புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு விமானப் பயணம்: குக் வித் கோமாளி மேடையில் சொன்னதை செய்த மைம் கோபி
Mime Gopi : புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை வான் உலா என்ற பெயரில் முதன் முறையாக விமானத்தில் பெங்களூரு வரை அழைத்துச் சென்று அவர்களை மனதளவில் உற்சாகப்படுத்தி உள்ளார் மைம் கோபி.
சினிமாவிலும் சீரியல்களிலும் நடித்ததன் மூலம் பரிச்சயமானவர் நடிகர் மைம் கோபி. 2008ம் ஆண்டு வெளியான 'கண்ணும் கண்ணும்' படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானாலும் அவருக்கு பிரபலத்தைத் தேடி கொடுத்த திரைப்படம் என்றால், அது கார்த்தியின் நடிப்பில் 2014ஆம் ஆண்டு வெளியான 'மெட்ராஸ்' திரைப்படம் தான். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சி மிக பெரிய பப்ளிசிட்டியை பெற்று கொடுத்தது. அவரின் புதுவகையான சமையலை பார்த்து நடுவர்கள் கூட அசந்து போனார்கள். முதல் முறையாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக பட்டம் வென்ற ஆண்மகன் என்ற பெருமையை மைம் கோபி பெற்றார். அதில் அவருக்கு பரிசுத் தொகையாக கிடைத்த 5 லட்சம் ரூபாயை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலவு செய்யப்போவதாக அந்த மேடையிலேயே தெரிவித்து இருந்தார்.
அந்த வகையில் அவர் சொன்னது போலவே புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை வான் உலா என்ற பெயரில் முதன் முறையாக விமானத்தில் பெங்களூரு வரை அழைத்து சென்று அங்கே நட்சத்திர விடுதி ஒன்றில் தங்க வைத்து அவர்களை மனதளவில் உற்சாகப்படுத்தி உள்ளார். இது குறித்து அவர் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில் “இது என்னுடைய கடமை. என்னுடைய குழந்தைகளை, தம்பிகளை நான் அழைத்து செல்வதை உதவி செய்கிறேன் என சொல்ல முடியுமா? அதை போல தான் இவர்களை நான் அழைத்து செல்வதை என்னுடைய கடமையாக நினைக்கிறேன்.
அவர்கள் மீடியாவில் தெரிவார்கள் அதை அவர்கள் பார்க்கும் போது நான் டிவியில வரேன் என சந்தோஷப்படுவார்கள். எனக்கெல்லாம் விமானத்தில் ஏறவே 30 ஆண்டுகள் ஆனது. அண்ணாந்து பார்த்து வியந்துள்ளேன். இந்தக் குழந்தைகளுக்கு எப்போ இந்த வாய்ப்பு கிடைக்கும். வசதி படைத்தவர்களுக்கு இது மிகவும் எளிமையாக கிடைத்து விடும். ஆனால் இந்தக் குழந்தைகள் அந்தப் பணம் இருந்தால் அது வீட்டு செலவுக்கு உதவுமே, படிப்புக்கு உதவுமே என அதை அனுபவிக்க முடியாது.
இறக்கும் நாள் தெரிந்து விட்டால் வாழ்க்கை அவ்வளவு தான். வாழும் ஒவ்வொரு நாளுமே நரகம் தான் இருக்கும். வாழவே பிடிக்காது. அவர்கள் இருக்கும் வரை சந்தோஷமாக இருந்துவிட்டு போகட்டுமே. வாழ்க்கை ஒரு முறை தான் அதை சந்தோஷமாக வாழ்ந்து விட்டு போகலாமே. இதை நான் மட்டும் செய்யவில்லை. எனக்குப் பின்னால் பலர் இருக்கிறார்கள்.
அவர்களின் பிரதிநிதியாக தான் நான் உங்கள் முன்னால் நிற்கிறேன். இதற்கு பெரிதாக ஒன்றும் செலவாகி விட போறது கிடையாது. மனசு தான் முக்கியம். எதற்காக இதை செய்கிறோம் என்றால், அந்தக் குழந்தை சந்தோஷமாக சிறக்க வேண்டும் என்பதற்காக தான். வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்பார்கள். இந்த ஆயுள் கூடி நோய் அவர்களை விட்டுப் போக வேண்டும் என்பதற்காக தான் இந்த உலாவே. இது வெறும் துவக்கம் தான்.
இன்னும் நிறைய செய்ய வேண்டும் என திட்டமிட்டுள்ளோம். வாய்பேச, காதுகேளாத குழந்தைகள், கண் தெரியாத குழந்தைகள் என அவர்களையும் விமானத்தில் அழைத்து செல்ல ஏற்பாடுகள் செய்துள்ளோம். அதே போல இந்த குழந்தைகள் படிக்க வேண்டும் என்பதற்காக மருத்துவமனை உள்ளேயே நூலகம் வைக்க ஏற்பாடுகளை செய்து வருகிறோம்” எனப் பேசி உள்ளார் மைம் கோபி.