ஜிகர்தண்டா தூத் ஞாபகம் இருக்கா? வடிவேலு கூட நானும் எண்ட்ரி கொடுக்குறேன்.. ஆனந்த் பாபு சீக்ரெட்ஸ்
அந்த லாங் ஷாட்ல நடந்து வந்துகிட்டே இருப்போம், படியேறி வந்ததும் 'இப்போகூட எனக்கு படியேறி வர்ற மாதிரியே இருக்கு' ன்னு சொல்லி காலை தூக்கி வச்சுருப்பாரு, தெரியாம அவர பாத்துட்டேன்…
தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் ஆனந்த்பாபு. இவர் பழம்பெரும் நடிகர் நாகேஷின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனந்த்பாபு நடிகர் மட்டுமில்லாமல் நன்றாக நடனம் ஆடும் திறனும் கொண்டவர். இவர் 1983 முதல் 1999ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பல திரைப்படங்களில் முன்னணி நடிகராக நடித்து பிரபலமானவர். பின்பு இவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கி உடன் பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
கடந்த வருடம் டிசம்பரில் வெளியான ஆத்ரங்கி ரே திரைப்படத்தில் இவர் தனுஷின் அப்பாவாக நடித்திருந்தார் மற்றும் சின்னத்திரையில் ஒளிபரப்பான மௌனராகம் தொடரில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது தந்தை நாகேஷிற்கு கிடைத்த பெயர் புகழில் கால்பங்கு கூட ஆன்ந்த் பாபுவிற்கு கிடைக்கவில்லை. பல படங்களில் துணை நடிகராகவே நடித்துள்ளார். குடிக்கு அடிமையாகும் அளவிற்கு ஆனந்த் பாபு குடித்தே அவரின் வாழ்க்கையை தொலைத்து விட்டார் என்று கூறுவார்கள்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், "சினிமாவில் நாகேஷ் சார் பையன் என்னம்மா டான்ஸ் ஆடுறாரு என்ற பெயரை நான் அப்பாவுக்கு வாங்கி கொடுத்ததில் ரொம்ப சந்தோசம். அதோடு அவர் பெயரை நான் கெடுக்கவில்லை. விஜய் தம்பி நடிப்பில் விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த பூவே உனக்காக படத்தில் முரளி நடித்த ரோலில் முதலில் நான்தான் நடிக்க வேண்டியது. எனக்கு அப்ப மனதில் ஒரு வருத்தம் இருந்ததால் அந்த படத்தில் நான் நடிக்கவில்லை. அந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் கொடுத்திருக்கலாம். ஆனால், கெஸ்ட் அப்பியரன்ஸ் கொடுத்தது எனக்கு கஷ்டமாக இருந்தது. அதோடு அப்போது நான் சூப்பர் குட் பிலிம்ஸ்க்கும் செல்லப்பிள்ளை, விக்ரமன் சாருக்கும் செல்லப்பிள்ளை. அப்படி இருந்தும் எனக்கு கெஸ்ட் ரோலில் நடிப்பது கொஞ்சம் வருத்தமாக இருந்தது. இருந்தாலும் அந்த படம் பண்ணி இருக்கலாம். நான்தான் திமிரில் செய்யாமல் விட்டேன்", என்றார்.
வடிவேலு குறித்து பேசுகையில், "ஆதவன் படத்தில் கே.எஸ், வடிவேலுவை கடத்தும் காட்சியை எப்படி வைக்கலாம் என்று யோசித்தபோது, கல்கத்தாவில் ஜிகர்தண்டா தூத் குறித்து கேள்விப்பட்டோம். அப்போது அந்த ஸீன் எடுக்கையில், கண்டின்யுட்டிக்காக அடுத்த அடுத்த க்ளாஸ் குடிக்கும்போது வாய் மீது வெள்ளையாக பூசிக்கொள்வார். அதனாலேயே நான் அவரை பார்க்கவே மாட்டேன், அவரை பார்க்காமல் பின்னால் பார்த்து பேசிக்கொண்டிருப்பேன். அந்த மங்கிய பாத்தா சிரிக்க வச்சுரும்…
அந்த லாங் ஷாட்ல நடந்து வந்துகிட்டே இருப்போம், படியேறி வந்ததும் 'இப்போகூட எனக்கு படியேறி வர்ற மாதிரியே இருக்கு' ன்னு சொல்லி காலை தூக்கி வச்சுருப்பாரு, தெரியாம அவர பாத்துட்டேன்… அத பாத்துட்டு உடனே சிரிச்சிட்டேன். கே.எஸ். அங்கிருந்து கத்துறார் 'கெடுத்துட்டியேடா பாபு'ன்னு. எனக்கும் கார்த்திக்கும் அந்த கெட்ட பழக்கம் இருக்கு ஷாட்ல சிரிச்சிடுவோம். நானும் இப்ப படங்களில் காமெடி ரோலில் நடிக்க முடிவு செய்து இருக்கிறேன். வடிவேலு சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் போது நானும் என்ட்ரி ஆகலாம் என்று இருக்கிறேன்" என்று பகிர்ந்து கொண்டார்.