OTT Tamil Movies List: விடுதலை முதல் யாத்திசை வரை: அவசியம் ஓடிடியில் தவறவிடக்கூடாத 2023 மூவிஸ்
2023ல் வெளியான படங்களில் ஒரு சில படங்கள் பார்வையாளர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. நிச்சயமான ஓடிடியில் தவறவிட கூடாத சில படங்களின் பட்டியல் இதோ
சமீப காலமாக தமிழ் சினிமாவின் வளர்ச்சி அபரிதமாக உயர்ந்துள்ளது. சர்வதேச அளவில் பேசப்படும் அளவுக்கு அதன் தரத்தை மேலும் மேலும் உயர்த்தி வெற்றியை நிரூபித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் தவறவிடக்கூடாத சில முக்கியமான படங்கள் பற்றி பார்க்கலாம். திரையரங்கில் வெளியான பிறகு ஓடிடியில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டுள்ள படங்கள் மட்டுமே இந்த வரிசையில் இடம் பெற்றுள்ளன.
தமிழ் சினிமாவின் பொக்கிஷமாக கருதப்படும் இயக்குனர் மணிரத்னம் தனது ஒவ்வொரு படத்திலும் ஏதாவது புதிய முயற்சிகளை மேற்கொள்ள தயங்காதவர். அந்த வகையில் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலை அதே பெயரில் வரலாற்று திரைப்படமாக அதிலும் இன்றைய கலகத்துக்குகேற்ப வடிவமைத்து இரண்டு பாகங்களாக வெளியிட்டு தனது பல ஆண்டு கனவை நிறைவேற்றிக்கொண்டார். மாபெரும் திரை பட்டாளம் நடித்த இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார் ஏ.ஆர். ரஹ்மான். நடிகர்களின் தனித்துமான நடிப்பு, ரவிவர்மாவின் ஒளிப்பதிவு, ரஹ்மானின் இசை என அனைத்தின் கலவையாக ஒரு அழகான தனித்துமான உலகை உருவாக்கியிருந்தார். பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் கடந்த ஜூன் 28ம் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வெளியானது
விடுதலை :
இன்றைய தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான விரும்பப்படும் தேசிய விருது பெற்ற இயக்குநரான வெற்றிமாறன் ஒரு அழுத்தமான கதையை மக்களுக்கு படைத்தது பாராட்டுக்களை குவித்தார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் மட்டுமே வெளியாகியுள்ளது. படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை அப்படியே கட்டிப்போட்ட ஒரு அழுத்தமான கதை. நகைச்சுவை நடிகராக பிரபலமான நடிகர் சூரியை ஒரு கதாநாயகனாக அரிதாரம் சூட்டிய படம். அவரும் தனக்கு கொடுக்கப்பட்டு இருந்த குமரேசன் என்ற கனமான கதாபாத்திரத்தில் வெகு சிறப்பாக நடித்திருந்தார். விடுதலை முதல் பாகம் ஜீ 5 ஓடிடி தளத்தில் கடந்த ஏப்ரல் 28ம் தேதி வெளியானது.
குட் நைட் :
மிகவும் திறமையான நடிகர்களில் ஒருவரான கே. மணிகண்டன் நடிப்பில் மிகவும் உணர்ச்சிகரமான படத்தை எதார்த்தமாக வெளிக்காட்டிய ஒரு படம் குட் நைட். ஒரு குடும்பமாக பார்க்க கூடிய இப்படத்தின் திரைக்கதையை மிகவும் ஸ்வாரஸ்யமாக நகர்த்தி வெற்றியை சுவைத்துள்ளார் இயக்குனர் விநாயக் சந்திரசேகரன். குட் நைட் இப்போது டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் ஜூலை 3ம் தேதி முதல் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டுள்ளது.
டாடா :
ஒரு உணர்ச்சிகரமான திரைக்கதையை கருப்பொருளாக கொண்டு வெளியான டாடா திரைப்படம் அடிப்படை வாழ்க்கையை அப்படியே பிரதிபலித்து. கவின் மற்றும் அபர்ணா தாஸ் நடிப்பு சிறப்பாக அமைந்து இருந்தது. மேலும் படத்திற்கு பக்கபலமாய் அமைந்தது ஜென் மார்ட்டின் ஒளிப்பதிவு. டாடா திரைப்படம் கடந்த மார்ச் 10ம் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது.
அயோத்தி :
ஆர். மாதிரி மூர்த்தியின் இயக்கத்தில் மிகவும் வலுவான ஒரு திரைக்கதை கொண்ட ஒரு படம். படத்தை பார்க்கும் பார்வையாளர்கள் ஒவ்வொருவரும் கதாபாத்திரங்களுடன் சேர்ந்தே பயணிக்கிறோம் என்ற உணர்வை கொடுத்தது. படம் பார்த்த ஒரு சில நாட்களுக்கு அதன் தாக்கம் ஊடுருவி இருந்தது என்பது அந்த திரைக்கதையின் தனி சிறப்பு. ஒரு சில குறைபாடுகள் படத்தில் இருந்த போதும் நிச்சயமாக பார்வையாளர்களின் கவனம் பெற்றது. அயோத்தி திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் ஏப்ரல் 7ம் தேதி முதல் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு வருகிறது.
யாத்திசை:
பொன்னியின் செல்வன் போன்ற வரலாற்று படங்களின் வரிசையில் வந்த ஒரு படம் யாத்திசை. இப்படமும் ஒரு நல்ல திரைக்கதை கொண்ட ஒரு படமாக வெற்றி பெற்றாலும், திரை ரசிகர்கள் மத்தியில் பொன்னியின் செல்வன் படத்துக்கு கிடைத்த வரவேற்பு இப்படத்திற்கு கிடைக்கவில்லை. பிரபலமான ஸ்டார் நடிகர்கள், பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவானால் மட்டுமே வரலாற்று படங்கள் வெற்றி பெரும் என்ற கண்ணோட்டத்தை உடைத்தெறிந்த படம். யாத்திசை திரைப்படம் மே 12ம் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது.
இது தவிர மாமன்னன், போர் தொழில், மாவீரன் போன்ற பல படங்கள் சிறப்பான படைப்புகளாக இருந்தாலும் இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக திரையிடப்பட்டு வருவதால் இந்த ஓடிடி பட்டியலில் இடம் பெறவில்லை.