A R Rahman : ரொம்ப வயசான மாதிரி ஃபீல் ஆகிடுச்சு..மனைவி சாய்ராவை முதல்முறை சந்தித்தது குறித்து ரஹ்மான்
"கூட்டு குடும்பமாக வாழ்ந்ததால் எல்லா அம்மாக்களைப் போல் என் அம்மாவும் பொஸசிவ் ஆகத் தொடங்கினார். கொஞ்ச காலத்திற்கு அட்ஜஸ்ட் செய்ய வேண்டியதாக இருந்தது." - ரஹ்மான்
ஏ.ஆர் ரஹ்மான் சாய்ரா விவாகரத்து
ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பின் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் மற்றும் அவரது மனைவி சாய்ரா விவாகரத்து செய்துகொள்ள இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்கள். இந்த அறிவிப்பு ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. " உறவில் ஏற்பட்ட கணிசமான மன உளைச்சலுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பு இருந்தபோதிலும், பிரிவது என தம்பதியினர் முடிவு செய்துள்ளனர். பதட்டங்கள் மற்றும் சிரமங்கள் அவர்களுக்கிடையில் தீர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கியுள்ளன. வலி மற்றும் வேதனையால் தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக திருமதி சாய்ரா தரப்பு வழக்கறிஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குரிப்பிடப்பட்டுள்ளது.
சாய்ராவை முதல் முறை சந்தித்தது குறித்து ஏ.ஆர் ரஹ்மான்
தனது மனைவி சாய்ரா குறித்து ஏ.ஆர் ரஹ்மான் பல இடங்களில் உணர்வுப்பூர்வமாக பேசியுள்ளார். திருமணத்திற்கு முன் சாய்ராவை முதல் முறையாக பார்த்தது குறித்து ரஹ்மான் நேர்காணல் ஒன்றில் இப்படி கூறியுள்ளார் " 1994 ஆம் ஆண்டு என்னுடைய 27 ஆவது வயதில் நான் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தேன். ஏதோ சில காரணங்களால் எனக்கு வயதாகிவிட்டதாக நான் உணர்ந்தேன். பொதுவாகவே நான் ரொம்ப கூச்சசுபாவம் கொண்டவனாகவும் பெண்களுடன் அதிகம் பேசாதவனாகவும் இருந்தேன். என்னுடைய ஸ்டுடியோவிற்கு நிறைய பெண்கள் பாட வந்திருக்கிறார்கள். அவர்கள் மேல் எனக்கு பெரிய மரியாதை இருந்திருக்கிறது. ஆனால் திருமணம் செய்துகொள்ளும் எண்ணத்தில் அவர்களை நான் பார்த்ததில்லை. எனக்கு அதற்கு எல்லாம் நேரமேயில்லை.
என அம்மா மற்றும் தங்கை ஃபாதிமாவும் தான் சாய்ராவை சென்னையில் ஒரு மசூதியில் வைத்து பார்த்தார்கள். சாய்ராவின் குடும்பத்தைப் பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது ஆனால் மசூதியில் இருந்து சாய்ராவின் வீடு பக்கத்தில் இருந்ததால் அவர்கள் அவள் வீட்டிற்கு சென்று பேசினார்கள். எல்லாமே ரொம்ப ஈஸியாக நடந்தது . என்னுடைய 28 ஆவது பிறந்தநாளில் நான் சாய்ராவை முதல் முறையாக சந்தித்தேன். அது ஒரு சின்ன சந்திப்பு. அதற்கு பின் நாங்கள் ஃபோனில் தான் அதிகம் பேசினோம். என்னை திருமணம் செய்துகொள்ள விருப்பமா என்று நான் கேட்டேன். அப்போதெல்லாம் சாய்ரா ரொம்ப அமைதியாக இருப்பார். இப்போது அப்படியில்லை. 1995 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி எங்களுக்கு சென்னையில் திருமணம் நடந்தது. அன்று முழுவதும் என் முகத்தில் சிரிப்பை கஷ்டப்பட்டு வரவழைத்துக் கொண்டேன். 3 மணி நேர நிகழ்விற்கு பின் என் முகமெல்லாம் வலித்தது.
நாங்கள் தென் இந்தியர்கள். ஆனால் சாய்ரா குஜராத்தை பூர்வீகமாக கொண்டவர். அவர் வட இந்திய கலாச்சாரத்தைப் பின்பற்றி வளர்க்கப்பட்டவர். புதிதாக ஒருவர் குடும்பத்திற்குள் வரும்போது எந்த ஒரு குடும்பத்திற்கும் அது சவாலானது தான். கூட்டு குடும்பமாக வாழ்ந்ததால் எல்லா அம்மாக்களைப் போல் என் அம்மாவும் பொஸசிவ் ஆகத் தொடங்கினார். கொஞ்ச காலத்திற்கு அட்ஜஸ்ட் செய்ய வேண்டியதாக இருந்தது. பின் என் மூத்த மகள் கதிஜா பிறந்த பின் எல்லாம் சுமுகமாகிவிட்டது" என ரஹ்மான் தெரிவித்துள்ளார்