(Source: ECI/ABP News/ABP Majha)
’அறுவை சிகிச்சை என்ற பெயரில் டாக்டரை கொத்துக்கறி போட்ட இயக்குநர்’ கிட்னி பத்திரம் மக்களே..!
படத்தில் வரும் சீன்கள் சிரிப்பை தானாக வர வைக்க வேண்டும். ஆனால், டாக்டர் படத்திலோ காட்சிகள் வந்துவிட்டதே என்பதற்காக சிரிக்க வேண்டியிருக்கிறது.
அதரபழசான மனித கடத்தல் கான்செப்ட், ‘உன் பேரு என்ன என்று கேட்டால், ம்ம்ம் மோரு’ என பள்ளிக்கூட பிள்ளைகள் சொல்லுமே அந்த வகை அறுவை காமெடிகள் என வெளியாகியிருக்கிறது இயக்குநர் நெல்சனின் ‘டாக்டர்’ திரைப்படம்.
கோலமாவு கோகிலா- படத்திலாவது ‘அட’ என நம்மை நிமிர்ந்து பார்க்க வைக்கும் காட்சிகளை வைத்த இயக்குநர் நெல்சன், இந்த படத்தில் ஏனோ அதை கூட செய்யவில்லை. ஆனால், படம் வெளியானது முதல் ’ஆஹா, ஓஹோ’ என சமூக வலைதளங்களில் பதிவிட்ட சிவகார்த்திகேயனின் ரசிகர்களால், படம் வேற லெவல் என நினைத்து, அந்த பதிவுகளில் உந்தி தள்ளப்பட்டு, திரையரங்கிற்கு சென்று, முட்டிமோதி டிக்கெட் வாங்கிச் சென்ற மக்கள் எல்லாம், கொடுத்த காசுக்கு கொஞ்சமாவது சிரித்துவிட்டுபோவோம் என்று திக்கித் திணறுவதை பார்க்க பாவமாகதான் இருந்தது.
‘கொடுத்த காசுக்கு மேல கூவுறாண்டா கொய்யா’ என்பதுபோல் அந்த அறுவை காமெடிகளுக்கும் அனாமத்து சீன்களுக்கும் கைத்தட்டல் எழுவதையெல்லாம் நினைத்தால், நல்ல படங்களுக்கு மக்கள் மத்தியில் ஏற்பட்ட வறட்சி பட்டவர்தனமாக தெரிகிறது.
சமீபத்தில், திரையரங்குகளில் வெளியான படங்களில் ’இது கொஞ்சம் பெட்டர்’ என்று தங்கள் மனதை ஆற்றிக்கொள்ளும் விதமாகவே கஷ்டப்பட்டு சிரித்து, தட்டலாமா வேண்டாமா என பல இடங்களில் யோசித்து, கடைசியில் தட்டித் தொலைவோம் என கைத்தட்டிவிட்டு போன ரசிகர்களால் இந்த படம் வெற்றி என குறிப்பெழுதப்பட்டுள்ளது.
இது ஒரு டார்க் காமெடி வகை படம். இதுபோன்ற படங்களில் காமெடிகள் எல்லாம் இப்படிதான் இருக்கும் என்று ஒரு தரப்பு சொல்கிறார்கள். அது, டார்க் காமெடியோ, வொயிட் காமெடியோ எதுவாக இருந்தாலும், படத்தில் வரும் சீன்கள் சிரிப்பை தானாக வர வைக்க வேண்டும். ஆனால், டாக்டர் படத்திலோ காட்சிகள் வந்துவிட்டதே என்பதற்காக சிரிக்க வேண்டியிருக்கிறது.
ஒரு படத்தில் லாஜிக் இடிக்கலாம். ஆனால், லாஜிக் இடிக்க வேண்டும் என்பதற்காகவே படம் எடுக்கக் கூடாது. இந்த படத்தில் லாஜிக்காவது, மேஜிக்காவது என அனைத்தையும் அடித்து துவைத்து கயிற்றில் தோரணம் கட்டித் தொங்கப்போட்டிருக்கிறார் இயக்குநர் நெல்சன்.
எதோ புதிதாக செய்கிறோம், புரட்டிப்போடுகிறோம் என்று நினைத்து படத்தையே கொத்துக்கறி போட்டுவைத்திருக்கிறார். அந்த கொத்துக்கறிக்கு சால்னா ஊற்றி காலையில் இருந்து சமூக வலைதளங்களில் செய்த அலப்பறைகள் எல்லாம் நிச்சயம் அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டியவை.
டாக்டரை பார்த்துவிட்டு, அடுத்து இதே இயக்குநர் நெல்சனின் இயக்கத்தில் வெளியாகப்போகும் ’பீஸ்ட் படத்தையும் பார்க்க வேண்டுமே என்பதை நினைக்கும்போது, விஜயை இந்த மனுஷன் என்ன பண்ணி வச்சுருக்காரோ என்ற பீதி மனதில் எழுவதை தவிர்க்க முடியவில்லை.
மொத்தத்தில் ‘பெட்டர்மாஸ் லைட்டேதான் வேண்டும்’ என்பவர்கள் டாக்டரை போய் தாராளமாக பார்க்கலாம். ஆனால், படம் முடிந்து வெளியில் வரும்போது கிட்னி எடுத்தது யோகி பாபுவுக்கா இல்லை நமக்கா என்பது தெள்ளத் தெளிவாகிவிடும்.