணர்வு என்பது எப்படி பட்டியலின மக்களுக்கு எதிரான வெறுப்பாக வளர்த்தெடுக்கபட்டு இருக்கிறது என்கிற உண்மை நிலவரத்தை இப்போதாவது சரியாக புரிந்துகொண்டு, இத்தகைய சாதி வன்கொடுமைகளுக்கு எதிராக திமுக அரசும், தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும், இயக்கங்களும், மக்களும் இணைந்து , அடுத்த தலைமுறையையும் விழுங்கி கொண்டிருக்கும் சாதியை ஒழிக்க ஒன்றிணைவோம்!” என பதிவிட்டுள்ளார்.